31 மே, 2010

மரபணுக்கள்..

மரபணு என்றால் என்ன?


மரபணு பற்றி எளிதாக தெரிந்து கொள்ள அதனை ஒரு புளூபிரிண்டோடு ஒப்பிடலாம்.

உயிரற்ற பொருளை செய்வதற்கு முதலில் அதன் வரைபடம் தயார் செய்து நீள, அகல உயர அளவுகள் எல்லாம் தேர்வு செய்து எப்படி இருக்க வேண்டும் என யோசித்து அந்த தகுதிகள் எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைப்பது போல் இந்த மரபணு இழைகளில் மனிதனுக்கு தேவையான அத்தனை குணங்களும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு மனிதனின் ஒட்டு மொத்த சாப்ட்வேர் அவனின் முடி மற்றும் ரத்த செல்கள் உட்பட ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும். இந்த இழைகளின் வேலை பதிவுகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்ய மற்ற செல் உறுப்பினர்களுக்கு கட்டளை இடுவதும் தான்.

அரசன் பாதுகாப்பாக கோட்டைக்குள் இருந்து கொண்டு ஓலையில் கட்டளை அனுப்புவது போல் இந்த மரபணுக்கள் பத்திரமாக ஒவ்வொரு செல்லின் நியூக்ளியஸ் எனப்டும் பகுதியில் ஹாயாக இருந்து கொண்டு மெசஞ்சர் ஆர் என் ஏ வாக கட்டளைகளை பிறப்பிக்கும். இந்த எம். ஆர். என். ஏக்கள் சைட்டோப்லாசம் பகுதிக்கு வந்து சேர்ந்தவுடன் கட்டளைகளை செயல்படுத்த ஆரம்பிக்கும். இதற்கு உதவி செய்ய நிறைய சிப்பாய்கள் சைட்டோப்லாசம் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும். கட்டளை வந்தவுடன் செயல் படுத்தவே இந்த ஏற்பாடு.

மரபணுக்களை மீண்டும் தொடர்வோம்....

வலையுலக நேரம்...

சுட்டிகள் பின்னே  என்
வலையுலக பயணம்
கட்டணம் பணமாயில்லை
நேரமாக மட்டுமே
நேரத்தை வேலை செய்து
பணமாக்கலாம்...
பணத்தை ஏது செய்தும்
நேரமாக்க முடியாது...
பிள்ளைக்கு பள்ளி விடுமுறை...
வசதியாக  என் நேரம்
வலையுலகில் அதிகரித்தபடி....
 என் வீட்டு சுட்டிகள்
தொலைக்காட்சியின் முன்
நானோ கணினிக்கு
என்னை அர்பணித்த படி...
இல்லை இனி இது இப்படியில்லை..
மாற்றுவேன் என
முடிவு செய்தேன்
போன விடுமுறையை
போலவே...

29 மே, 2010

அமைதி

தெள்ளிய நீர் போல
ஒர் அதிர்வுமின்றி
அமைதியாய்
நின்றிருக்கிறது
மனப்பரப்பு

நெடுங்காலம்
கழித்து ஒரு
பேரமைதி

சிந்தனைகளின்றி
நிச்சலனமாய்
மனதின் மேற்பரப்பு

எண்ணங்களெல்லாம்
யோசனையில் ஆழ்ந்திருக்க
எப்போதும் ஓடிக்கோடிருக்கும்
அந்த மனக்குதிரை
சத்தமே இல்லாமல்...

சோர்ந்து விட்டதா?
ஓடிப்பயனில்லை
என தெரிந்து கொண்டு விட்டதா?

மெல்லிய இசையில்
மயங்கி விட்டதா?

மழைவிட்ட வானம் போல்
தெளிவாய்....

கழுவி விட்ட தரை போல்
புதிதாய்...

வயிறு நிறைந்த குழந்தை போல்
திருப்தியாய்...

நீர் விட்ட செடி போல்
வளமாய்...

தொடர்ந்து தோற்கும் என்
மனக்குதிரை நிறுத்தப்
போராட்டங்கள்
ஓய்ந்து போன நேரம்...

