கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஏப்ரல், 2011

மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...

என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு உபயோகப்பட்டேன்..
அன்று முழுதும்
இன்பமாகவே இருந்தாய்...
என்னுடன் நீ மிகவும் அழகாக
இருப்பதாக எல்லோரும்
சொன்னார்கள்...
உன் முகத்தில் புன்னகை...
இரவுக்கு முன் நிழலில்
எனை உலர்த்தினாய்...
உன் வியர்வை என்னிலிருந்து
விடுபட்டுப்போக...
உலர்ந்தேன்...காய்ந்தேன்...
சற்று நேரத்தில் சூடு வாங்கி
பின் காத்திருக்கப்போகிறேன்...
அடுத்த அரை நூற்றாண்டில்
அதிக பட்சம் ஒரு முறை
உன் கண்கள் என் மீது
மறுபடியும் விழும்
என்ற நம்பிக்கையுடன்
நீ ஆசையாய்
எனை எடுத்து
மீண்டும் அழுக்காக்க...
என் போன்ற இன்னும் ஐந்தாறு
பட்டுப் புடவைகளுடன்...
உன் வீட்டு அலமாரியின்
ஆரவாரமில்லா மூலையில்
அலங்காரமாய்த் தொங்கியபடி
தங்கக்கரையுடன்
சிவப்பு நிறத்தில் நான்...

1 ஏப்ரல், 2011

மனசரோவரில் விடிந்த இன்றைய பொழுது




மிகுந்த களைப்பில்
தூங்கியிருந்தேன் நேற்றிரவு
மூடியிருந்த கண்களின் மேல்
மெல்லிய வெளிச்சம்
விடிந்து விட்டதா யோசனையுடன்

கண்களை திறக்க
யத்தனித்த வினாடி
முகத்தின் மேல் சிலு சிலு காற்று
சுற்றிலும் பனிபடர்ந்த குளுமை
விழித்து பார்த்தால்
சுற்றிலும் வெள்ளி நிறத்தில்
பனி மலைகள்
கிழக்கில் எட்டிப்பார்க்கும்
கதிரவன்
எழுந்து நடந்தேன்
பக்கத்தில் தெள்ளிய சுத்தமான
தண்ணீர் அல்ல ஏரி
எவ்வளவு சுத்தம் இந்த தண்ணீர்
இது எந்த இடம்
சிந்திக்கவேயில்லை மனம்
எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை
கொஞ்சமும் சந்தேகமில்லாமல்
அந்த இடத்தின் புதுமையை
முழுதாக அள்ளிப்பருகிய வேளை
பறவைகளின் சத்தம்
ரம்மியமாக காதின் ஓரம்
இந்த இடத்தில்
பறவைகளின் சத்தம்
எப்படி?
இமய மலையில்
கைலாசத்திற்கு அருகிலிருக்கும்
மனசரோவர் ஏரியல்லவா இது.
மறுபடியும் கண்விழிக்க
வெப்ப மிகுதியால் காலையில்
ஆன் செய்த ஏஸி
முகத்தில் சிலு சிலுக்க
நேற்றிரவு வைத்த அலார்ம்
பறவைகள் ஓலியுடன்
காதில் விழ
சற்று முன் கண்டது கனவு என்று
நம்ப முடியாத பிரம்மிப்பில்
இன்னும் நான். 

18 மார்ச், 2011

நடை பயணம்

காற்று இறங்கிய
வாகனம்
தொலைதூர நடைபயணம்
தொடர்ந்து காடுகள்
மலைகள்
இரவுப்பொழுது
இருபுறமும் வானுயர்ந்த
மரங்கள்
சாலைகளோ மேட்டிலிருந்து
பள்ளத்திற்கு
உருளும் பக்குவத்தில்
அரைமணிக்கொரு முறை
கடக்கும் வண்டிகள்
இருள் சூழ்ந்த அந்த
முன்னிரவில்
அன்னிய நாட்டில்
அவளுக்காக
பதறிய படி அவன்
தினமும்
சமையலில் குறை
சொல்லும் கணவனின்
அன்பு
புரிந்து கொள்ள வைத்த
பழுதான வாகனம்
நன்றி கூறியபடி அவள்

15 மார்ச், 2011

உயிருள்ள கவிதை..

