வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஏப்ரல், 2011

மனதில் விழுந்த சாட்டையடி

சென்ற வாரம் மழையில்லாத ஒரு மாலையில் பிள்ளையை பூங்காவில் விளையாட விட்டு அமர்ந்திருந்தேன். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் சென்று அதிலேயே மூழ்கி படித்துக் கொண்டிருந்துவிட்டு நேரம் முடிந்தவுடன் திரும்பி வந்து விடுவது உண்டு. அன்று கையில் புத்தகம் இல்லை. பேசுவதற்கும் யாரும் தென்படாததால், பார்வை அங்கிருந்த அனைவரின் மேலும் ஓட ஒரு சிறுமியின் செயல்கள் எனை ஈர்த்தது.

ஏறக்குறைய பத்து வயதிருக்கும் அவளுக்கு, தன் உயரம் இருந்த தன் சகோதரனை சுமந்து கொண்டு வந்தாள். கயிற்றில் கட்டப்பட்ட விளையாட்டு தீமின் ஒரு புறத்தில் அமரச் செய்து, ஒவ்வொரு அடியாக எங்கு வைக்க வேண்டும் என சொல்லித்தந்து அவன் தடுமாறி விழப்போன போதெல்லாம் தாங்கிப் பிடித்து, அவன் தயங்கிய போதெல்லாம் முடியும், முடியும் என் ஊக்கம் கொடுத்து, அவன் அதில் மறு முனைக்கு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பின் மறுபடியும் சுமந்து சென்றாள். ஒரு கனம் கூட அவள் முகம் சுளிக்கவில்லை. அவன் மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அந்தக் காட்சியை பார்த்ததும் என்னுள் என்னவோ மாற்றம்.

அந்த சிறுமிக்கு இந்த சிறிய வயதில் எவ்வளவு பொறுமை, மன முதிர்ச்சி, பாசம், அந்தக் கண்களில் தெரிந்த தாய்மை உணர்வு எல்லாம் சேர்நது என் மனதில் ஒரு சாட்டையடி விழுந்தது போலிருந்தது.

எவ்வளவு பெரிய பொக்கிஷமான வாழ்க்கையை ஒன்றுக்கும் பிரயோசனமில்லா விஷயங்களுக்காக வருந்தி வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு மேலிட்டது. சிறுவயதில் தம்பியுடன் சண்டையிட்ட காலங்கள் கண்முன் தோன்றி அதை அதிகப்படுத்தியது. நன்றாகவே படிக்கும் பிள்ளையை, அவன் முயற்சியை பாராட்டாமல் முதல் மதிப்பெண் எடுக்கச்சொல்லி வருத்துவதிலிருந்து அனைத்தும் நினைவுக்கு வந்து கலவரப்படுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம், யாருக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று எப்போதும் ஒப்பீடு செய்யும் மனதை சாட்டையடி வாங்கிய மனம் கேள்வி கேட்டது.

இனிமேல் பிள்ளைகளை அடிக்கவே கூடாது எனும் தீர்மானம் மனதில் நிறைவேறியது. இனியாவது இதை விடாமல் பின்பற்றுவேன் என்று நினைக்கிறேன்.

11 ஏப்ரல், 2011

என் வழி தனீ... வழி!