மாற்ற தேவையில்லா
சிறிய விஷயங்களும்

மாற்ற முடியாத
பெரிய விஷயங்களும்

தெரிந்து தெளிந்த
அலைகளில்லா கடல் போல...
அத்திப்பூ போல...
ஆர்பாட்டம் இல்லா
பேரணி போல...
அமைதியில் என் மனம்..

27 மே, 2010

மனித ஜீனோமிக்ஸ்

ஜீன் தெரபி
ஜீன் தெரபியின் மூலம் நம் உடலில் என்ன வகை  நோய்கள் வர சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை கண்டு பிடிப்பது  இப்போது
எளிதாக முடியும். கருவில் உள்ள குழந்தையின் ஜீன்களும் பரிசோதிக்கப்பட்டு அப்பா, தாத்தா சொத்தாக வரக்கூடிய மரபுவழி நோய்களை முன்பே தெரிந்து சரியான சிகிச்சை தருகிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜக்ட்
மனித உடலில் உள்ள ஜீன்கள் அட்டவணை தயாரிப்பு. இது நபருக்கு நபர் கைரேகை போல வேறுபடும் ஒரு விஷயம். முதன் முதலில் ஒரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதன் விலை கோடி கணக்கில் இருப்பதும், அதுவே விற்பனைக்கு வந்ததும் சாமானியர்களுக்கு அசாத்திய விலையில் இருப்பதும், பின் 4 வருடங்கள் கழிந்தபின் கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு வரும் என்பது போல் அநியாயமாக விலை குறைவதும்  நாம் தினம் பார்க்கிறோம்.
அதேபோல் ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜக்டின் வளர்ச்சியை பார்ப்போம்.
  • 2001 இல் முதல் டிராஃப்ட் முழுமை பெற $4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகியது.
  • 2007இல் இரு  நிறுவனங்கள் டிகோட்மீ, 23அன்ட்மீ பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டது. விலை $10 மில்லியன்.
  • பின் $1 மில்லியன்.
  • 2008 ல் இதற்கு $60,000 தேவைப்பட்டது.
  • 2010 ஒவ்வொரு நோயும் கண்டறிய $500 டாலர்கள் மட்டுமே.
இவை   டெய் சாக்ஸ் (ஒரு வகை உயிர்கொல்லி நோய்), ஃபினைல்கீட்டோனூரியா, ஹீமோஃபிலியா போன்ற  நோய்களை
கர்ப்பத்திலேயே கண்டுபிடிக்க உதவுகிறது. 
தொழில் நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது!!!

26 மே, 2010

என் மகனின் குறும்பு

அப்போது அவனுக்கு ஐந்து வயது. இரண்டாம் குழந்தை பேற்றிற்காக தாய் வீடு சென்றிருந்தேன். என் தலை மகனை அருகில் உள்ள பள்ளியில் யூ கே ஜி சேர்த்து விட்டோம். தினமும் காலையில் சிணுங்கல் இல்லாமல் சீக்கிரமாக எழுந்து, குளித்து, சீருடை அணிந்து மிக சந்தோஷமாக வாசலுக்கு வரும் வேனில் பள்ளிக்கு செல்வான். போய் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே நிறைய நண்பர்கள், தைரியமாக பேசுவதால் ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவனாகிவிட்டான்.

ஒரு நாள் சாயுங்காலம் பள்ளி விட்டு வரும்போதே மிகவும் சோர்ந்து இருந்தான். என்ன என்றதற்கு இனி நான் அந்த பள்ளிக்கு போக மாட்டேன்.

