31 டிசம்பர், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்....


நேற்று என்பது நினைவிலும்
நாளை என்பது கனவிலும்
இன்று என்பது நிகழ்விலும்
இப்போது என்பதே வாழ்விலும்
மனதிலும் உறுதியாகட்டும்
சகலமும் அன்புமயமாக மாறட்டும்


நம்பிக்கை நிறைந்த இக்கண்களை போல்
புன்னகை உறைந்த இவ்வுதடுகள் போல்
என்றும் அமைதியும் அன்பும்
நிறைந்திட வாழ்க்கையே
வசந்தமாக மாறட்டும்

யாவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

24 டிசம்பர், 2010

சுள்ளென்று ஒரு காதல்...

"ஏய் இங்க வா, என்ன பண்ணிகிட்டு இருக்க அங்க?"
அன்பு அதில் மிச்சமிருப்பதாக கற்பனை செய்து கொண்டோ, தர்க்கத்திடம் சமரசம் செய்து கொண்டோ கரைத்துக்கொண்டிருந்த புளியை அப்படியே வைத்து, கொதித்துக்கொண்டிருந்த பருப்பை சிம்மில் வைத்து விட்டு கூடத்திற்கு சென்றாள் அவள். இரு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து இப்போது தனியே குடித்தனம் செய்யும் ஜோடியில் ஹீரோயின் இவள் பெயர் நிலா,

"ஏண்டா இப்படிக் கத்துற மெதுவாவே பேசத்தெரியாதா உனக்கு? ஸ்பீக்கர் தொண்டை. இந்த சோ கால்டு ஸ்பீக்கர் தொண்டை தாங்க நம்ம கதையோட ஹீரோ பேரு

வெங்கட் பீ. ஏ. ஹிஸ்டரி கடைசி பெஞ்சு ஆனலும் பாஸ் பண்ணிட்டான். இப்ப நம்ம ஹீரோ வோட புலம்பலை கேப்போம்.

'வெளில தாங்க நாங்க காதல் திருமணம் கைகூடுன ஜாலியான ஜோடி, இங்க வந்து பாத்திங்கன்னா தெரியும் என் பிழைப்பை, எப்ப பாத்தாலும் ஆர்டர் போட்டுகிட்டு... இதுக்கு தான் ஒரே வயசுல கல்யானம் கட்ட கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க போலயிருக்கு. அப்போ தெரியல எனக்கு! வெண்ணிலா வை சுருக்கி நிலான்னு
வைத்துக்கொண்டால் தான் ஸ்டைலாம். பாருங்க என்னை போடா வாடா ன்னு தான் கூப்பிடுறா, மத்தவங்களுக்கு எதிர அவ என்னை மரியாதையா பேச முயற்சி செய்யுரப்போ எனக்கு வர்ர சிரிப்ப அடக்க முடியாம நான் திண்டாடுறதை பார்த்து இவளே முடிவு பண்ணிட்டாளாம் இனி போடா வாடா தான்னு. அட அதுவாச்சும் பரவாயில்லைங்க நேத்து ஒரு வேலை பண்ணியிருக்கா பாருங்க... '

என்ன ? கூப்பிட்ட அப்புறம் பேசாம உக்காந்திருக்க? சொல்லு அடுப்பில வேலையிருக்கு.

"ஆம்மாண்டி உனக்கு அடுப்பில வேலையிருக்கும், பேங்க்ல வேலையிருக்கும் ஆனா எங்கிட்ட பேச மட்டும் நேரமிருக்காது" என்றான். "என்ன தான் கோபமா நான் திட்டினாலும் அவ மேல உண்மையான கோபமே இல்லன்னும் என்னை கவனிக்க வைக்க கத்துறேன்னும் ஈசியா கண்டுபிடிச்சுடுறா"

கொஞ்சம் இரு வரேன்னுட்டு உள்ள போனவ காப்பியோட வெளில வந்தா.

என் கையில் கொடுத்துட்டு எதிர்ல உக்காந்துகிட்டா.