மளிகையும், காய்கறியும் ஸ்டாக் தீர்ந்து விட்டதால், அந்த வாரயிறுதி  நாள் குடும்பத்துடன் முஸ்தஃபா போகலாம் என முடிவாயிற்று. சிங்கப்பூரிலேயே பெரிய இந்திய ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ். உள்ளே சென்றால் வெளியே வருவதற்குள் நடந்தே சோர்ந்து விடுவோமென்றாலும் அத்தனை பொருட்களையும் ஒரே கடையில் வாங்கலாம் என்பதால் வேறு எங்கும் செல்ல பிடிப்பதில்லை. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கு போய் கோபப்படாமல் வருவது என்பது பெரிய விஷயம் தான். அங்கும் இங்கும் ஓடி கண்மறைய, போய் விளையாடி அவ்வப்போது பயமுறுத்தும் பிள்ளைகளை அடிக்காமல் திட்டாமல் அரவணைக்க இன்னும் முயற்சிக்கிறேன். 
அன்றும் என் சின்ன மகன் ஒரு ஷாக் கொடுத்தான். நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லாததால் ஷாக்கின் வாட்ஸ் மிதம். பக்கத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று காணவில்லை. கூப்பிட்ட குரலுக்கு பதிலில்லை என்றதும் பதறி தேட ஆரம்பிக்க மூன்று நிமிடங்களுக்கு பிறகு சாவகாசமாக ஏன் கத்துற என்ற பார்வையுடன் பெரிய மனிதனாட்டம் வந்து நின்ற அழகு இருக்கிறதே, எனக்கு அப்பாடா என்றிருந்தது. பட்ட டென்ஷனுக்கு "எங்கடா போய்ட்ட, கூப்பிட்டா ஏன்னு கேக்கமாட்டே, எங்கயாவது போய்ட்டா எப்படி வழி கண்டுபிடிச்சு இங்க வருவ?" என நான் படபடக்க,
 கொஞ்சமும் பதட்டமில்லாமல் அவன் சொல்லியது என்னை அதிசயிக்க வைத்தது அது "என் வழி தனீ வழி". பார்ப்பதெல்லாம் பே ப்லேடும், ஜெரோனிமோவும் என்றாலும், இந்த தமிழ் திரைப்பட வசனங்கள் எங்கிருந்து கற்கிறான் என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது. நர்சரி பள்ளியில் பயிலும் குழந்தை, எப்போதோ பார்த்த வசனங்களை நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியம் தான்.

28 ஜனவரி, 2011

நித்தியின் சாகசங்கள் - 1

எந்த சட்டையை போட்டுவிட எடுத்தாலும் அதிலிருக்கும் அளவு எழுதிய சீட்டை வெட்டி எடுத்தால் தான் போட்டுக்கொள்வேன் என அடம் பிடிப்பான் என் 3 வயது சின்ன மகன். என்னவோ அது அவனை ரொம்ப தொந்தரவு செய்கிறது போலும். முன்பெல்லாம் கோபப்பட்டு வேண்டாமென சொல்லி, தோற்று சரி என வெட்டி விட்டு, போட்டு விட ஆரம்பித்து விட்டேன்.  நேற்று போட்டுக்கொள்ள சட்டை எடுத்து வைத்து விட்டு குளித்து முடித்து வந்த எனக்கு அதிர்ச்சி. தரையில் வெள்ளை வெள்ளையாய் என்னெவோ கிடக்க கையில் சமையலரை  கத்தரிக்கோலுடன் இவன் மும்முரமாக வெட்டிகொண்டிருந்தான். என்ன செய்யுறே என்றால், மம்மீ இது பேப்பே (அவன் பேப்பரை அப்படித்தான் சொல்வான்) கட் டு மம்மி. என்று பதில் சொல்லி மறுபடியும் அவன் குனிய, அய்யோ அது அடிடாஸ் டீ ஷர்ட் டா வெட்டிடாத என்று சொல்லி கையை பிடித்து நிறுத்தி பார்த்தால் அதற்கு முன்பே மூன்று வெட்டுக்கள் வாங்கி பல் இளித்து கொண்டிருந்தது அந்த டீ ஷர்ட்.  கோபத்துக்கு மேல் வெடித்துக் கொண்டு வந்தது சிரிப்பு தான். அய்யோ நல்ல சட்டையை இப்படி வெட்டிட்டே பாரு என்று  நான் காட்ட, அப்போது கூட சரியாக வெட்டாமல் மிச்சம் நீட்டிக்கொண்டிருந்த பேப்பரை காட்டி சரியாக வெட்ட முடியவில்லலையே என்று கவலை கொண்ட அந்த பிஞ்சு முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அதன் பின் சட்டையில் இருந்த கிழிசல்களை பார்த்த அவன் அடாடா என்றான். இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு முன் என்றால் எப்படி நடந்து கொண்டிருப்பேனோ! குறைந்தது ஒரு அடியாவது வாங்கியிருப்பான். மனதின் மாற்றங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்த மற்றுமொரு இனிய தருணம். 