மடிக்கணினி ஒளிர்ந்தபடி
என் மெத்தையின் விளிம்பில்...

அந்த ஒளியே
தட்டச்ச போதுமானதாய்...

காதில் மாட்டிய எம்பிதிரியில்
மெலிதாக நறுமுகையே
அதைத்தொடர்ந்து
எங்கேயோ பார்த்தமயக்கம்...

மனதின் ஏதோ ஓர்
நினைவடுக்கில்
கவிதை உயிர்
பெற்றுகொண்டிருக்க...

கண்களும் கைகளும்
வேகமாக விளையாட...

அர்த்தமில்லா எழுத்துக்களும்
சொற்களும் திரையில்
தோன்றித் தோன்றி
மறைய...

எண்ணங்கள் முழுவதும்
என்னவளைச் சுற்றியேசுழல...

உன்  ரசனையின்
வயதென்ன என்றாள்

அவை
இப்போது தான்
பிறந்தது போல்
எப்போதும் இருக்க
வேண்டுமென்றாள்

ரசத்தின் மணம்போல
உன் கவிதையிலும்
வாசம் வேண்டும் என்றாள்

அவள் சொல்லியரசனைபோல்
புதியதாய் இருக்க
அலுக்காமல் மலரும்
மலர்கள் போல்
தினம் தினம் பிறக்க
யத்தனிக்கின்றேன்

உன் அருகில்
உயிருள்ள கவிதையாய்
நானிருக்க

அங்கே என்னடா
கணினியுடன் காதல் சரசம்
என்பது போல்

எப்போதடா வீட்டுப்பாடத்தை
முடித்து மூடிவைப்பாய்
என்ற கேள்வி
முனகலாக
ஆங்கில வாசத்தில்
அவளிடமிருந்து

சற்றே சரிந்து
அவளை
உற்று நோக்குகிறேன்

சாண்டில்யனின்
யவனராணி போல
நீல விழிகளும்
அவற்றை மூடிய
மெல்லிய வெண் இமைகளும்

அதன் மேல்
அலட்சியமாய்
படர்ந்திருக்கும்
காப்பி நிறகேசமும்
என்னை எழுதவிடாமல் சீண்ட

இவளுக்கு மட்டும்
தமிழ் புரிந்தால்
வேறு எதுவும் சொர்கமில்லை
என்ற என் எண்ண ஓட்டத்தை
தடாலென நிறுத்துகிறேன்...

தமிழை ஆழ்ந்து
காதலிக்கும் என்னால்
எப்படி ஓர் ஆங்கில
தேவதையையும்
சரிசமமாய்
காதலிக்கமுடிகிறது
வியந்தபடி
தொடர்கிறேன்...

மன்றத்தில் பரிசு பெற்று
அதை
என்  அழகிய தேவதைக்கு
அர்பணிக்க
எழுதுகிறேனடி...

என் சத்தமில்லா
மெல்லிய பதில்
அவளை எழுப்பவில்லை
எழுந்தாலும்
அவள் படிக்கப்போவதுமில்லை
படித்தாலும்
புரியப்போவதுமில்லை

மொழிப்பெயர்த்து
சொல்ல கேட்க்கும்
அவளின் ஆர்வத்தை
ரசிக்கின்றேன்

சொற்களை
மொழிப்பெயர்க்கலாம்
அதன் சாரத்தையும் கூடத்தான்

கவிதை முழுதும்
என் உதவி இல்லாமலே
உறைந்து ஊடாடும்
ஜீவனை என்னென்று
மொழிபெயர்ப்பேன்

மொழியின் நாயகிக்கு
இசையை
உணர்த்த நாயகன்
படும் தவிப்பை
எனக்களித்து

நிச்சலனமான
நித்திரையில்
குழந்தைபோல்
என்னவள்

30 ஜனவரி, 2011

இதுவும் கடந்து போகும்...


எதுவும் மாறலாம்
தலைகீழாகலாம்...

வெண்மையின் கருவில்
கருமையும் வாழலாம்...

வெண்மேகங்கள் நீர் கோர்த்து
கருமேகமாவது போல்...

