26 ஜூன், 2010

நான் ப்ளாக் ஆரம்பித்த கதை...

தமிழில் ப்ளாக் எழுதுவது நீண்ட நாட்களாகவே இருந்தாலும் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததேயில்லை. படிப்பதோடு சரி. தமிழ் தட்டச்சு மென் பொருளும் தட்டும் முறையும் தெரியாது என்ற சாக்கு வேறு. புத்தகம் படிக்கும் பழக்கமும் நூலகம் செல்வதும் எனக்கு மிக மிக மிக பிடித்த விஷயங்கள். நிறைய படி, நீ ஒரு புத்தகம் எழுதவேண்டும் என மிகச்சிறுவதிலிருந்தே என்னிடம் சொல்லிக்கொண்டிருப்பார் என் அம்மா. இப்போது எழுதச்சொல்லி தூண்டியவர் என் ப்ரியமான தோழி...அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மிகவும் நன்றி தோழி!!!

என் மகனின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டத்தில் தான் அவரை முதன் முதலில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிலரை பிடித்துவிடும் அல்லவா? அதுபோல் அவரை பார்த்தவுடன் நீண்ட காலம் பழகிய ப்ரியமான தோழி போல் தோன்றியது. சரி என பேச ஆரம்பித்தால் அட நம்மை போலவே இவரும் சிந்திக்கிறாரே என தோன்ற ஆரம்பித்த பிரம்மிப்பு ஒன்றரை ஆண்டுகளாக இன்று வரை தொடர்கிறது. என்னை விட ஒரு படிமேல் என்று தான் சொல்லவேண்டும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதிலிருந்து நேர நிர்வாகம் வரை அவரிடமிரிந்து ஏராளமான விஷயங்கள் கற்று கொண்டிருக்கிறேன். எழுதுவதில் இயல்பாக விருப்பம் இருந்தாலும் எழுத என்ன இருக்கிறது என யோசித்து தயங்கி கொண்டிருந்தபோது, கூகுல் வழியான வலைதாவலில் தமிழ் மன்றம் எனும் வலைதளத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் குறிப்பாக (கீதம் அவர்களின் பின்னூட்டங்கள்) உற்சாகமும் அட நம்ம எழுத்தை கூட படிக்கிறார்களே என எண்ண வைத்தது. அந்த நேரத்தில் என் தோழி சிங்கையில் பொதுப்பிரிவு சிறுகதை போட்டி நடப்பதாகச் சொல்லி என்னையும் எழுதச்சொன்னார். தயங்கித் தயங்கி எழுதி அனுப்பினேன். அவரும் அனுப்பினார். எழுதி அனுப்பியதை மறந்ததாக சொல்லிகொண்டு பதில் வருகிறதா என தினமும் வீட்டு தபால் பெட்டியை முற்றுகையிட்டு கொண்டிருந்தேன். முத்தமிழ் விழாவே வந்து விட்டது இனி எங்கே நமக்கு பதில் வரப்போகிறது என அயர்ந்த சமயம், ஒரு நாள் மாலை நேரம் தோழியின் செல் அழைப்பு.... உங்கள் தபால் பெட்டியை பாருங்கள். எனக்கு பரிசு வந்துவிட்டது, உங்களுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும் என சொன்னார். வேகமாக போய் திறந்து பார்த்தில் ஆச்சர்யம் நிஜம் தான் எனக்கும் பரிசு கிடைத்துவிட்டது. சிறிது நேரம் நம்பவே முடியவில்லை. கிடைத்தது ஊக்கப்பரிசு என்றாலும் அது மிகப்பெரிய சந்தோஷத்தை தந்தது. படிப்பில் முதல் மதிப்பெண் வாங்கி பரிசு பெறும் போது கூட அப்படி இல்லை. முதல் பரிசும் இரண்டாம் பரிசும் பெற்றவர்கள் ஏற்கனவே தங்கமுனைப்பேனா விருது பெற்ற எழுத்தாளர்கள். மற்ற நான்கு இடங்களில் எங்களுக்கு இரண்டு. முதல் கதைக்கே பரிசு என்பது ஒரு மாபெரும் வெற்றி என் கனிப்பில் (என் கதை தமிழ்மன்றம் வலைதளத்தில் சிறுகதை பகுதியில் இருக்கிறது). இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய என் ப்ளாக் இப்போது 100 இடுகைகள் முடிந்து 101 வது இடுகைக்கு வந்துவிட்டது. ப்ரியமுடன்......வசந்த் மற்றும் சி. கருணாகரசு இடும் பின்னூட்டங்கள் உற்சாகம் தருகிறது. என் தோழியின் ப்ளாக் லிங்க் ஐ அவரின் அனுமதி பெற்று பின்னர் இதில் பதிக்கின்றேன். வசந்த் என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்,

படிப்பது என்றாலே செய்தித்தாள் படிப்பது மட்டும் தான் என்று கொள்கை வைத்திருக்கும் என் ஹீரோ (என் கணவர்) என் பதிவுகளை படித்து உடனுக்குடன் அழைத்து பாராட்டும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நன்றி ஹீரொ!

