தேடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 பிப்ரவரி, 2011

முற்றுப் பெறாத தேடல்


கடவுளா? பரம்பொருளா?
தெய்வமா? பேருண்மையா?
சிவமா? கண்ணனா?

பூஜையறையில் இருக்கும்
மூவெட்டு உருவங்களா?
இருளா? ஒளியா?
வேகமா? பொறுமையா?
காற்றா? தீயா?
அண்டவெளியா?
ஆகாயமா?
கடலா? நிலமா?
அன்பா? கருணையா?
காதலா?
எது நீ?

எங்கும் நிறைந்திருப்பது
உண்மையென்றால்
ஏன் என் கண்களை
ஏமாற்றும்
இந்த வித்தை உனக்கு

படைப்பின் காரணமே
உன் இருப்பை
பறையறைய
இருக்கவே இருக்கிறது
கோடி உருவங்களில்
உன் படைப்புகள்

சுற்றிக்கொண்டிருக்கிறது பூமி
சுட்டுக்கொண்டிருக்கிறது சூரியன்
சுகமாய் வீசிக்கொண்டிருக்கிறது
என்றென்றும் தென்றல்


என்னேரமும் துளைத்து
துண்டாடும் என் கேள்விகள்...

பதில்லில்லா மௌனமே
உனக்கு எப்போதும்...

என் நேரமின்மையும்
இடைவெளியில்லா
வேலைகளும் - எனை
உன்னிடமிருந்து பிரித்து
வைப்பதாயில்லை
கொழுந்து விட்டெரியும்
நெருப்பாய் எரிந்து
கொண்டிருக்கிறது
தேடல்

சில நேரம் உணர்கிறேன்
உன் இருப்பை
ஆனாலும் அறிவுக்கு
புரியவில்லை

நேரத்தின் நீட்சியாகவும்
சுருக்கமாகவும்
உன் பிரும்மாண்டத்தை
ரசித்தபடி நான்...

தனக்கு தானே கேள்விகளும்
பதில் சமாதனங்களும்
பின் சமரசங்களும்
செய்து கொண்டபடியே
தொடர்கிறது
கிடைக்கும் வரை நிறுத்தாத
சங்கல்பத்துடன்
என் முற்றுப்பெறாத தேடல்....

27 ஜனவரி, 2011

என்னுள் எத்தனை மாற்றங்கள்?


மூன்றுக்கு அடுத்த
பரிமாணம்
உணர்ந்து பார்த்து
விட
முக்காலமும் முயற்சி
நேற்று என்பது
இனியில்லை
நாளை என்பது
எப்போதும் நாளையே
நாளை என்பது
இன்றாகும் போதே
நாம் அதில்
வாழ்ந்திருப்போம்
இன்றில் இப்போதில்
வாழக் கற்றுக்கொண்டால்
வாழ்க்கையை
அள்ளிப்பருகலாம்
விண்னை
மட்டுமே ரசித்த
வெளிச்சத்தை
மட்டுமே ரசித்த
மலர்களை
மட்டுமே ரசித்த
அழகை
மட்டுமே ரசித்து
உவகை கொண்ட உள்ளம்
இப்போது
மண்ணையும்
இருளையும்
முட்களையும்
விருப்பத்தையும்
விருப்பமின்மையையும் கூட
அப்படியே ஏற்றுக்கொண்டு
கொண்டாட
ஆரம்பித்ததென்ன?
என்னுள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்?

24 ஜனவரி, 2011

மறுபடியும் ஒரு அழகான கடற்கரை மாலைப்பொழுது....

மெத்தென்ற பச்சைப்
புல்வெளி...
கண்ணுக்கெட்டிய
தூரம்வரை...
அந்தி நேர ஈரக்காற்று...
பறக்கும் பட்டங்கள்...
புதுமையாய்
வண்ணங்களும்
வடிவங்களும்...
பறக்க விடுவதே கருத்தாய்
ஒரு நூறு மனிதர்கள்...
கூடவே விளையாடும்
சிறுவர்கள்...
கடற்கரை ஒரத்தில்
மனதை வசீகரிக்கும்
மாலைப்பொழுது...
பல கடற்கரை பொழுதுகளில்
இதுவும் ஒன்றானாலும்...
இது புதுமை...
பார்வையாளினியாய்
பார்ப்பதை விடுத்து
களமிறங்கியதில்...
பட்டத்தோடு பரிச்சியம்....
அது உயர உயர பறக்க
கிடைத்த பரவசம்...
மறுபடி அது கீழேவிழ
மடிந்து போகும் அகம்பாவம்...
காற்றும் நம் விரல்களும்
ஒருங்கினைந்து விளையாட
காற்று விசும் திசையை
உணரும்  நுட்பத்தை...
என்னேரமும் அறிய
உண்டாகும் விழிப்புணர்வு...
படித்த பல புத்தகங்களில்
கிடைகாத அனுபவம்...
எதுவாய் இருந்தாலும்
களமிறங்கி
விளையாடிப்பார்ப்பதும்...
அதில் அமிழ்ந்து விடுவதும்...
புத்தகம் படிப்பது போலவே
சுவரஸ்ய வரங்கள் தான்...
பிடித்தது பிடிக்காதது
என பகுத்து பார்த்து
சிலவற்றில் சிக்கிக்கொண்டு...
பலவற்றை ஓரம் வைக்காமல்...
பிடிக்காததையும்
விருப்பத்துடன்
செய்து பழகினால்...
உள்ளே உறுதிபடும் ஒன்று
மனமா? அறிவா? புத்தியா? உடலா?
சரியாகத்தெரியவில்லை...
ஒரு மகத்தான பாடம்.
மனதில் பதிய வித்திட்ட
அழகான மாலைப்பொழுது....