பின் அமில மழையும்
கொட்டித்தீர்க்கலாம்...

கோரபற்களின் கொடு
தாக்குதலுக்கும் மேல்
வலிமையாக...

நகைச்சுவை எனும்
பேரில் குதறித் துப்பலாம்...

கள்ளமறியா
நேர் சிந்தனையும்
உதவும் உள்ளமும்
மட்டுமே உனக்கு
அரணாயிருந்தாலும்...

தனக்கு வேண்டியதை மட்டுமே
தருவித்து கொள்ளும்
தனித்திறமை கூட்டி
திரிபவர்களிடமிரிந்து
தற்காத்துக் கொள்வதற்காகவாவது

கள்ளம் பழகு
பொய்மை பழகு

மென்மையே வியாபித்திருக்கும்
மனதை கல்லாக்கு

மனதில் இல்லையென்றாலும்
வெறுப்பை உமிழப்பழகு

இளம் பச்சையாய் துளிர் விட்டு
பின் கரும்பச்சையாகி
மஞ்சளாகி காய்ந்து விழும்
இலைகளைப்போல்

இதுவும் கடந்து போகும்...

22 டிசம்பர், 2010

கவிதைப் பிரசவம்....

வெற்றுக்கட்டம் இல்லை
செவ்வகம் அழைக்கிறது...
ஏதேனும் எழுது என்னுள்
தினமும் எழுது...
இல்லையென்றால் உன்
நாள் முழுமை பெறாது
என்கிறது...
ஏதோ தட்டுகிறேன்
பின் அழிக்கிறேன்..
வரைவாக சேமிக்கிறேன்..
சில சமயம் அதையும்
அழிக்கிறேன்....
பல சமயம் எழுதாமலே
மூடி விடுகிறேன்...
மிகச்சில சமயம்
என்ன எழுத போகிறோம்
எனத் தெரியாமலே
ஆரம்பித்து...
கைகள் தானாக தட்டச்ச
பிறக்கிறது அழகான கவிதை...
அப்போதெல்லாம் என் தாக்கம்
அதனுள் இருப்பதாக
தெரிவதில்லை...
எழுதி முடித்து பின்
சரி பார்க்கும் போது கூட
தோன்றுவதில்லை
மறு முறை படிக்கும் போதும் தான்...
இந்த கவிதை பிரசவத்தில்
என் பங்கு என்ன
யோசித்து யோசித்து
பார்த்தால்
மறுபடியும் பிறப்பது
இன்னொரு கவிதை...
உள்மனம் சொல்கிறது
அந்த கவிதையே நீ தானடி
உன்னில் உன் பங்கை
எப்படி பிரிப்பாய்? என
இது புரியாத புதிராய் நீள
எதற்கும் நிறைவடையா
மனம் ஓடுகிறது
இன்னும் ஒரு கவிதையின்
பிரசவத்துக்காய்...

16 ஜூன், 2010

உன் முத்தம்

ஒரு கன்னத்தில்
அடித்தாய்
கர்த்தரை மனதில்
கொண்டு
மறு கன்னத்தை
காட்டினேன்
அதில் உன்
அன்பு முத்தம்
ஒரு அடி
ஒரு கிள்ளு
ஒரு தள்ளு
ஒரு முத்தம்
யாவும்  நிச்சயம்
உன் அருகாமையில்....

14 ஜூன், 2010

நடுங்கும் விரல்கள்

நடுங்கும் விரல்கள்
கேட்கின்றன...

தாங்கும் கையின்
நம்பிக்கையை....

சந்தியாக்காலம்


இளமஞ்சள் வெயிலும்
இதமாயில்லை
தென்றல் காற்றும்
சுகமாயில்லை
என்னே என் தனித்தீவில்
கையில் புத்தகத்துடன் நான்..

இங்கே வந்தும்
புத்தகமா அம்மா?
சிணுங்கும் என்
செல்லத்தின் குரல்..

இடையே வேறு ஒர் சங்கொலி
அட என்ன இது சத்தம்
படித்துக்கொண்டிருந்த
கவனம் சிதறி
நிமிர்ந்த போது..

