23 மே, 2011

எதிர்பாரா வாழ்த்து

எதிர்பாரா வாழ்த்து
--------------------------------------------------------------------------------அன்று என் பிறந்த நாள். காலை கண்விழித்தவுடன் கணவரின் வாழ்த்து. வழக்கம் போல் சமையலை ஆரம்பித்து அதில் என்னை மறந்தேன். என் பெரிய மகன் விழித்தெழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவுடன், வாழ்த்து சொல்வான் என எதிர் பார்த்தேன். சொல்லவில்லை. சரி மறந்திருப்பானோ என விட்டு விட்டேன். சற்று நேரத்தில் இன்று உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் தெரியுமா? என்ற அவன் தந்தையின் கேள்விக்கு மேல் கீழாகத் தலையசைத்தான். அப்போதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை. அப்புறமும் விடாமல் "ஏண்டா தம்பி அம்மா மேல கோபமா? என்றேன்". "இல்லம்மா உனக்கு ஆட்டோமேட்டிக்கா வாழ்த்து வரும்" என்றபடி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நடந்து கொள்வது முதல் முறையாக புதிராக இருந்தது. என்னவோ சரி என விட்டு விட்டு வேலை மும்முரத்தில் பிறந்த நாளை மறந்தும் போனேன். பின் சின்ன மகனை பள்ளியில் விட்டு கோவிலுக்கு சென்று வந்து மற்ற வேலைகளை பார்த்தேன். சின்ன பிள்ளை பள்ளி விடும் நேரமானது. அழைத்து வருவதற்காக கிளம்பி சென்று மின் தூக்கிக்காக காத்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்து வித்தியாசமான இசை கேட்கவே திடுக்கிட்டேன். அட கைத்தொலைபேசி ரிங்க் டோன் மாறி விட்டதா? இல்லையே சற்று முன் கூட ஒரு கால் வந்ததே அதற்கு வாய்ப்பே இல்லையே எனக்குழம்பியபடி, வெளியில் எடுத்து பார்த்தால், ஹேப்பி பர்த்டே என மின்னிய படியே இசை பாடியது. சரியாக நான் பிறந்த நேரத்தில் வாழ்த்து வரும்படி செட் செய்திருக்கிறான். சின்னவனாக இருக்க வாய்ப்பில்லை. எம்டி மெசேஜ் அனுப்பவும், கேம் விளையாடவும் மட்டுமே அவனுக்கு தெரியும். அவங்க அப்பாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. பெரியவன் தான். இரு நாட்களுக்கு முன் நீ பிறந்த நேரம் பகலா, இரவா? எத்தனை மணிக்கு பிறந்தே என்றெல்லாம் துளைத்தது இதற்கு தானோ என்றெண்ணிய போதே என் கண்களில் நீர் வழிந்தது. இந்த பிள்ளையை எவ்வளவு வருத்தப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அன்று அவன் பள்ளி விட்டு வந்தவுடன் மிகச் சாதாரணமாக "என்ன வாழ்த்து வந்ததா?" என்றான். "ரொம்ப தாங்க்ஸ் டா", என்ற போது. "உனக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னு தான் சொல்லலை" என்றான்.

4 கருத்துகள்:

 1. பதிவில் "என் கண்ணில் நீர் வந்தது"
  என்ற இடத்தை படித்ததும் உண்மையில்
  என் கண்கள் கூட லேசாக கலங்கியது
  சொன்ன் விஷயமும் சொல்லிய விதமும் அருமை
  இன்றுதான் தங்கள் பதிவுக்குள் வந்தேன்
  அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளன
  ஏன் இத்தனை நீண்ட இடைவெளி...
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. எத்தனை பெரிய பாராட்டு! நன்றி ரமணி!

  தகித்துக்கொண்டிருந்த என் தேடல் நிறைவுக்கு வந்தது போல் ஒரு அமைதி மனதில்....