"என்ன தெரியனும் உனக்கு. உன் கிட்ட ஆயிரம் முறை சொல்லியாச்சு, நான் லோன் அப்ளை பண்ண போறேன்னு. உன் வருமானத்தை வச்சு மூணு வேளை சாப்பிடலாம் அவ்வளவுதான். என்னையும் வேலைக்கு போகாதன்னு சொல்லிட்ட சரி. போகல. என் ஒய்ஃப் எங்கயும் கைகட்டி நிக்ககூடாதுனு சொல்லிட்ட, பெருமையா இருக்கு, ஆனா எனக்கு இருக்குற மிச்ச நேரத்துல ஏதேனும் சீரியல் பாத்துகிட்டு வீட்டை துடைச்சுகிட்டு இருந்தா நீ சந்தோஷமா இருப்பியா? ஏதாவது செய்யனும்னு எனக்கு தோணுது. ஒரு லட்சம் இருந்தா ஒரு சொந்த தொழில ஆரம்பிச்சுடலாம். கொஞ்ச நாள் கஷ்டபட்டா அப்புறம் நல்லா வந்திடலாம். நீயும் எவ்வளவு காலம் தான் இந்த சொற்ப சம்பளத்துக்கு கஷ்ட படுவ. இவளைக்கட்டுனதுக்கு பேசாம பெத்தவங்க சொன்னவளையே கட்டியிருந்தா இன்னும் எப்படியோ வசதியா வாழலாமேன்னு உனக்கு தோணுதில்ல. என்னால பொறந்த வீட்டு சீதனம் எல்லாம் கொண்டு வர முடியாது. ஏண்டா இவள லவ் பண்ணிணோம்னு நீ நினைச்சிட்டா அன்னைக்கே நான் செத்துடுவேன்." எதற்கும் கலங்காதவள் இன்று கண்ணீரோடு அவன் எதிரில்.

"என்னை புரிஞ்சிகிட்டது அவ்வளோதானா? உன்னை கஷ்ட்டபடாம காப்பாத்தனும்னு தானே டி நான் இவ்வளவும் செய்யுறேன்." என்றான் நிராயுதபாணியாய்.

"அது தான் கஷ்டமாயிருக்கு எனக்கு. எவ்வளவு பாரத்தை உன் மேலயே சுமத்துறது? இதுக்கு உன்னையும் கூட கூட்டிட்டு போகலாமின்னு தான் இத்தனை நாள் காத்திருந்தேன். நீ வர்ரதாயில்ல. என்ன தான் சமாதானம் ஆகிட்டாலும் என் வீட்டுக்கோ உன் வீட்டுக்கோ போய் நிக்க முடியாது. அதான் நானே போனேன். தப்பா? அப்படியும் ஏதாச்சும் ஷூரிட்டி இல்லாம லோன் ஒகே ஆகாதுன்னு சொல்றாங்க" நிலா.

சற்று யோசித்தவன், "சரி கிளம்பு" என்றான்.

"எங்க" நிலா

"நீ வா என் கூட" வெங்கட்

சற்று நேரத்தில் தான் படித்த கல்லூரி பேராசிரியரின் வீட்டின் முன் கொண்டு வண்டியை நிறுத்தினான்.

"இறங்கு" அவள் ஏற்கனவே லோன் கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்தாள். கல்லூரியில் படிக்கும் போது இவர்களின் மேல் மதிப்பும் பரிவும் கொண்ட பேராசிரியர். நிச்சயம் உதவுவார். இது ஏன் நமக்கு தோன்றவேயில்லை? சிந்தித்தபடி நடந்தாள்.

சற்று நேரத்தில் எல்லாம் நல்லபடியாக கையெழுத்தாகியது. "என்ன நிலா இதை ரெண்டு வருஷம் யோசிச்சியா? முன்னாடியே கேட்டிருக்கலாமே". என்றார் பேராசிரியர்.

"தயக்கமா இருந்துச்சு சார்" நிலா.

"காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட எத்தனை பேர்

இப்படி முன்னேற ஆவலோட இருக்காங்க? உங்களுக்கு உதவுறது எனக்கு ரொம்ப திருப்தி ம்மா. நல்லா முன்னுக்கு வாங்க". என்றவரிடமிருந்து ஆசிகளுடன் விடை பெற்று வீட்டுக்கு வந்தார்கள்.