அவரின் விருப்பப்படி வீடு முழுதும் கீதாச்சாரம்... வெறும் சுவற்றில் மட்டுமில்லாமல் வாழ்விலும் பின்பற்றும் அவர் மனதிலும்... என் 100 வது பதிவில் அவர் மனதோடு இணைந்த கீதாச்சாரம் இருக்கவேண்டும் என்பதால் பதித்தேன்.
என் ஆத்ம திருப்திக்காக எழுதுவதில் ஊக்கம் அளிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் கோடி!!!

25 ஜூன், 2010

கீதாச்சாரம்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவருடைதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே வாழ்வின்  நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

ஆகவே
கடமையை செய் பலனை எதிர்பாராதே!

- கீதாசாரம்

ஒற்றுமை


அட என்னைய மாதிரியே இருக்குற...

நான் அப்படியே சாப்பிடுவேன்...

எப்ப கேக் தயாராகுறது?
எப்ப சாப்பிடுறது?
நான் அப்படியே சாப்பிடுவேன்.

வஜ்ராசனம்

 நான் தூங்கலை.... வஜ்ராசனம் செய்யுறேன்.
நிஜமா....!

22 ஜூன், 2010

அப்பா என்னும் ஓர் அன்புப்பொக்கிஷம்

சரி எது தவறெது
பிரித்து பார்க்க

பகுத்தறிவுக்கு

பிள்ளையார் சுழியிட்டது நீ

நிஜமெது நிழலெது

தலைகீழாய் பார்த்தாலும்

கண்டுணர கண்ணுக்கு

கற்றுத் தந்தது நீ

உண்மை எது பொய்மை எது

விளங்கித் தெளியும்

பக்குவம் சொன்னது நீ

வினாக்களின்

கூட்டுத்தொந்தரவு நான்

விடைகளின்

பிரதானக் களஞ்சியம் நீ

சளைக்காமல் முகம் சுளிக்காமல்

பதில்களை சொல்லி என்

அறிவுக்கு உரமிட்டது நீ

நீ அழுதால்

நான் அழுவேன் என

அழுவதையே

நிறுத்திக்கொண்டவன் நீ

உன் காலணியை

எனக்கணிவித்து

அக்கினி அணலில்

தீ மிதித்ததும் நீ...

அடைமழையில் குடை

எனக்குமட்டும் பிடித்து

பத்திரமாய் பள்ளியில்

எனைச்சேர்த்து

காய்ச்சலில் நொந்ததும் நீ...

ஏனோ உன்னை

ஒரு மனிதனாகவே

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை...

அப்பா என்றால் அன்பு..

அப்பா என்றால் சஞ்ஜீவி மலை..

அப்பா என்றால் பொக்கிஷம்..

அப்பா என்றால் அன்பின் ஊற்று..

அப்பா என்றால் அறிவின் சுடர்..

அப்பா என்றால் கணிவின் கருப்பொருள்..

அப்பா என்றால் கடவுள்..

இப்படியெல்லாம் தான்

என் மனதில் பதிந்திருக்கிறாய்...

அடுத்த பிறவி என்று

நமக்கு ஒன்று இருந்தால்

நீ எனக்கு மகனாக வா...

மாபெரும் இந்த

பிறவிக்கடனை

சிறிதேனும்

அடைக்க முடிகிறதா

பார்க்கிறேன்...

நீ என்றென்றும்

உளம் மகிழ

நலம் வாழ

உருகி வேண்டுகிறேன்

இத்தந்தையர் தினத்தில்

உன் மறுபிம்பமான

கடவுளிடம்...

16 ஜூன், 2010

உன் முத்தம்

ஒரு கன்னத்தில்
அடித்தாய்
கர்த்தரை மனதில்
கொண்டு
மறு கன்னத்தை
காட்டினேன்
அதில் உன்
அன்பு முத்தம்
ஒரு அடி
ஒரு கிள்ளு
ஒரு தள்ளு
ஒரு முத்தம்
யாவும்  நிச்சயம்
உன் அருகாமையில்....

14 ஜூன், 2010

நடுங்கும் விரல்கள்

நடுங்கும் விரல்கள்
கேட்கின்றன...

தாங்கும் கையின்
நம்பிக்கையை....

சந்தியாக்காலம்


இளமஞ்சள் வெயிலும்
இதமாயில்லை
தென்றல் காற்றும்
சுகமாயில்லை
என்னே என் தனித்தீவில்
கையில் புத்தகத்துடன் நான்..

இங்கே வந்தும்
புத்தகமா அம்மா?
சிணுங்கும் என்
செல்லத்தின் குரல்..

இடையே வேறு ஒர் சங்கொலி
அட என்ன இது சத்தம்
படித்துக்கொண்டிருந்த
கவனம் சிதறி
நிமிர்ந்த போது..

நகரும் கட்டடம்  போல்
தன் பயணத்தை
துவக்கியிருந்த
ஸ்டார் விர்கோ...


ஆச்சர்யித்தபடி
கண்களை மீண்டும்
புத்தகத்துக்கு
திருப்புமுன்.. 