  எழுதுவதை மட்டுமில்லாமல் தேடலின் கனல் எனைத்தாக்காமல் மறைக்க

  எடுத்துக்கொண்ட அத்தனை வேலைகளையும்
  நிறுத்தி விட்டேன்

  அசுர வேகத்தில் எனக்குள் என்னென்னவோ மாற்றங்கள்...

  மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்...

  உங்கள் அஹம் பிரமாஸ்மி மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
 3. இன்றுதான் உங்கள் பக்கத்தில் நுழைகிறேன்..

  உண்மையில் சொல்லப்போனால் சங்கப்பலகையைப் பின்தொடர்பவர்கள் அனைவரின் தளங்களையும் கூட நான் சென்று பார்த்ததில்லை. :)

  அந்தக் குற்ற உணர்வு இருக்கிறது என்று சொல்வதில் வெட்கம் இருக்கிறது.

  பதிவுலகில் பொழுதைப் போக்குவதற்காகவே பலர் எழுதும் நிலையில்,பொழுதைச் செலவு செய்து ஒரு விதயத்தைச் சொல்லியாக வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும் நிலையிலேயே நான் பதிவுப் பக்கத்தைத் திறப்பது வழக்கம். அந்த அளவு நேர மேலாண்மைப் பிரச்னைகள் இருப்பது காரணம்.

  ஆனால் எனக்கு ஒரு காரியம் செய்ய நேரம் இல்லை' என்ற கூற்றிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. ஒரு லீ க்வான் யூ செய்து முடித்திருக்கும் காரியங்களை விட நாம் பெரிதும் எதுவும் கிழித்து விட வில்லை தானே..
  :))

  தொடர்வதற்கு நன்றி..அவ்வப்போது உங்களைப் படிப்பேன். :)

  உணர்வு பூர்வமாக எழுதுப் போது, அது பெரும்பாலும் மற்றவர்களைக் கவரும். உங்களது மேற்பட்ட பத்தியும் கூட.

  ஆயினும் நிறையப் படியுங்கள், குறைவாக எழுதுங்கள்.. ஒரு நிலையில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லும் பொருள் நிறைந்ததாக மாறும்..அந்த நிலையில் எழுதுவதில் ஒரு அலாதியான நிறைவு கிடைக்கும்..

  உங்களது மின்மடல் படித்த பிறகு எழுதுவதால் இதைச் சொல்ல வேண்டியதிருக்கிறது.

  நிறைவாகவும் எழுத வாழ்த்துக்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி அறிவன்!! நல்ல நேரத்தில் நல்ல அறிவுரை! நேரம் இல்லை எனத்தோன்றும் போதெல்லாம் இதை நினைத்துக்கொள்ளலாம்.
  உண்மை தான்.
  எதையாவது செய்ய ஆரம்பித்தால் மற்ற அனைத்தையும் ஏன் என்னையும் கூட மறந்து அதனுள்ளே மூழ்கி விடும் குணம் உள்ளதால், சிலவற்றிலிருந்து விலகியிருக்கிறேன். அந்த சிலவற்றில் இப்போது படிக்கும் பழக்கம் கூட சேர்ந்து விட்டதில் வருத்தம் இருக்கிறது.

  ஆயினும் இன்னும் தெளிவாகாமலே இருக்கும் வாழ்கையின் மறு பரிமானத்தில் வேட்கை மிகுதியாய் இருக்கிறது. அது தான் ஆன்மிகம். எதையுமே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் எனக்கு சொந்தமாய் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகள் என் மனதை ஏராளமாய் மாற்றியிருக்கின்றன.

  எதை செய்தாலும் நிறைவு பெறாத, இன்னும் எதையோ மிச்சம் வைத்து விட்டது போன்ற குற்ற உணர்வு இப்போது உணர்த்துவதெல்லாம் சரியான பாதையில், திசையில் போவதாக தான். பார்க்கலாம். சென்று சேரும் இடம் எவ்வளவு தொலைவு என்பது கூட தெரியவில்லை. பதில் தெரியாத பல கேள்விகள் துளைத்துக்கொண்டிருக்கின்றன. தேடுகிறேன்.

  பதிலளிநீக்கு