30 மார்ச், 2010

தெளிவு

புத்தகத்தை
முகத்தின் மேல்
கவிழ்த்தபடி
இரவு உறக்கம்

கண் பார்க்கும்
தூரம் வரை
ஏதுமில்லை
ஒரே ஒளி
வெள்ளம்

தூரத்தில்
ஒரு பலகை
அதன் மீது சில
எழுத்துக்கள்

"இதுவரை
 நீங்கள்
என்னவெல்லாம்
எப்படியெல்லாம்
ஆகவேண்டும்
என
நினைத்திருந்த்தீர்களோ
அதுவெல்லாம்
இந்த பலகையை
கடந்தவுடன்
பலிக்கும்"

எப்படி ஆகவேண்டும்
என்று
நினைத்ததை விட
எதுவெல்லாம்
வேண்டாம்
என்று
நினைத்தது
அல்லவா
அதிகம்....
அதுவெல்லாம்
பலித்து விட்டால்......

திகீர் என்றது
திரும்பி விட்டேன்...

இனியாவது என்ன
வேண்டும்
என்பதை
நினைக்கவேண்டும்....
முடிவு செய்தபடி..

ஏதாவது நினைத்து
கவலை கொள்வதையே
பழக்கமாய்
உள்ளவர்கள்
கண்டிப்பாய்
படிக்க வேண்டிய
புத்தகம் இது.
(Excuse me your life is waiting - Lynn Grabhorn)

29 மார்ச், 2010

பிரபஞ்சம்

ஏதும் இல்லா
ஒன்றில்லிருந்து
எல்லாம் வந்தது

நினைத்து பார்க்க
முடியாத சின்ன
இடத்தில் தோன்றி

நினைத்து பார்த்து
பிரமிக்க வைக்கும்
பெரிய அளவில்
நம் பிரபஞ்சம்

தூசித் துகள்களின்
அடர்வில்
பறக்கும் சிறிய
தூசித்துண்டில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
சின்ன துளி நாம்

பிரமிக்க வைக்க
இயற்கை இருக்கிறது...

பிரமித்த படியே
நாம் இருப்போம்...

23 மார்ச், 2010

சூழல்

கொசுக்கடி இல்லை
பாம்புகள் இல்லை
பூச்சிகள் இல்லை
மின் துண்டிப்பு இல்லை
தண்ணீர் பஞ்சம் இல்லை
சாலையோர அசுத்தமில்லை
பிச்சைகாரர் இல்லை
லஞ்சம் இல்லை
ஊழல் இல்லை
போக்குவரத்து நெரிசல் இல்லை
பிள்ளைகளை அடிக்கும்
பெற்றொர் இல்லை
அன்பும் பாசமும்
கருணையும் கூடத்தான்....

உன் குறும்பு

துணிக்கூடையில்
தொலைக்காட்சி ரிமோட்
காலணி அலமாரியில்
கைத்தொலைப்பேசி
அட்டை பால் டப்பாவில்
வீட்டுச்சாவி
தலைகீழாக
பாத்திரம் தேய்க்கும்
சோப்பு திரவ டப்பா
ஸ்பூன்களும், வடிகட்டிகளும்
எப்போதும் டாய்ஸ் பாக்ஸில்
பெட்டில் எப்போது
சாய்ந்தாலும்
குத்தும் ஏதேனும்
ஒரு பொம்மை
அன்பே உன்
குறும்பு இல்லயென்றால்
வீடும் தொல்பொருள்
அருங்காட்சியகமாக
அலுத்து போய் விடும்...

கடற்கரை

கலங்கரை வீதியில்
நீலப் புன்னகை
கடலா? வானா?
கேள்விக்கொக்கிகள்
சிவப்பா? மஞ்சளா?
அந்திச் சூரியன்
வெள்ளையாய் கறுப்பாய்
மணலில் சிப்பிகள்
பெரிதாய் சிறிதாய்
சிறுவர் கோட்டைகள்
வேகமாய் மெதுவாய்
நதியில் படகுகள்
என்றென்றும் சலிக்காத
அழகான அலைகள்
இமை நனைந்து
மனம் குமுறி
களைத்து வருவோரை
இதமாய் வருட
வரும் கடற்காற்று
இது போதும்
இப்போது
மனம் நிறைந்து
வழிகிறது மகிழ்ச்சியில்
நன்றி! இயற்கை!
மறுபடியும்
உனைப்பார்க்கும்
கணம் வரை
விழியோரம் ஆவல்
மனமெல்லாம்
ஏக்கம்.....

17 மார்ச், 2010

சின்னக் கண்ணன்

காலையிலேயே
உன் கைகளில்
நீலத் தூரிகை....

முன் பகலுக்கு முன்
தாள்களும் உன்
கால்களும்

நீல மேக ஷ்யாமள வண்ணம்.

8 மார்ச், 2010

நல்ல கணக்கு


ஒரு வலைப்பதிவில் பார்த்த


சத்தம் போட்டு சிரிக்க வைத்த


ஒரு படம்


இதோ உங்கள் பார்வைக்கு...


6 மார்ச், 2010

வெ - பா

வெள்ளியன்று விடியல்
வெண்பனிச்சூழல்
வெங்கலத் தகடு வானில்
வெட்டுப்படா மரம்
வெறுக்காத ரீங்காரம்
வெளிச்சக் கீற்று
வெயில் கன்று
வெள்ளை நிறப் பறவை
வெற்றிக் கொண்ட பார்வை
வெளியே நம் உலகம்
வெறுக்காது நாளும்
வெளியேற்றிடு வஞ்சம்
வெட்டி வீழ்த்திடு வெஞ்சினம்
வெல்லம் போல் நெஞ்சம்
வெகுமதி உன் தஞ்சம்

5 மார்ச், 2010

பேனாவை வீணடிப்பது எப்படி?

கொஞ்சம் நேரம்
தாளில் எழுத வேண்டும்
அம்மா பார்க்கும் வரை...

அப்புறம் மேஜையில்
பின் புத்தகம், சுவர், தரை,
கை, கால், வயிறு என
அனைத்திலும் முயற்சித்து
பார்க்க வேண்டும்.....
அம்மாவுக்கு தெரியாமல் .....

பார்த்து விட்டால்
தப்பித்துக்கொள்ள
கையோடு ஒரு
காகிதமும்
வைத்திருக்க வேண்டும்

அவள் பார்க்கும் நேரம்
காகிதத்தில் மட்டுமே
எழுதுவதாக பாசாங்கு
செய்ய வேண்டும்

பேனா எழுதுவதை
நிறுத்திய பிறகு
அண்ணனின் பள்ளிப்பையிலோ
அப்பாவின் சட்டைப்பையிலோ
தயாராக இருக்கும்
அடுத்த பேனா !!!!