அடிக்குறாங்க, நீ வா நம்ம சிங்கப்பூருக்கே போய்டுவோம் என்று ஒரே ஆர்ப்பாட்டம். அப்போது ஜூரமும் வந்து விட்டதால் இரு நாட்கள் கழித்து பள்ளிக்கு அனுப்பும் போது ஆசிரியர்களிடம் பேசினேன். ஏன் என் பிள்ளையை அடித்தீர்கள் என்று கேட்டேன். இல்லை அவன் கொஞ்சம் வாலு, சும்மா மிரட்டி, அடிப்பேன்னு சொன்னதுக்கே அழுதிட்டான் என்

று சொல்லி அனுப்பிவிட்டனர். ஆசிரியர்கள் சொன்னதில் சமாதானம் அடையாததால் அன்று இரவு அவனிடம் பேசினேன். தம்பி இப்போ அம்மாகிட்ட உண்மைய சொல்லு...

யார் உன்னை அடித்தது?

எங்க சார்

எப்போது உன்னை அடித்தார்?

க்ளாஸ் ல.

நீ என்ன செஞ்சே?

கம்பால சாரை அடிச்சேன்.

ஐய்யோ ஏன்?

அவரு என்னை அடிச்சாரு. நான் அவரை அதே கம்பால திரும்பி நிக்கும் போது அடிச்சேன்.

அவர் ஏன் உன்னை அடிச்சார்?

எழுதினதுக்கு.

எழுதினத்துக்கா அடிச்சாங்க?

ஆமாம்.

எதால எழுதின?

பேனாவால.

யாரோட பேனா?

சார் பேனா

எதுல எழுதின?

புக்குல

யார் புக்கு?

சாரோட புக்கு

எந்த புக்கு?

எல்லார் பேரும் எழுதியிருக்கும் இல்ல? அதுல கூட டிக் போடுவாங்களே காலைல. (அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்தர்??!!!)

ஹா ஹா இதை ஏன் ஆசிரியர் என்னிடம் சொல்லவில்லை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது!! என் மகனின் குறும்பை இன்று நினைத்தாலும் வாய் விட்டு சிரிப்பேன்.

செய்திகள் வாசிப்பது... .......