நகரும் கட்டடம்  போல்
தன் பயணத்தை
துவக்கியிருந்த
ஸ்டார் விர்கோ...


ஆச்சர்யித்தபடி
கண்களை மீண்டும்
புத்தகத்துக்கு
திருப்புமுன்.. 

ஒரு கனம் விருந்தளித்த
அந்தக் காட்சி...


மேற்கில் அந்திசூரியனின்
சிவப்பு வண்ண அமர்க்களம்..








எதிர்திசையில் வெளிர் நீலம்
வெண்மேகத்தையும்
வான்நீலத்தையும்
சாம்பல் நிறமாக்கி பின்
கருமையாக்கவும்
இரவு படும்
ரசிக்கும்படியான அவசரம்...

நடுவானில் இரண்டும்
கலந்த ஊதா
அதிலும் சிவப்பு வெளிச்சம்
அங்கங்கே கீற்றுகளாய்...

அதுவரை
தூங்கிக்கொண்டிருந்த
விளக்குகளின்
கண்விழிப்பு
ஒவ்வொன்றாய்...

காற்றும் இப்போது
சில்லென்று...

கண்களுக்கு
ரசனை
வரும்போது...

தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்...

18 மே, 2010

கருமை

நிழல் எழுத தேவைப்படுவாய்
நீயின்றி மெருகில்லை
எவ்வோவியத்துக்கும்
கோடுகள் எழுதவும்
புள்ளிகள் வரையவும்
நிறத்தை ஆழமாக்கவும்
கூட பயன்படுவாய்...
ஆம் நிறத்தின் ஓரம்
தூங்கும் கருமை நீ...
நிறத்தின் ஓரம் மட்டும் தூங்கு
மனிதர்கள் கண்களின் ஓரம்
உனகென்ன வேலை...?

15 மே, 2010

பாவம் வானவில்...

மழைவிட்ட பின்னும்
நீ குடை பிடித்தே நட
உன் பூப்போட்ட
சேலையில்
இருக்கும் நான்கு
வண்ணம் தவிர
மற்றணைத்தும்
உருகி ஊற்றுகின்றன பார்
பாவம் வானவில்...

கனவு மெய்ப்படும்...

இன்னும் நேரமிருக்கிறது
கண்களும் காற்றும் சந்திக்க...
இது இரவு

இன்னும் மிச்சமிருக்கிறது
கனவுகளோடு நம் உறக்கமும்...

இன்னும் பின்னியிருக்கிறது
நம் லட்சியங்களும்
அதற்கான முயற்சிகளும்...

இது விடியலுக்கு அருகே
சிறு தொலைவில் உள்ள
வைகறை...

பட்டியல் இருக்கிறது
விடியும்முன் எழுந்து
ஒவ்வொன்றாய் முடிக்க...

இன்னும் இரும்பாய் இருக்கிறது
அவ்வப்போது காயம் பட்டாலும்
உடையாத நம் தன்னம்பிக்கை...

இது விடியல்...

இன்னும் நீண்டிருக்கிறது
வெற்றிகான நம் பயணப்பாதை...

மன்றத்தில் தவழும்
தென்றலாய்....

இன்னும்
கிடைத்துக் கொண்டிருக்கிறது
முன்னேற ஊக்கமும்
உற்சாகமும்...

கண்முன்னே விரிகிறது
நம் கனவு மெய்ப்படும் காட்சி...
முயற்சி ஒன்றே வழி
காட்சி நனவாகும்
கனவு மெய்ப்படும்...

13 மே, 2010

கிறுக்கல்

சிந்தனை முத்துக்கள்
சிங்காரமாய் சிதறின..
சிறகு முளைத்து
வானில் பறந்தன..
கணினியில் அச்சிட
கைகள் பரபரத்தன..
காகிதமாவது தென்படுகிறதா
கண்கள் தேடின..
பேருந்து பயணத்தின்
மத்தியில் நான்..
கணினியும் இல்லை
காகிதமும் இல்லை
வீட்டிற்குள்
வந்திறங்கியவுடன்
அந்த கவிதை மறந்து
வந்து விழுந்தது...
கவிதையில்லை கிறுக்கல்..

4 மே, 2010

நான் தனிமையில் இல்லை...