எவ்வளவு நாள் கனவு, எப்படி ஒரு உதவி, நிமிடத்தில் செய்து விட்டானே இவன். தன் மேல் இவனுக்கு அன்பில்லையோ என சந்தேகபட்டதை நினைத்து வெட்கப்பட்டாள். அவன் கைகளை பிடித்துக் கொண்டு "தாங்க்ஸ் டா" என்றாள். "இன்னும் நீ என்னை புருஷனாவே ஏத்துக்கலை, கூட படிச்ச ஃப்ரெண்டா தான் நினைக்கிற...  ஏத்துக்கிட்டிருந்தா  தள்ளி நின்று  நன்றி சொல்லமாட்டே" என்றவனை நன்றியுடன் பார்த்த அவள் அணைத்து விட்டிருந்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்தாள் இந்த முறை ஈடுபாட்டோடு....

23 டிசம்பர், 2010

காண்பதெல்லாம் காதல்

காமாலைக் காரனுக்கு
காண்பதெல்லாம் மஞ்சள்
காதல் காரனுக்கு
காண்பதெல்லாம் காதல்

காதல் காபி...


அன்பே  நீ தரும் காபி
கூட சொல்கிறது
உன் காதலை...

22 டிசம்பர், 2010

கவிதைப் பிரசவம்....

வெற்றுக்கட்டம் இல்லை
செவ்வகம் அழைக்கிறது...
ஏதேனும் எழுது என்னுள்
தினமும் எழுது...
இல்லையென்றால் உன்
நாள் முழுமை பெறாது
என்கிறது...
ஏதோ தட்டுகிறேன்
பின் அழிக்கிறேன்..
வரைவாக சேமிக்கிறேன்..
சில சமயம் அதையும்
அழிக்கிறேன்....
பல சமயம் எழுதாமலே
மூடி விடுகிறேன்...
மிகச்சில சமயம்
என்ன எழுத போகிறோம்
எனத் தெரியாமலே
ஆரம்பித்து...
கைகள் தானாக தட்டச்ச
பிறக்கிறது அழகான கவிதை...
அப்போதெல்லாம் என் தாக்கம்
அதனுள் இருப்பதாக
தெரிவதில்லை...
எழுதி முடித்து பின்
சரி பார்க்கும் போது கூட
தோன்றுவதில்லை
மறு முறை படிக்கும் போதும் தான்...
இந்த கவிதை பிரசவத்தில்
என் பங்கு என்ன
யோசித்து யோசித்து
பார்த்தால்
மறுபடியும் பிறப்பது
இன்னொரு கவிதை...
உள்மனம் சொல்கிறது
அந்த கவிதையே நீ தானடி
உன்னில் உன் பங்கை
எப்படி பிரிப்பாய்? என
இது புரியாத புதிராய் நீள
எதற்கும் நிறைவடையா
மனம் ஓடுகிறது
இன்னும் ஒரு கவிதையின்
பிரசவத்துக்காய்...

20 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (நிறைவுப்பகுதி)