சோதனையாக நானும் உரை நடை எழுதி எல்லோரையும் ஒரு வழி பண்ணுவதாக முடிவு செய்து விட்டேன். படித்து
விட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடுங்கள் (எல்லாம் ஒரு விளம்பரம் தான் :))
இல்லங்க அப்படியெல்லாம் பார்க்காதிங்க! இதுக்கு முன்னாடி ஒரு கதை எழுதி சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்துலருந்து (முத்தமிழ் விழா)
பரிசு கூட வாங்கியிருக்கேங்க. நிஜமாதான். ஆஸ்பிரின்லாம்
தேவையில்ல, தைரியமா படிங்க.
சரி சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். நான் ஆச்சர்யபட்ட ஒரு சம்பவம் இது. பெரும்பாலும் பொண்ணு, பையன் யாராவது வெளிநாட்டுல இருந்தா இந்த அப்பா, அம்மாக்கள் விடும் ரவுசு தாங்காது. ஒரு முறை எப்பாடு பட்டாவது போய்ட்டு வந்து சொந்தங்கள் கிட்ட புகைப்படம் காட்டி வெறுப்பேத்துற பெத்தவங்க மத்தியில என்னை பெத்தவங்க ஒரு தனி ரகம். எங்க பொண்ணு வீட்டுக்கு போக சிங்கப்பூர் வேண்டியிருக்குமோன்னு 8 வருஷம் பாஸ்ப்போர்டே வாங்கலைனா பாத்துகோங்க. 9 தாவது வருஷத்துல எப்படியாவது வரவைக்கனும் னு வம்பு பண்ணி எல்லாம் தயார் பண்ணினோம். ஒரு வழியாக வந்து இறங்கினாங்க எஸ் க்யூ விமானத்துல. சரின்னு ஒவ்வொரு இடமா சுத்தி காட்டினோம். ராபிள்ஸ் மெர்லயனை பார்த்து ஃபூ இவளோதானான்னு சொல்லிட்டாங்க. சரி அதாவது பரவாயில்ல, 14 மாடி உயரம்ன்னு சொன்னே இது தம்மாத்தூண்டு  நிக்குது, இதையா மின்னல் வந்து தாக்குச்சு பக்கத்துல இருக்குற கட்டடமெல்லாம் இதை விட உயரமா நிக்குது? அப்படின்னாங்க. அய்யோ அப்பா அது இதில்ல அது செந்தோசா வுல இருக்குன்னு சொன்னேன். அங்க கூட்டிட்டு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தே ன்னு அடுத்த கேள்வி.  
லிஃப்ட் ல வரமாட்டேன் எங்கயாவது இடையில நின்னுடுச்சுன்னா என்னாகுறதுன்னு ஒரே வம்பு. ஆனா ஃபளையர் ல மட்டும் தைரியமா ஏறி சுத்தினாங்க ரெண்டுபேரும். எங்க அப்பா ஒரு என்சைக்ளோபிடியா, அவங்களுக்கு தெரியாத விஷயமே இல்லன்னு சொல்லலாம். அந்த காலத்து M. Sc Mathematics. டெக்னிக்கலா எல்லாம் தெரிஞ்சு வைச்சிக்கிட்டு கலக்குற ஆல் ரவுன்டர். அவங்க ரசிச்ச இடங்கள்னு சொன்னா டிஸ்கவரி சென்டர், சயின்ஸ் சென்டெர் தான்.  அங்க செய்தி வாசிக்குற செட்டிங்க் இருக்கும் நம்ம படிக்குறது விடியோ மிஃஸ் ஆகி அங்க உள்ள தொலைக்காட்சில ஒளிபரப்பகும்.  நிறைய பேர் உக்கார்ந்து படிக்க தயங்கியபடி  நிற்க, எங்க அம்மா (அந்த காலத்து SSLC, ஆனா ஒரு புத்தகம் விடாம நிறைய படித்து நியாபகம் வைச்சிகிட்டு அப்பப்ப எங்களை அசத்துவாங்க GRE பரிட்சை வார்த்தைகளுக்கு கூட அர்த்தங்கள் அவங்கள கேட்டுக்கலாம், இவங்க ஒரு லிவிங்க் டிக்ஷ்னரி)  தயக்கமே இல்லாம நடந்து போய் செய்திகள் வாசிப்பது  நீனா மெராட்டா (அம்மா அவங்க பெயர் தான் சொன்னாங்க நான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்) ன்னு ஆரம்பிச்சு 5 நிமிஷத்துக்கு படிச்சு கலக்கிட்டாங்க. சில திறமைகள் எல்லாம் நம்ம அப்பா, அம்மா என்பதாலயே நம் கண்ணுக்கு தெரிவதில்லை. திரும்பி போகும் போது என்சைக்லோபிடியாவும், டிக்ஷ்னரியும் ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க கேட்டா அசந்துடுவிங்க, அடுத்த முறை நாங்க வரனும்னா தரையோடு வீடு வாங்குங்க இந்த உயரத்துல தங்கறது எங்களுக்கு பிடிக்கலைனு!!! (எங்க வீடு ஆறாவது மாடில இருக்கு).  

25 மே, 2010

எண்ணித்துணிக கருமம்

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
யாரிடமும் சொல்லாமை நலம்.

செய்யமுடியலன்னா கூட யாரும் திட்டமுடியாது பாருங்க!!

18 மே, 2010

கருமை

நிழல் எழுத தேவைப்படுவாய்
நீயின்றி மெருகில்லை
எவ்வோவியத்துக்கும்
கோடுகள் எழுதவும்
புள்ளிகள் வரையவும்
நிறத்தை ஆழமாக்கவும்
கூட பயன்படுவாய்...
ஆம் நிறத்தின் ஓரம்
தூங்கும் கருமை நீ...
நிறத்தின் ஓரம் மட்டும் தூங்கு
மனிதர்கள் கண்களின் ஓரம்
உனகென்ன வேலை...?

15 மே, 2010

பாவம் வானவில்...

மழைவிட்ட பின்னும்
நீ குடை பிடித்தே நட
உன் பூப்போட்ட
சேலையில்
இருக்கும் நான்கு
வண்ணம் தவிர
மற்றணைத்தும்
உருகி ஊற்றுகின்றன பார்
பாவம் வானவில்...

கனவு மெய்ப்படும்...