11 ஜனவரி, 2011

சனா சனா ஈசீ ஈசி...

வழக்கம் போல ஒரு நாள், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து நிறைய பொருட்களை எடுத்து பரப்பி விட்டு சரி செய்து அடுக்கும் வேலை. இன்று ஒரு அறையிலிருக்கும் அத்தனை பொருட்களும் வேகமாக தரையில் கிடத்தப்பட (பெரும்பாலும் இப்படித்தான் எதை ஆரம்பித்தாலும் அதனுள் சென்று விடுவதே இயல்பாகவும் அதுவே சில சமயம் நன்மையாகவும், தீமையாகவும் மாறிவிடுவதும் உண்டு) என் பெரிய மகன் என்றோ பார்க்க கிடைக்ககூடிய சில அபூர்வமான சாமங்களை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்க, 
வழக்கம் போல் நான் பொறுமை இழந்து எந்த உதவியும் இல்ல என் வேலையையும் லேட் பண்ற என்று உச்ச கதியில் ஆரம்பிக்க,  இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு குரல், " சனா சனா ஈசி ஈசி" " கூல் கூல்" என்று. திட்டு வாங்கிக்கொண்டிருந்த பெரிய மகன் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க அப்புறம் தான் இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் புரிந்தது எனக்கு. போய் தூங்கு என்று சொன்னவுடன் தலையை தொங்க போட்டுக்கொண்டு மனமில்லாமல் 
கட்டிலுக்கு நடையை கட்டிய சின்ன மகன் (3 வயது) திடீரென என்னருகில் வந்து சொன்னது தான் சனா சனா ஈசி ஈசி..... சரியாக பேசவர வில்லையென்றாலும் எப்போதுமே எல்லாவற்றையும் கூர்ந்து கவனிததபடி இருப்பான். ரோபோ படத்தை பல முறை பார்த்து அந்த டயலாக் எல்லாம் மனப்பாடம். படத்தில் ஐஸ்வர்யா வரும் போதெல்லாம் மம்மி மம்மி என்று அவன் அப்பாவை வெறுப்பேற்றியது போதாது என்று இது வேறா கடவுளே!!      

5 ஜனவரி, 2011

வெறுமை


எப்போதும் என் கழுத்தைக்
கட்டிக்கொண்டிருக்கும்
உன் கைகள்

அம்மா அம்மா என்றழைக்கும்
உன் இனிய குரல்

என்னைத்தூக்கியே
வைத்துக்கொள்
என்று கேட்கும்
உன் நீட்டிய கைகள்

நொடிக்கொரு முறை
அம்மாவை பார்த்து
இங்கு இருப்பதை
உறுதிபடுத்திக்கொள்ளும்
ஜாக்கரதை உணர்வு

மூன்று வயதிலும்
புட்டியில் பாலை
அம்மா மடியில் படுத்து
குடிக்க காத்திருக்கும்
அந்த பொறுமை

உன் தீராத விளையாட்டில்
திக்குமுக்காடிப்போகும் நான்

உன் வம்பில்
கோபம் தலைக்கேறி
சத்தமிட ஆரம்பித்தால்

அமைதியாய் அருகில் வந்து
அம்மா என்று அடிக்குரலில்
நீ செய்யும் சமாதானம்

இத்தனை நாட்கள்
நான் உன்னை
பார்த்துக்கொண்டேனா?
நீ என்னை
பார்த்துக்கொண்டாயா?

உன்னை மழலையர்
பள்ளியில்
விட்டு வெளியில்
நான் அழுகிறேன்

உன் முகம்
வாடியிருக்குமோ
வெளியில் நின்று
கதவிடுக்கில்
பார்க்கிறேன்

வீடுவர மனமேயில்லாமல்

அங்கேயே
ஒரு மணி நேரம்
சுற்றுகிறேன்.