4 ஜனவரி, 2011

காதல் கொள்...

{என் ஆன்மிகத் தேடல் பயணத்தில்
என்னை நானே அடித்து கொண்ட சவுக்கடி}

அன்பிடம்
காதல் கொள்
அன்பின்மையிடமும்
காதல் கொள்
முழுமையிடம்
காதல் கொள்
வெறுமையிடமும்
காதல் கொள்
கருணையிடமும்
காதல் கொள்
கருணையின்மையிடமும்
காதல் கொள்
திமிர் போர்த்திய பயத்திடம்
காதல் கொள்
கோபம் போர்த்திய ஏமாற்றத்திடமும்
காதல் கொள்
நிறைவு போர்த்திய துன்பத்திடமும்
காதல் கொள்
உணர்வின்மை போர்த்திய சுயவிரக்கத்திடமும்
காதல் கொள்
தேள் பேச்சு போர்த்திய பொறாமையிடமும்
காதல் கொள்
பந்தா போர்த்திய குற்ற உணர்ச்சியிடமும்
காதல் கொள்
தன்னடக்கம் போர்த்திய செருக்கிடமும்
காதல் கொள்
தைரியம் போர்த்திய பயத்திடமும்
காதல் கொள்
அலட்சியம் போர்த்திய எதிர்பார்ப்பிடமும்
காதல் கொள்
எதுவுமே போர்த்தாத அழுகையிடமும்
காதல் கொள்
கலப்படமே இல்லாத மகிழ்வுடனும் முற்றாக
காதல் கொள்
அத்தனையும் கலந்த கலவையான மனதிடமும்
காதல் கொள்
அது செய்யும் சேட்டைகளை
செயப்படுபொருளாக இல்லாமல்
தள்ளி நின்று பார்த்து பிரமித்து
காதல் கொள்
உன் மனதை காதல் கொள்
உன்னிடமே காதல் கொள்
உன் நீட்சியான பிற உயிர்களையும்
காதல் கொள்
செய்யும் செயலை காதல் கொள்
பலன் வருமுன்பே
செயல் செய்த நிறைவை
காதல் கொள்
மஹாபாரத கிருஷ்ணன் கூறிய
பலனை எதிர்பாராமல்
கடமையை செய்தல்
இதுவே
ஆகவே காதல் கொள்
உன்னையும் பிறரையும் கூட
காதல் கொள்
காதலாகவே மாறிவிடு....
அமைதியா அமைதியின்மையா
இன்பமா துன்பமா
எல்லாம் ஒன்றே உணர்ந்து விடு...

10 டிசம்பர், 2010

மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....

பொதுவாக படிப்பது என்றாலே குதூகலமான செயல் எனக்கு. அதிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பேஷன் மாறுவதைப்போல என் அபிமானமும் புல் தாவரத்திலிருந்து ஏரொ நாட்டிகல் தொழில்னுட்பம் வரை ஒன்று விடாமல் ஓயாமல் தாவுவதுண்டு. அதற்கேற்றார்போல் சிங்கை தேசியக் கிளை நூலகமும் பத்து நிமிட நடையில் சென்றடையும் இடத்திற்கு தானாகவே இடம்பெயர வீட்டை விட்டு இறங்கினால் கால்கள் தாமாகவே அங்கு தான் செல்கின்றன. சமீப காலமாக ஆன்மிகம் கவனமீர்க்கிறது.
  • தன்னை உணருதல் என்றால் என்ன?
  • நம் யுனிவர்ஸ் தோன்றியது எப்படி? (பெரு வெடிப்பு கொள்கை-big bang theory என்னை சமாதானப்படுத்தவில்லை) அப்படியே இருந்தாலும் ஏன் தோன்றியது?
இவைதான் இப்போது என்னைக்குடையும் கேள்விகள். அவை பற்றிய நூல்களையும் வலை உலாவிலும் தேடியதில் கண்ணில் பட்டது எழுத்தாளார் பாலகுமாரனின் சிந்தனைகள்...
முதல் கேள்விக்கு இந்த கருத்துக்கள் உதவும். நம்மை நாமே அறிந்து கொள்ள இவை ஆற்றும் பணிகள் கொஞ்சமல்ல. அவற்றில் சில...

  • மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
  • தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்
  • மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை. மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
  • உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.
  • ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.


  • எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
  • தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
  • கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
  • அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்


    உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.

    மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்



  • எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

    .
    மேலும் படிக்க...
தேடல் தொடரும் வரை இடுகைகளும் தொடரும்.