இன்னும் நேரமிருக்கிறது
கண்களும் காற்றும் சந்திக்க...
இது இரவு

இன்னும் மிச்சமிருக்கிறது
கனவுகளோடு நம் உறக்கமும்...

இன்னும் பின்னியிருக்கிறது
நம் லட்சியங்களும்
அதற்கான முயற்சிகளும்...

இது விடியலுக்கு அருகே
சிறு தொலைவில் உள்ள
வைகறை...

பட்டியல் இருக்கிறது
விடியும்முன் எழுந்து
ஒவ்வொன்றாய் முடிக்க...

இன்னும் இரும்பாய் இருக்கிறது
அவ்வப்போது காயம் பட்டாலும்
உடையாத நம் தன்னம்பிக்கை...

இது விடியல்...

இன்னும் நீண்டிருக்கிறது
வெற்றிகான நம் பயணப்பாதை...

மன்றத்தில் தவழும்
தென்றலாய்....

இன்னும்
கிடைத்துக் கொண்டிருக்கிறது
முன்னேற ஊக்கமும்
உற்சாகமும்...

கண்முன்னே விரிகிறது
நம் கனவு மெய்ப்படும் காட்சி...
முயற்சி ஒன்றே வழி
காட்சி நனவாகும்
கனவு மெய்ப்படும்...

14 மே, 2010

அங்காடித்தெரு

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. வாழத்துடிப்பவர்களுக்கு ஒரு சிறந்த பாடம். பொதுவாக திரைப்படம் பார்ப்பது என்றாலே நேரவிரயம் என்றெண்ணும் என் போன்ற சிலருக்கும் இது பார்க்க வேண்டிய படம். நம்பிக்கை என்பது சூழலில் இல்லை எந்த நிலையிலும் நம் மனதில் நாம் பாதுகாத்து வைப்பது என்று தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். சென்னை சென்றால் பெரிய ஆளாய் வந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.
பெரிய கடைகளுக்கு சென்றால் அங்கு வேலை செய்பவர்கள் சரியாக கவனிப்பதில்லை என்ற குறை கூட இனி யாருக்கும் பெரிதாகத் தெரியாது. சக மனிதர்களின் வாழ்க்கை முறை கண்ணீர் வரவழைக்கிறது. சினிமாத்தனம் இல்லாமல் அறுவறுப்புக்காட்சிகள் இல்லாமல் கதையை மட்டும் நம்பி வரும் அபூர்வங்களில் இதுவும் ஒன்று.

13 மே, 2010

கிறுக்கல்

சிந்தனை முத்துக்கள்
சிங்காரமாய் சிதறின..
சிறகு முளைத்து
வானில் பறந்தன..
கணினியில் அச்சிட
கைகள் பரபரத்தன..
காகிதமாவது தென்படுகிறதா
கண்கள் தேடின..
பேருந்து பயணத்தின்
மத்தியில் நான்..
கணினியும் இல்லை
காகிதமும் இல்லை
வீட்டிற்குள்
வந்திறங்கியவுடன்
அந்த கவிதை மறந்து
வந்து விழுந்தது...
கவிதையில்லை கிறுக்கல்..

உரை நடை

கவிதை எழுதுவதே மிக சுலபமாக இருப்பதால் உரை நடையில் கவனம் செல்வதேயில்லை எனக்கு. கவிதை என்பது ஒரு நிமிட சமையல் மாதிரி. கவிதையில் எந்த இலக்கணத்திலும் சிறைபடாமல்  நான்கே வரிகளில் நினைத்ததை சொல்லிவிடலாம். சரியாக வரவில்லை என்றாலும் என் கவிதை இப்படித்தான் என்றாவது சொல்லிவிடலாம்.
ஆனால் உரை நடை என்பது பக்குவமாய் செய்து பந்தியிட்டு பரிமாற வேண்டிய முழு சமையல். எங்கேனும் ஒரு தவறிருந்தால் கூட  சரியான பதில் சொல்ல வேண்டும்.
எழுதித்தான் பார்ப்போமே என ஆரம்பிக்கிறேன். சிறப்பாக்கிக் கொள்ள உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்.