இன்னும் கொஞ்சம்   நேரம் சென்றதும் கதை முடிந்தது. தம்பிடம் போட்ட ஜன்னலோர இருக்கை ஒப்பந்தம் அடுத்த பகுதிக்கு வர நான் ஓரத்திலும் அவன் நடுவிலும் மாறி அமர பயணம் தொடர்ந்தது. ரயிலில் சாப்பாடு வாங்கி அப்பா தர எல்லோரும் சாப்பிட்டோம். வழக்கம் போல் முழு சாப்பாடு சாப்பிடாத
தற்கு என்னை திட்டி விட்டு மீதி முக்கால் சாப்பாட்டை தானம்
கொடுத்தார்கள்.  அவன் என் தம்பி மட்டும் எப்படியோ சாப்பாட்டிற்கு திட்டு வாங்காமல் சாப்பிட்டு முடிச்சுடுறான்.
இந்த களேபரத்தில் எல்லாம் மறந்து,  வேடிக்கை பார்ப்பதில் மனம் லயித்திருக்க, அங்கு வந்த அவர் அதான் புத்தகம் கொடுத்து படிக்க சொன்ன ஆள் எல்லோர் கையிலிருந்தும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ பெற்றுக்கொண்டு  நகர்ந்தார், இல்லை மீண்டும் என் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்து பாப்பா அந்த புத்தகத்தை கொடு என்று கேட்டார். நான் தயங்க, என் அப்பாவுக்கு அவர் புத்தகத்தை தர மாட்டேன் என்று சொல்வதாக புரிந்து விட, கையிலிருந்து வேகமாக பிடுங்கி கொடுத்துவிட்டார்.  நாம் வாங்கினாலும் கொடுத்து விட வேண்டுமோ என்ற சந்தேகத்துடன் நான் குழம்பி, கேட்டால் திட்டு கிடைக்குமோ என அமைதியாயிருந்து விட்டேன். சற்று நேரத்தில் தம்பி கையிலிருந்த ஸ்போர்ட்ஸ்டாரும்
பறி போய்விட  இருவரும் விழித்தபடி இருந்தோம். உறக்கத்திலிருந்த அம்மா விழித்தவுடன் "அவன் கிட்ட இதுக ரெண்டும் மானத்த வாங்கிடுச்சுங்க" என்று அப்பாவே ஆரம்பித்தார்கள்.
எல்லா கதையும் கேட்டு விட்டு "அய்யோ இதுக ரெண்டும் புத்தகத்தை மெட்ராஸ்ல கடையில் வாங்குச்சுங்க. உங்களுக்கு  நியாபகம் இல்லையா?" என்றார் அம்மா.
"அவன் பெரிய இவனாட்டம் அவனோடதை வச்சுகிட்டு தராம ஏமாத்துற மாதிரியில்ல பேசினான். ஏன் எங்கிட்ட அப்பவே சொல்லல நீங்க?" என்ற அப்பாவின் குரலில் கனிவிருந்தது.
"பயமா இருந்துச்சு ப்பா"
"சரி அவன் போய்ட்டான், போனா போகட்டும் விடுங்க"
ஏமாற்றத்திலும் ஒரு நிறைவிருந்தது அப்பாவின் அன்புக்கு பாத்திரமானோம்.
"இதுவே பழக்கம் போலிருக்கு, இப்படிதான் அத்தனை புத்தகமும் சுட்டான் போலிருக்கு, திருட்டு பயல், முறைச்சானா அவன், ராஸ்கல், என்ன நினைச்சிகிட்டான் அவன்." என்ற அம்மாவின் கோபமும் சற்று
நேரத்தில் சரியாகிவிட ரம்மியமான பிற்பகலில் வேளையில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வந்து இறங்கினோம். அதோடு மாயமாய் மறையும் மந்திர மனிதனும் மாயமாய் மறைந்து விட்டான்.

பின் குறிப்பு:
 1. அந்த மாயமாய் மறையும் மந்திர மனிதன் கதை ஆங்கில ஹாலோ மேன் படத்தின் உல்டா கதை என பிற்பாடு படம் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன் ஹா ஹா... 
 2. தலைப்பை பார்த்து படிக்க வந்து ஏமாந்துவிட்டதாக ஃபீல் பண்னிணா ரொம்ப ஸாரி, உண்மைச்சம்பவம் னு எழுதியிருக்கும் போதே சுதாரிச்சிருக்கனும்....இப்படி எத்தனை பேர்டா கிளம்பியிருக்கிங்க ன்னு நீங்க சொல்றது காதுல கேக்குது.....
 3. வேலை மெனக்கெட்டு என் இடுகையை படிக்க வந்த அன்பர்களுக்கு என் பணிவான நன்றிகள்! நல்லாயிருந்திச்சுன்னா கருத்துரையில் சொல்லிடுங்க!

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (பகுதி-4)

அந்த கதையை படித்து முடிக்கும் வரை ஒரு முறை கூட புத்தகத்தை கீழே வைக்கவில்லை. சிறுவர் மலர், கோகுலம் யங்க் வோர்ள்ட் தவிர  நான் படித்த முதல் நாவல் எனச் சொல்லாம்.
  "நேற்று வரை  நேரம் போகவில்லையே
   உனதருகே  நேரம் போதவில்லையே
   எதுவும் பேசவில்லையே
   இன்று ஏனோ
   எதுவும் தோன்றவில்லையே
   இது எதுவோ
   இரவும் விடியவில்லையே
   அது விடிந்தால்
   பகலும் முடியவில்லையே
   உன் அருகே....."
இப்படித்தான் என் முதல் காதல் ஆரம்பித்தது (அட புத்தகங்களுடன் தாங்க).  இன்று வரை ஒரு நொடியும் அலுக்காமல் தொடர்கிறது. சில சமயம் என் பாய்ஃப்ரெண்டு (அதாங்க ஹஸ்பண்டு) கூட பொறாமைப்படும் அளவு அந்த முதல் காதல் இன்னும் பசுமையா இருக்கு. சரி இப்போ கதைக்கு போவோம்.