ஒரு கனம் விருந்தளித்த
அந்தக் காட்சி...


மேற்கில் அந்திசூரியனின்
சிவப்பு வண்ண அமர்க்களம்..
எதிர்திசையில் வெளிர் நீலம்
வெண்மேகத்தையும்
வான்நீலத்தையும்
சாம்பல் நிறமாக்கி பின்
கருமையாக்கவும்
இரவு படும்
ரசிக்கும்படியான அவசரம்...

நடுவானில் இரண்டும்
கலந்த ஊதா
அதிலும் சிவப்பு வெளிச்சம்
அங்கங்கே கீற்றுகளாய்...

அதுவரை
தூங்கிக்கொண்டிருந்த
விளக்குகளின்
கண்விழிப்பு
ஒவ்வொன்றாய்...

காற்றும் இப்போது
சில்லென்று...

கண்களுக்கு
ரசனை
வரும்போது...

தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்...

10 ஜூன், 2010

விளம்பரங்கள் படுத்தும் பாடு......

பழைய சின்ன மிதிவண்டியை எடுத்துக்கொண்டு சீர் செய்ய கிளம்பினார்கள் அப்பாவும் இரு பிள்ளைகளும். கடையில் புதிய மிதிவண்டி வாங்கைக்கொள்ளுங்கள், பழையதை சரி செய்ய இதில் பாதி பணம் வந்துவிடும் என்று சொன்னதால் இரண்டையும் எடுத்துக்கொண்டு வீடு வந்தனர். சின்ன பிள்ளைக்கு ஏக கொண்டாட்டம். சரி பழைய வண்டியை இப்போது என்ன செய்யலாம் என நான் கேட்க, பெரிய மகன் உடனே நகைகளை வாங்கிக்கொண்டு பணம் தரும் இரு பிரபல நிறுவனங்களின் பெயரைச் சொன்னான். எதுக்கு டா அந்த பெயரையெல்லாம் சொல்ற என்றேன், இல்லம்மா அங்க சைக்கிளை கொடுத்தால் பணம் தருவாங்க.. என்றான்.

ஏன் ரொம்ப கவலையா இருக்கே?
எனக்கு பணம் வேணும்?
அதுக்கு தான் ‘-----‘ இருக்கே, கவலையவிடு!

என்பதான தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த குழந்தைகளை படுத்தும் பாடு அப்பப்பா...

சிரித்து முடித்து, அவனுக்கு விளக்கி முடித்தபின் ஒரே வருத்தமாகி விட்டது. ஒரு முறை பார்த்தாலே பதிந்துவிடும் குழந்தைகள் மனதில் பல முறை இது போல் பதியவைத்தால் விளைவு??

9 ஜூன், 2010

மனிதனுக்குள் எலி ???!!!

இது மரபணு சகாப்தத்தில் ஒரு சுவாரஸ்யம். மனித மரபணுக்களின் முழு டிராப்ட் 2002 ல் வெளியிடப்பட்டது. ஒரு வருடத்திற்கு பின் எலியின் மரபணுக்கள் டிராப்ட் தயாரானது. சற்று ஏறக்குறைய 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே எலியின் மூதாதையர்களும் மனிதனின் மூதாதையர்களும் பரிணாம வளர்ச்சியில் தனியே பிரிக்கபட்டுவிட்டாலும் சமீபத்திய ஆய்வறிக்கையின் படி மனிதனுக்கும் எலிக்கும் உள்ள வேறுபாடு வெறும் 300 ஜீன்கள் தானாம். அதாவது மொத்தம் உள்ள 30 000 ஜீன்களில் 300 தனித்தன்மை வாய்ந்தவை தவிர மற்றணைத்தும் எலிகளிடமும் உள்ளனவாம்.

ம்யூட்டேஷன் எனப்படும் ஜீன் மாறுபாடு எலிகளுக்கும் மனிதனுக்கும் மிக குறைந்த வித்தியாசங்கள் கொண்டுள்ளதால் எலிகள் ஆராய்ச்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறது, சோதனை எலி என்ற பெயரில். மனிதனின் ஜீன்களில் 99 சதவீதம் எலியின் ஏதாவது ஒரு ஜீனை ஒத்திருக்கிறது. அதனால் எலிக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சதவீதம் தான்!!!


2 ஜூன், 2010

நிறப்பாகுபாடு...

மலர்களையும் விட்டு
வைக்கவில்லை
நிறப்பாகுபாடு...

மனிதர்களிடமிருந்து
இன்னும் முழுமையாய்
விலகாமலே...

பூக்களிடம் தாவிவிட்டது...

உடைக்கேற்ற
வண்ணமென்ற பெயரில்...

கறுப்பு ரோஜா
பச்சை மல்லி
நீலச் சந்தனமுல்லை
எல்லாமே
சாத்தியம் இப்போது...

சில குடும்பங்கள்
வறுமையின்றி வாழ
உதவமுடியுமானால்...

நானும் அணிவேன்
நிறம் மாற்றிய பூக்களை
விருப்பமில்லாமலேயே...