விடுவிடுவென நீ
சென்றுவிட்டாய்...

உன் மனம்
புரியாதது போல்
நான் வெறுப்பேற்றியது...
தவறு தான்
என் இனியவளே..

எனக்கல்லவா தெரியும்
தினம் நான்
கடக்கும் பாதை
முள்ளும் கல்லும்
நிறைந்தது என...

யாவற்றையும்
சரிசெய்து
ஒரு நாள் வருவேன்
உன்னருகில்

அவசரப்படாமல்
காத்திரு...

அதுவரை

என் தோட்டத்தில்
தென்றலாய்
என்னருகிலேயே
வீசிக்கொண்டிரு

காதல் நிறைந்து
கண் பார்க்காமல்
கை தொடாமல்
உன் புகைப்படத்தை
மட்டும் தினம் பார்த்து
உன்னுடன்
பேசிக்கொண்டு
தானிருக்கிறேன்..

என்ன? காதோரம்
நரைமுடி கொஞ்சம்...

பிள்ளைகள் 
வளர்ந்த பின்
வரவேண்டியதாய்
இருக்கும்..

பணம் தேவையில்லை
என்பதெல்லாம்
பேச்சில் எல்லோர்க்கும்
இருந்தாலும்..


நீயும் நானும்
நம் பிள்ளைகளும்
நன்றாய் வாழ...

சிக்கிக்கொண்ட
சூழ் நிலை
கைதிகளாய்
நாம்...

எனக்கு நீ
உனக்கு நான்
இதில் எங்கு தனிமை...

நான் தனிமையில்

இல்லை...
என்னவளே...

நீ தான்
என் மனதில்
எப்பொதும்
இருக்கிறாயே...

3 மே, 2010

குழல்

காற்று புகுந்து உனை
மீட்டிச் சென்றால் இன்பம்...

அலைகடலென பொங்கும்
என் நினைவலைகள்...

என்னவளே காற்றோடு
விளையாடும் உன் குழல்...

அதனை ஒதுக்கும் போதெல்லாம்
மீட்டும் உன் விரல்கள்...

அமுத கானமோ என்
மனதிற்குள்...

2 மே, 2010

இயற்கை

மேகங்கள் மோதிச்செல்லும்
குளிர் நடுங்க வைக்காமல்
வருடிச்செல்லும்...

சத்தமில்லா அந்த
உயர்ந்த இடம்...

எங்கு பார்த்தாலும்
பச்சை பட்டு உடுத்தி
ஒய்யாரமாக
ஓங்கி நிற்கும்
மலைகள்...

இடையிடையே
வெண்ணிற முத்துக்கள்
கோர்த்த சரம் போல்
சலசலக்கும் அருவிகள்...

மூச்சிழுக்கும் போதே
சேர்ந்துள்ளே
செல்லும் அந்த புத்துணர்வு...

அங்கேயே உறைந்து
இன்னும் சில நேரம்
நிற்க விழையும் ஏக்கம்...

காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...
வருடம் ஒரு முறையாவது
இயற்கை அன்னையின்
ஈடில்லா அழகிய
மடியில் தவழ்ந்து
செல்லமாக விளையாடினால்

மகிழ்ச்சிகடலில் மிதக்கும்
சிறு படகாய் ஆடலாம்...

1 மே, 2010

தன்னம்பிக்கை

வில்லாக வளைந்து வணங்கி
உன் முயற்சி அம்பை
குறிபார்த்து உன்
குறிக்கோள் இலக்கை
நோக்கி எய்துவிடு!
முயற்சிகள்
மண்ணாக கரைந்தாலும்
மறுபடியும் உயிர்த்தெழும்
புற்களைப்போல
நிமிர்ந்து வளர்த்திடு..
வெற்றிகள்
உன் வாசல் தேடி
வரிசையில் நின்றிடும்!

29 ஏப்ரல், 2010

புன்னகை

சகியே உன் உதடுகள்
இரண்டும் நீண்டு
கண்கள் இரண்டும் மலர்ந்து
எப்போது சிரிப்பாய்
எனைப்பார்த்து...

என காத்து கிடந்தேன்
காதலிக்கும் போது...