ஆராய்ச்சியாளர் இருவர் பேசிக்கொள்ளுவதாக அமைந்த அந்த முதல் பத்தி இன்னும் நினைவில் உள்ளது.  "காற்றை கண்ணால் பார்க்க முடிவதில்லை ஏன்னா அது ஓளியை தனக்குள்ள ஊடுருவ விடுறதால..அதே போல எல்லா திடப் பொருள்களையும்  மறைய வைக்க முடியும் ங்குறது  என் நம்பிக்கை. உதாரணத்துக்கு இந்த காகிதம் இருக்கு இதை ஒளி ஊடுருவது போல மாற்றி வைக்க கொஞ்சம் எண்னெய் தடவினா ஆகிடும். அது போல நான் கண்டுபிடித்த மருந்தை சாப்பிடா உயிரினம் கூட மறைந்திடும். ஓவ்வொரு செல்லயும் மறைய வைக்க தேவையான எல்லாத்தையும் அதில் சேர்த்திருக்கேன்."

ஏன் ஏன் இப்படி அவசரப்படுறிங்க? அதான், அதே தான், கடைசி பத்தி வரைக்கும் படிங்க.

முக்கால் வாசி படிச்சிருப்பேன், அப்போது கூடை நிறைய புத்தகங்களுடன் அதாங்க பழைய சஞ்சிகைகள். குமுதம், ஆனந்தவிடன், ஜூனியர் விகடன், கல்கி ன்னு ஒரு பட்டளத்தையே தூக்கிகிட்டு ஒருத்தர் வந்து எங்கள் அருகே உக்கார்ந்து இருந்தவர்களுக்கு எல்லாம் கொடுத்தார். அப்போதே என்னையும், ஸ்போர்ட்ஸ்டார்ல மூழ்கியிருந்த என் தம்பியையும் முறைத்து பார்த்தார். அப்போது புரியவேயில்லை எனக்கு அவர் முறைத்ததற்கு பொருள். 
தொடரும்....

18 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (பகுதி-3)

தான் புத்திசாலியா இல்லையா என தெரிந்து கொள்ள யாருக்குத் தான் ஆர்வம் இருக்காது?
கடை வாசலுக்கு சென்று, "எங்களுக்கு புத்தகம் வேணும்"
என்ன புத்தகம்?
என் தம்பி "ஸ்போர்ட்ஸ்டார்"
" 15 ரூபாய்,  வேற என்ன வேணும்?"
அப்போது தான் கண்ணில் பட்டது மாயமாய் மறையும் மந்திர மனிதன் என்னும் சிறுவர் கதை புத்தகம்.
"அது வேணும்"
"சரி 3.50, இந்தாங்க மிச்ச சில்லரை". வாங்கிக்கொண்டு புத்திசாலி என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்துடன் ஓடி வந்து ரயிலில் ஏறினோம். வண்டி அப்போதும் நின்று கொண்டு தானிருந்தது. ஹி ஹி....
சற்று நேரத்தில் அப்பாவும் வந்து விட வண்டி மெல்ல நகர ஆரம்பிக்க ஜன்னல் ஓர சீட்டடுக்கான எங்கள் சண்டை முற்றி பாதி தூரம் வரை அவன் மீதி தூரம் வரை நான் என்று முடிவாகி ஓய்ந்தது, "அப்பா நாங்க இருவரும் புத்திசாலிங்க! தெரியுமா!"
அப்பா, "அப்படியா? யார் சொன்னா?"
"எங்களுக்கு புக் கொடுத்தாங்க"
"யார்?"
"ஹிக்கின் பாதம்ஸ் கடைல"
"அதனால?"
"அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம் தருவாங்களாம்!"
"அப்படின்னா அவன் எப்படி கடை  நடத்துறது? பாருங்க யார் கேட்டாலும் கொடுக்குறான்"
"அம்மா தான் சொல்லுச்சு"
 எங்களையறியாமலே அம்மாவை மாட்டிவிட, "அம்மா சொன்னாளா? அவ புத்தகம் படிக்க ஏதாச்சும் சொல்லி வாங்கவைப்பா"
"அதுக்கு தான் ஸ்போர்ட்ஸ்டார் வாங்கிட்டு வந்திருக்கான் என் பையன்" என்ற அம்மாவின் கவலை அப்போது புரியவில்லை எனக்கு.
பதிலில் குழம்பி ஏமாற்றத்துடன்,  அப்படின்னா நாங்க புத்திசாலிங்க கிடையாதா? (அதை எப்படி தெரிஞ்சுகாம விடுறது!!??) 
" நீங்க புத்திசாலிங்க தான் யார் இல்லனு சொன்னாங்க?" அப்பா.
என்ன டா இது இப்படி குழப்புறாங்களே சரி சொல்லிடாங்க ஒகே!
சரி ஸ்போர்ட்ஸ்டார் நடு பக்கத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த உலககோப்பை கிரிக்கெட் லிருந்து பிரபலங்களின் முழு அளவு படம்
மடித்து ஸ்டேப்பிள் பண்ணியிருக்கும். வேகமாக ஆலன் டேவிட் படத்தை எடுத்து பெட்டி உரையின் ஒரு பக்கத்தில் வைத்தான் தம்பி. சற்று நேரத்தில் அவரவர் சிந்தனைக்குள் அவரவர் காணாமல் போக நான் என் புத்தகத்தில் மூழ்கினேன். மாயமாய் மறையும் மந்திர மனிதனின் உலகிற்குள் மூழ்கியேவிட்டேன்....
தொடரும்...

