23 மே, 2011

எதிர்பாரா வாழ்த்து

எதிர்பாரா வாழ்த்து
--------------------------------------------------------------------------------அன்று என் பிறந்த நாள். காலை கண்விழித்தவுடன் கணவரின் வாழ்த்து. வழக்கம் போல் சமையலை ஆரம்பித்து அதில் என்னை மறந்தேன். என் பெரிய மகன் விழித்தெழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவுடன், வாழ்த்து சொல்வான் என எதிர் பார்த்தேன். சொல்லவில்லை. சரி மறந்திருப்பானோ என விட்டு விட்டேன். சற்று நேரத்தில் இன்று உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் தெரியுமா? என்ற அவன் தந்தையின் கேள்விக்கு மேல் கீழாகத் தலையசைத்தான். அப்போதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை. அப்புறமும் விடாமல் "ஏண்டா தம்பி அம்மா மேல கோபமா? என்றேன்". "இல்லம்மா உனக்கு ஆட்டோமேட்டிக்கா வாழ்த்து வரும்" என்றபடி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நடந்து கொள்வது முதல் முறையாக புதிராக இருந்தது. என்னவோ சரி என விட்டு விட்டு வேலை மும்முரத்தில் பிறந்த நாளை மறந்தும் போனேன். பின் சின்ன மகனை பள்ளியில் விட்டு கோவிலுக்கு சென்று வந்து மற்ற வேலைகளை பார்த்தேன். சின்ன பிள்ளை பள்ளி விடும் நேரமானது. அழைத்து வருவதற்காக கிளம்பி சென்று மின் தூக்கிக்காக காத்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்து வித்தியாசமான இசை கேட்கவே திடுக்கிட்டேன். அட கைத்தொலைபேசி ரிங்க் டோன் மாறி விட்டதா? இல்லையே சற்று முன் கூட ஒரு கால் வந்ததே அதற்கு வாய்ப்பே இல்லையே எனக்குழம்பியபடி, வெளியில் எடுத்து பார்த்தால், ஹேப்பி பர்த்டே என மின்னிய படியே இசை பாடியது. சரியாக நான் பிறந்த நேரத்தில் வாழ்த்து வரும்படி செட் செய்திருக்கிறான். சின்னவனாக இருக்க வாய்ப்பில்லை. எம்டி மெசேஜ் அனுப்பவும், கேம் விளையாடவும் மட்டுமே அவனுக்கு தெரியும். அவங்க அப்பாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. பெரியவன் தான். இரு நாட்களுக்கு முன் நீ பிறந்த நேரம் பகலா, இரவா? எத்தனை மணிக்கு பிறந்தே என்றெல்லாம் துளைத்தது இதற்கு தானோ என்றெண்ணிய போதே என் கண்களில் நீர் வழிந்தது. இந்த பிள்ளையை எவ்வளவு வருத்தப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அன்று அவன் பள்ளி விட்டு வந்தவுடன் மிகச் சாதாரணமாக "என்ன வாழ்த்து வந்ததா?" என்றான். "ரொம்ப தாங்க்ஸ் டா", என்ற போது. "உனக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னு தான் சொல்லலை" என்றான்.

10 மே, 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம் - 2

சென்ற இடுகையில் இருந்த கேள்விகளுக்கு விடை...

அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?


டட்டுக்கு எலும்பு சுலபமாக முறியும் ஒரு வியாதி இருந்திருக்கிறது. அதனால் அவன் ஊன்று கோலின் துணையுடன் நடந்திருக்கிறான்.


டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

அந்த மம்மியை பரிசோதனை செய்தபோது, மலேரியா கிருமிகளின்
பாதிப்பு தெரிய வந்துள்ளது. அந்த காலத்தில் மலேரியாவிற்கு மருந்து இல்லை என்பதால் இறந்திருக்கிறான்.


டட் பற்றி இன்னும் சில செய்திகள் அறிய இங்கு கிளிக்குங்கள்: முதல் பாகம்