அந்த அழகில்
அமிழ்ந்து கிடந்தேன்
பல காலம்...

இப்போதும் ஏக்கத்துடன்
காத்துத்தான் கிடக்கிறேன்
நீ   நம் குழந்தைகளை
கவனிப்பதை முடித்து
என் பக்கம் எப்போது
பார்ப்பாயென்று...

ஒரு பிள்ளை இடையில்
தூக்கி ஒரு பிள்ளை
கையில் பிடித்து
நடக்கும் அழகில்
அமிழ்ந்து தான் போகிறேன்
இப்போதும்....

ஆனால்  நீ மட்டும் சகியே
அப்படியே இருக்கிறாயே
அதே புன்னகையுடன்...

19 ஏப்ரல், 2010

சில்லரை

கையில் சில்லரையுடன்

பேருந்து நிலையத்தில்

காத்திருப்பு...


பிச்சை கேட்டு ஓரு

சிறுவன் என் அருகில்...



கிழிந்த ஆடைகளுடன்

தலையில் எண்னெய் இன்றி..



கொடுக்கலாம் தான்

அதன் பின்

நடக்கபோகும் நிகழ்வு??



அங்கிருக்கும் அத்தனை

பிச்சைகாரர்களும் நம்மை

முற்றுகை இடுவதாக..



என் கண்முன்னே

பயமுறுத்த...



சற்றே யோசித்தபடி நான்



அதே கண​த்தில்

என் கையிலிருந்து

ஒரு நாணயம்

தரையில் தேங்கியிருந்த

அழுக்குத்தண்ணீரில்

விழ..



சடாரென குனிந்து

எடுத்தான்..

யோசனையாக என்னை

பார்த்தான்..

நீயே வைத்துக்கொள்

என்றேன்..

சொல்லிவிட்டு நாம் ஏன்

எடுக்கவில்லை..

எவ்வளவு சாமர்த்தியம்

அவனுக்கு..

இனி நடத்துனரிடம்

நூறு ரூபாய்

தந்து சில்லரை வாங்கி

அடக்கடவுளே..



சற்று நேரத்தில்

கையில் அரை அளவு தீர்ந்த

தின்பண்ட பாக்கேட்டுடன்

அவனே தான்..



நிஜமாகவே பசியா??

ஏதோ ஒன்று

அறைந்தது போல்

இருந்தது..



எத்தனை

அம்மா பசிக்குது வை

அலட்சிய படுத்தியிருக்கிறோம்...



இனி இவர்களுக்கென

தனிச் சில்லரை

என் பையில்

எப்போதும் இருக்கும்...

தொ. கா. வுக்கு ஒரு முற்றுப்புள்ளி

மடி கனிணியை

திறந்து வலை பார்க்க

ஆரம்பித்து

ஒரு மணி நேரம் ஆயிற்று...



தொ. கா வில் உன்

டோரா முடிந்து

டியோகோ வந்தாயிற்று...



போதும் கண்ணா

தொலைக்காட்சி பார்த்தது போதும்...



அன்று உன் சோர்ந்த

முகம் பார்த்து

போதும் அம்மா

எழுதியபின்...



ஒரு நாளில் உன் தொ. கா நேரம்

இனி ஒரு மணி நேரம் தான்...

முடிவான முடிவாயிற்று..



நீ போய் மடி கனிணியை

வைத்துக்கொண்டு

உட்கார்ந்திரு, என்னை விடு என

நீ சொல்ல ஆரம்பிக்குமுன்..

நான் சொல்கிறேன்...



வா வெளியில் சென்று

விளையாடலாம்...



காக்கை யை தேட முடியாது

கார் பார்த்துக்கொண்டே

சாப்பிடலாம்...



பூக்களையும், செடிகளையும்

ரசிக்கலாம்...



இதோ கையில்

உன் ஆசை தூரிகையை எடு

சுவர் முழுதும்

ஓவியம் தீட்டலாம்...



இன்னும் தண்ணீரில்

கூட விளையாடலாம்...



உனக்கான நேரம்

இன்னும் ஒரு வருடம் தான்

நீ பள்ளி செல்லும் வரை தான்



வா விளையாடலாம்

போதும் கண்ணா..

தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.