17 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன்....(உண்மைச்சம்பவம் பகுதி-2)

"இன்னும் நேரமிருக்கு. அப்பா வந்திடுவாங்க,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அங்க இருக்கு பாருங்க ஒரு புத்தக கடை, ஹிக்கின் பாதம்ஸ் அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம்  விற்பாங்க தெரியுமா?" என்று எங்கள்  அம்மா ஒரு வித்தியாசமான வாக்கியத்தை சொல்ல, எங்கள் (நானும், என் தம்பியும்) இருவரின் முகத்திலும் ஆச்சர்யக்குறி. 
சரி செக் பண்ணிடுவோம் என்று எண்ணியவாறே,  எங்களுக்கு தருவாங்களா? என்றோம்.
"ம் ம் கேட்டுப்பாருங்க", இது அம்மா.
"ஆனா காசு?" இது என் தம்பி.
அம்மா இருபது ரூபாயை கையில் கொடுத்து "போய் வாங்கிக்கங்க." என்று சொல்ல வண்டியிலிருந்து இறங்கி தட தடவென ஓடினோம்.
           தொடரும்....

16 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன்...(உண்மைச்சம்பவம்) (பகுதி-1)

இடம்      : தென்னக ரயில் நிலையம். எழும்பூர், சென்னை.
நேரம்     : காலை மணி 9. 30
வருடம்: 1988 -  1992  குள் என்றோ ஒரு மே மாத நாள். வருடமொரு முறை மயிலாப்பூரில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றதால் சரியாக நினைவில்லை.

"சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்." ஒலிப்பெருக்கி அறிவிப்பைத் தொடர்ந்து எங்களுக்குள் பதற்றம்.
தண்ணீர் எடுக்க சென்ற அப்பா இன்னும் வரவில்லையே!  ட்ரெய்ன் கிளம்பிட்டா?

தொடரும்.....
14 டிசம்பர், 2010

நித்தியின் கவிதை

அப்க்க்க்க்டெக்ன்மொஹீயீஜ்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ஊப்ப்ப்ப்ப்ப்ஃர்ஸ்டுவ்வ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்
ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்
ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ழ்
12344444567890000000


என் மூன்று வயது மகனின் முதல் கவிதை. ...
அவனுக்கு தெரிந்த ஏ பி சி யும் எண்களும்..
தமிழ் தட்டச்சில் உருவம் மாறி...

10 டிசம்பர், 2010

மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....