நீ விளையாடுவதை பார்த்து
வீடுவந்த பின் தான் தெரிகிறது

ஒரு மணி நேரம்
ஓய்வு கிடைக்காதா
என ஏங்கிய நாட்கள் போய்

நீ இல்லாத இந்த நேரம்

வெறுமை சூழ்ந்து

தித்திப்பே இல்லாத
சர்க்கரை போல்

கசப்பே இல்லாத
பாகற்காய் போல்

உன் சத்தம் இல்லாத வீடு
அமானுஷ்ய அமைதியாய்

இந்த மூன்று மணி
நேரப்பிரிவு
யுகயுகமாய் நீள

தாங்கமுடியாமல்
தவிக்கிறேன்

கண்ணே உனக்கேனடா
இவ்வளவு அவசரமாய்
மூன்று வயது
முடிந்தது?

8 டிசம்பர், 2010

நேரத்திலிருந்து காணாமல் போகிறேன்

குளிர் காற்றும்

இருண்ட மேகங்களும்

சலசலக்கும் நெற்பயிர்களும்

பொங்கும் சுழிநீரும்

கரைவரை தொட்டுக்கொண்டு

தளும்பித் தளும்பி

வளைந்து ஓடும் நதியழகும்

ச்சோவென்ற மழையும்

நடுங்கும் குளிரும்

வேகமான வழிப்பயணமும்....

என்றோ எங்கோ


எதற்கோ என்னவோ தேடப்போய்

வேறு எதுவாகவோ

மாறிவிட்டதைப் போல்
ஓர் உணர்வு!

மழையில் மழையாகிறேன்

தீயில் தீயாகிறேன்

காற்றில் காற்றாகிறேன்

மேகத்தில் மேகமாகிறேன்

வானத்தில் வானமாகிறேன்

வெற்றிடத்தில் வெற்றிடமாகிறேன்

ஆகவில்லையென்றாலும்

ஆகிடவே விழைகிறேன்

ஒரு மணித்துளிக்குள்


இவ்வளவு யுகங்களா?

ஒரிரு வினாடிகளுக்கு

இத்தனை நீட்சியா?

ஒரு முழு நாளுக்கு

இவ்வளவே நொடிகளா?

என்னுள் என்னென்னவோ

மாற்றங்கள்....

அவ்வப்போது நேரத்திலிருந்து

காணாமல் தான் போகிறேன்...

19 நவம்பர், 2010

தியான லிங்கம்

தீராத தாகமும்
ஓயாத தேடலும்
எனை துளைத்தெடுக்கும்
கேள்விகளும்
ஏது செய்தாலும்
கிடைக்காத நிறைவும்
கணப்பொழுதும் நீங்காத
செய்ய வேண்டியதை
செய்யாமலிருப்பது போன்ற
குற்ற உணர்வும்
சதா எனை ஆட்டிப்படைக்க
என்ன தேடுகிறேன் என்ற
தெளிவே இல்லாமல்
தேடுவதும்
இங்கு தான் எங்கோ
இருக்கிறது வழி
தேடு தேடு என்று
மனம் கட்டளை இடுவதுமே
வாழ்க்கையாகி போனது
இவற்றிலிருந்து தப்பிக்க
நானாக இழுத்து
விட்டுக்கொண்டிருக்கும்
புதிய வேலைகளும்
சீக்கிரமே அவையும்
அலுத்து விடுவதும்
என்றுமே அலுக்காத
புத்தகம் படிக்கும்
பழக்கமும்
ஒவ்வொரு தேடலுக்கும்
முடிவுண்டு நிச்சயமாக
என்ற எண்ணமும்
வீண் போகவில்லை
கையில் கிடைத்தன
காட்டுப்பூ
அத்தனைக்கும்
ஆசைபடு
ஆயிரம் ஜன்னல்
எனும் நூல்கள்
தியான லிங்கத்தையும்
சத்குருவையும் பார்க்க
ஆவல் வந்தது
அதற்கான நேரமும்
கூடி வந்தது
என்னவோ விஞ்ஞானம்
எதுவோ என்னை ஈர்த்தது
தினம் ஒரு மணி நேரம்
போராடியபின் அடையும்
தியான நிலை
தியான லிங்கத்தின்
சன்னதியில்
இரு நிமிடங்களில்
கிடைத்தது
பேரமைதியும்
பயமேயில்லாத
மனமும்
என்னவோ ஒரு
அசெளகர்யமும்
சத்குருவின்
தரிசனத்தின் போது
உணர நேர்ந்தது
சந்தேகத்துடன் சில சமயம்
கண்மூடித்தனமாக சில சமயம்
கடவுள் பக்தி உள்ளதால்
கடவுளாக யாரையுமே
ஏற்றுக்கொள்வது
சாத்தியமேயில்லை எனக்கு
நல்ல ஒரு வழி காட்டியாக
உணர்கிறேன் த்குருவை

