அப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 மார்ச், 2011

டிஷ்யும்...டிஷ்யும்..சண்டை....

வயலருகே சாலையில் இருவர் ரத்தம் வழிய மோதி மிதித்துக் கொண்டிருந்தததை பார்த்த நண்பர் ஒருவர் விசனத்துடன், "என்னடா விஷயம், ஏண்டா இப்படி அடிச்சிக்குறிங்க? என்றார்.
சண்டையிட்டவர் 1, "அட நீங்க வேற, இவன் மாட்டை விட்டு என் வயலில் மேய்ப்பானாம். அதான் நாலு சாத்து சாத்தினேன்."
நண்பர், "நீ ஏண்டா அப்படிச்சொன்னே?"
சண்டையிட்டவர் 2 "அதில்ல அவன் என் வயலுக்கு தண்ணி தர மாட்டேன்னு சொன்னான். அதான்."
நண்பர், "நீ ஏண்டா அப்படி சொன்னே? சரி, இதுல எது உன் வயல்?"
சண்டையிட்டவர் 1,"அதுதான், ஆனா வண்டி ஓட்டி சம்பாதிச்சு இனிமேதான் வாங்கனும்."
நண்பர், "சரி, உன் வண்டி எங்க?"
சண்டையிட்டவர் 1,"அதுவா வேலையில் சம்பாதிச்சு இனி தான் வாங்கனும்"
நண்பர்,"என்ன வேலைக்கு போற?"
சண்டையிட்டவர், "அதுவா, இனிமேதான் தேடனும்."
நண்பர் யோசனையுடன் மற்றவரைப் பார்த்து, "சரி உன் மாடுங்க எங்க?"
சண்டையிட்டவர் 2, "அதுங்களா, இனிமேல் தான் வாங்கனும்."
நண்பர்  (நீங்கள் வடிவேலுவை கற்பனை செய்துகொள்ளலாம்), "ஒன்னுமே இல்லாதத்துக்காடா இப்படி அடிச்சிகிறிங்க? ஏண்டா?, ஏன்?, போய் பிழைப்பை பாருங்கடா." தலையில் அடித்தபடி நகர்கிறார்.
இது சின்ன வயதில் தேவையில்லாமல்  நானும் என் தம்பியும் சண்டைபிடித்த நேரங்களில் எங்கள் அப்பா சொல்லும் குறுங்கதைகளில் ஒன்று.

தெளிவுற சிந்திக்க கற்றுத் தந்தமைக்கு நன்றி அப்பா!

22 ஜூன், 2010

அப்பா என்னும் ஓர் அன்புப்பொக்கிஷம்

சரி எது தவறெது
பிரித்து பார்க்க

பகுத்தறிவுக்கு

பிள்ளையார் சுழியிட்டது நீ

நிஜமெது நிழலெது

தலைகீழாய் பார்த்தாலும்

கண்டுணர கண்ணுக்கு

கற்றுத் தந்தது நீ

உண்மை எது பொய்மை எது

விளங்கித் தெளியும்

பக்குவம் சொன்னது நீ

வினாக்களின்

கூட்டுத்தொந்தரவு நான்

விடைகளின்

பிரதானக் களஞ்சியம் நீ

சளைக்காமல் முகம் சுளிக்காமல்

பதில்களை சொல்லி என்

அறிவுக்கு உரமிட்டது நீ

நீ அழுதால்

நான் அழுவேன் என

அழுவதையே

நிறுத்திக்கொண்டவன் நீ

உன் காலணியை

எனக்கணிவித்து

அக்கினி அணலில்

தீ மிதித்ததும் நீ...

அடைமழையில் குடை

எனக்குமட்டும் பிடித்து

பத்திரமாய் பள்ளியில்

எனைச்சேர்த்து

காய்ச்சலில் நொந்ததும் நீ...

ஏனோ உன்னை

ஒரு மனிதனாகவே

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை...

அப்பா என்றால் அன்பு..

அப்பா என்றால் சஞ்ஜீவி மலை..

அப்பா என்றால் பொக்கிஷம்..

அப்பா என்றால் அன்பின் ஊற்று..

அப்பா என்றால் அறிவின் சுடர்..

அப்பா என்றால் கணிவின் கருப்பொருள்..

அப்பா என்றால் கடவுள்..

இப்படியெல்லாம் தான்

என் மனதில் பதிந்திருக்கிறாய்...

அடுத்த பிறவி என்று

நமக்கு ஒன்று இருந்தால்

நீ எனக்கு மகனாக வா...

மாபெரும் இந்த

பிறவிக்கடனை

சிறிதேனும்

அடைக்க முடிகிறதா

பார்க்கிறேன்...

நீ என்றென்றும்

உளம் மகிழ

நலம் வாழ

உருகி வேண்டுகிறேன்

இத்தந்தையர் தினத்தில்

உன் மறுபிம்பமான

கடவுளிடம்...