பொதுவாக படிப்பது என்றாலே குதூகலமான செயல் எனக்கு. அதிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பேஷன் மாறுவதைப்போல என் அபிமானமும் புல் தாவரத்திலிருந்து ஏரொ நாட்டிகல் தொழில்னுட்பம் வரை ஒன்று விடாமல் ஓயாமல் தாவுவதுண்டு. அதற்கேற்றார்போல் சிங்கை தேசியக் கிளை நூலகமும் பத்து நிமிட நடையில் சென்றடையும் இடத்திற்கு தானாகவே இடம்பெயர வீட்டை விட்டு இறங்கினால் கால்கள் தாமாகவே அங்கு தான் செல்கின்றன. சமீப காலமாக ஆன்மிகம் கவனமீர்க்கிறது.
 • தன்னை உணருதல் என்றால் என்ன?
 • நம் யுனிவர்ஸ் தோன்றியது எப்படி? (பெரு வெடிப்பு கொள்கை-big bang theory என்னை சமாதானப்படுத்தவில்லை) அப்படியே இருந்தாலும் ஏன் தோன்றியது?
இவைதான் இப்போது என்னைக்குடையும் கேள்விகள். அவை பற்றிய நூல்களையும் வலை உலாவிலும் தேடியதில் கண்ணில் பட்டது எழுத்தாளார் பாலகுமாரனின் சிந்தனைகள்...
முதல் கேள்விக்கு இந்த கருத்துக்கள் உதவும். நம்மை நாமே அறிந்து கொள்ள இவை ஆற்றும் பணிகள் கொஞ்சமல்ல. அவற்றில் சில...

 • மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
 • தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்
 • மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை. மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
 • உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.
 • ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.


 • எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
 • தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
 • கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
 • அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்


  உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.

  மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும் • எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

  .
  மேலும் படிக்க...
தேடல் தொடரும் வரை இடுகைகளும் தொடரும்.

8 டிசம்பர், 2010

நேரத்திலிருந்து காணாமல் போகிறேன்

குளிர் காற்றும்

இருண்ட மேகங்களும்

சலசலக்கும் நெற்பயிர்களும்

பொங்கும் சுழிநீரும்

கரைவரை தொட்டுக்கொண்டு

தளும்பித் தளும்பி

வளைந்து ஓடும் நதியழகும்

ச்சோவென்ற மழையும்

நடுங்கும் குளிரும்

வேகமான வழிப்பயணமும்....

என்றோ எங்கோ


எதற்கோ என்னவோ தேடப்போய்

வேறு எதுவாகவோ

மாறிவிட்டதைப் போல்
ஓர் உணர்வு!

மழையில் மழையாகிறேன்

தீயில் தீயாகிறேன்

காற்றில் காற்றாகிறேன்

மேகத்தில் மேகமாகிறேன்

வானத்தில் வானமாகிறேன்

வெற்றிடத்தில் வெற்றிடமாகிறேன்

ஆகவில்லையென்றாலும்

ஆகிடவே விழைகிறேன்

ஒரு மணித்துளிக்குள்


இவ்வளவு யுகங்களா?

ஒரிரு வினாடிகளுக்கு

இத்தனை நீட்சியா?

ஒரு முழு நாளுக்கு

இவ்வளவே நொடிகளா?

என்னுள் என்னென்னவோ

மாற்றங்கள்....

அவ்வப்போது நேரத்திலிருந்து

காணாமல் தான் போகிறேன்...

மலையருவி...

வரவேற்கும் ஈர மண்
கரும்பாறைகள்
ஓர் ஆயிரத்துக்கும்
குறைவில்லா குரங்குகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஹோவென்ற சத்தம்
அருவியின் லயத்தை
அறிவுறுத்த
அந்தச் சாரலுடன்
மழைச்சாரலும்
சேர்ந்து கொள்ள
மனதின் சக்தி நிலை
மாறுதல்களை
சொல்லிட வார்த்தைகளே
இதுவரை இல்லை
அருகில் சென்று
கால்கள் நனைக்க 
ஜில்லென்று குளிர்
ஊசிபோல் இறங்கியது
முழுவதும் இறங்குவதா
வேண்டாமா என்ற
கேள்வி உடனடியாக
விடைபெற்றுக்கொள்ள
அருவியின் மடியில்
அழகான தாலாட்டு....
இயற்கையின் மற்றொரு
குழந்தை...
மலையருவி.