30 செப்டம்பர், 2010

நிறைந்த நிறைவிலி..

எதுவுமே போதாது போல
என்ன செய்தாலும்
நிறைவேயில்லாத மனம்...

எப்போதும் எதையாவது
செய்யாமல் இருப்பதே
தவறு போல் ஏங்கும்...

எதை ஆரம்பித்தாலும்
கால நேரம்
மறந்து அதனுள்
சென்றுவிடும்
சிறு குழந்தை போல்...

மீண்டு வந்தபின்
இவ்வளவு நேரம்
மற்ற வேலைகள்
செய்யவில்லையே
என ஏங்கும்...

நிகழும் நொடிகளை மட்டுமே
தொடர ஆரம்பித்த பின்
அட என்ன இது
இப்படி சமத்துக் குழந்தை
போல் சத்தமில்லாமல்
அலைபாயாமல்
அழகான பரிணாமத்தில்
அதே மனம்.

16 செப்டம்பர், 2010

யோகா

யோகா என்றால் ஒரு தனி மதிப்பு இருக்கிறது, மற்ற உடற்பயிற்சிகள் போலில்லாமல் உடலையும், உள்ளுறுப்புகளையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பயிற்சியாக அது அமைகிறது. எந்த வயதினரும் செய்யக்கூடிய பயிற்சிகள் அதில் உண்டு . நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்காக வாழ்வில் சாப்பிடுவது தூங்குவது போல இதையும் ஓர் அங்கமாக பிடிவாதாமாக மாற்றிக்கொள்ளுவது மட்டுமே. இதனால் கிடைக்கும் பலன்கள் எண்னற்றவை. இதை தொடர்ந்து செய்து வருவோரை பார்க்கும் போது  நாம் உணரலாம். இவையெல்லாம் நமக்கு நன்றாக தெரிந்தும் தினமும்  நம் வாழ்வில் கடைபிடிப்பதில்லை. அதை தட்டிக்கழிக்க ஆயிரம் காரணங்கள். யோக பயிற்சி மட்டும் நம் வாழ்க்கை முறையானால் வாழ்வே இனிமையாக மாறிவிடும்.

2 செப்டம்பர், 2010

காலம்

கடந்த காலமெனும்
நினைவுகளிலும்

எதிர்காலமெனும்
கற்பனைகளிலும்

நிகழ்காலமெனும்
நிஜத்தை

நின்று ரசிக்காமல்
ஓடி ஓடி எதையோ
தேடுகிறோம்

எதைத்தேடுகிறோம்
என  நினைத்துப்பார்த்தால்
பணம், பதவி, சொத்து,
வெற்றி, அங்கிகாரம்
இப்படி
ஏதுவோ ஒன்று