12 மே, 2010

அன்னையர் தினம்

அன்னையர்க்கு என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்

4 மே, 2010

நான் தனிமையில் இல்லை...

விடுவிடுவென நீ
சென்றுவிட்டாய்...

உன் மனம்
புரியாதது போல்
நான் வெறுப்பேற்றியது...
தவறு தான்
என் இனியவளே..

எனக்கல்லவா தெரியும்
தினம் நான்
கடக்கும் பாதை
முள்ளும் கல்லும்
நிறைந்தது என...

யாவற்றையும்
சரிசெய்து
ஒரு நாள் வருவேன்
உன்னருகில்

அவசரப்படாமல்
காத்திரு...

அதுவரை

என் தோட்டத்தில்
தென்றலாய்
என்னருகிலேயே
வீசிக்கொண்டிரு

காதல் நிறைந்து
கண் பார்க்காமல்
கை தொடாமல்
உன் புகைப்படத்தை
மட்டும் தினம் பார்த்து
உன்னுடன்
பேசிக்கொண்டு
தானிருக்கிறேன்..

என்ன? காதோரம்
நரைமுடி கொஞ்சம்...

பிள்ளைகள் 
வளர்ந்த பின்
வரவேண்டியதாய்
இருக்கும்..

பணம் தேவையில்லை
என்பதெல்லாம்
பேச்சில் எல்லோர்க்கும்
இருந்தாலும்..


நீயும் நானும்
நம் பிள்ளைகளும்
நன்றாய் வாழ...

சிக்கிக்கொண்ட
சூழ் நிலை
கைதிகளாய்
நாம்...

எனக்கு நீ
உனக்கு நான்
இதில் எங்கு தனிமை...

நான் தனிமையில்

இல்லை...
என்னவளே...

நீ தான்
என் மனதில்
எப்பொதும்
இருக்கிறாயே...

3 மே, 2010

குழல்

காற்று புகுந்து உனை
மீட்டிச் சென்றால் இன்பம்...

அலைகடலென பொங்கும்
என் நினைவலைகள்...

என்னவளே காற்றோடு
விளையாடும் உன் குழல்...

அதனை ஒதுக்கும் போதெல்லாம்
மீட்டும் உன் விரல்கள்...

அமுத கானமோ என்
மனதிற்குள்...

2 மே, 2010

இயற்கை

மேகங்கள் மோதிச்செல்லும்
குளிர் நடுங்க வைக்காமல்
வருடிச்செல்லும்...

சத்தமில்லா அந்த
உயர்ந்த இடம்...

எங்கு பார்த்தாலும்
பச்சை பட்டு உடுத்தி
ஒய்யாரமாக
ஓங்கி நிற்கும்
மலைகள்...

இடையிடையே
வெண்ணிற முத்துக்கள்
கோர்த்த சரம் போல்
சலசலக்கும் அருவிகள்...

மூச்சிழுக்கும் போதே
சேர்ந்துள்ளே
செல்லும் அந்த புத்துணர்வு...

அங்கேயே உறைந்து
இன்னும் சில நேரம்
நிற்க விழையும் ஏக்கம்...

காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...
வருடம் ஒரு முறையாவது
இயற்கை அன்னையின்
ஈடில்லா அழகிய
மடியில் தவழ்ந்து
செல்லமாக விளையாடினால்

மகிழ்ச்சிகடலில் மிதக்கும்
சிறு படகாய் ஆடலாம்...

1 மே, 2010

தன்னம்பிக்கை

வில்லாக வளைந்து வணங்கி
உன் முயற்சி அம்பை
குறிபார்த்து உன்
குறிக்கோள் இலக்கை
நோக்கி எய்துவிடு!
முயற்சிகள்
மண்ணாக கரைந்தாலும்
மறுபடியும் உயிர்த்தெழும்
புற்களைப்போல
நிமிர்ந்து வளர்த்திடு..
வெற்றிகள்
உன் வாசல் தேடி
வரிசையில் நின்றிடும்!