கிடைத்ததா? என்றால்
இல்லவே இல்லை

கிடைத்தாலும்
அதை  நினைக்க
நேரமேயில்லை

ஒன்றன் பின் ஒன்றாக
நம் இலக்குகள்
மாற மாற

தேடல் மட்டும்
ஓய்ந்தபாடில்லை

தேடலும் ஓடலும்
தவறேயில்லை
வாழ்வின் ஒளியே
அவைதான்

நிகழ்காலமெனும்
நிஜத்தில்
நின்று
நிதானமாய்

கடந்த காலத்தில்
இருந்து பாடத்தையும்

எதிர்காலத்திலிருந்து
இலக்கையும்

தவிர வேறெதையும்
நிகழ்காலத்தில்
சுமக்காமல்

வாழ்வை ரசிப்போம்
ரசித்தபடியே
ஓடுவோம்
தேடுவோம்

வெற்றியை
கொண்டாடுவோம்

3 ஜூலை, 2010

தேடல்...

முடிவில்லா அலைவரிசைகளின்

அணிவகுப்பு காற்றில்....

அளவில்லா வாகனங்களின்

அணிவகுப்பு வீதியில்....

கணக்கில்லா தூசுகள்...

விதவிதமான ஒலிகள்

காதில் ஒலித்தபடி...

எண்ணிலடங்கா

எண்ணங்கள் மனதில்...

அமைதி தேடி...

ஓடி ஓடி

சோர்ந்து... தளர்ந்து...

ஒரு நாள் வரும் அமைதி

அதுவரை ரசித்திருப்போம்

நம் ஆராவாரத்துடனேயான

அமைதியின் தேடலை....

10 ஜூன், 2010

விளம்பரங்கள் படுத்தும் பாடு......

பழைய சின்ன மிதிவண்டியை எடுத்துக்கொண்டு சீர் செய்ய கிளம்பினார்கள் அப்பாவும் இரு பிள்ளைகளும். கடையில் புதிய மிதிவண்டி வாங்கைக்கொள்ளுங்கள், பழையதை சரி செய்ய இதில் பாதி பணம் வந்துவிடும் என்று சொன்னதால் இரண்டையும் எடுத்துக்கொண்டு வீடு வந்தனர். சின்ன பிள்ளைக்கு ஏக கொண்டாட்டம். சரி பழைய வண்டியை இப்போது என்ன செய்யலாம் என நான் கேட்க, பெரிய மகன் உடனே நகைகளை வாங்கிக்கொண்டு பணம் தரும் இரு பிரபல நிறுவனங்களின் பெயரைச் சொன்னான். எதுக்கு டா அந்த பெயரையெல்லாம் சொல்ற என்றேன், இல்லம்மா அங்க சைக்கிளை கொடுத்தால் பணம் தருவாங்க.. என்றான்.

ஏன் ரொம்ப கவலையா இருக்கே?
எனக்கு பணம் வேணும்?
அதுக்கு தான் ‘-----‘ இருக்கே, கவலையவிடு!

என்பதான தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த குழந்தைகளை படுத்தும் பாடு அப்பப்பா...

சிரித்து முடித்து, அவனுக்கு விளக்கி முடித்தபின் ஒரே வருத்தமாகி விட்டது. ஒரு முறை பார்த்தாலே பதிந்துவிடும் குழந்தைகள் மனதில் பல முறை இது போல் பதியவைத்தால் விளைவு??

31 மே, 2010

வலையுலக நேரம்...

சுட்டிகள் பின்னே  என்
வலையுலக பயணம்
கட்டணம் பணமாயில்லை
நேரமாக மட்டுமே
நேரத்தை வேலை செய்து
பணமாக்கலாம்...
பணத்தை ஏது செய்தும்
நேரமாக்க முடியாது...
பிள்ளைக்கு பள்ளி விடுமுறை...
வசதியாக  என் நேரம்
வலையுலகில் அதிகரித்தபடி....
 என் வீட்டு சுட்டிகள்
தொலைக்காட்சியின் முன்
நானோ கணினிக்கு
என்னை அர்பணித்த படி...
இல்லை இனி இது இப்படியில்லை..
மாற்றுவேன் என
முடிவு செய்தேன்
போன விடுமுறையை
போலவே...

29 மே, 2010

அமைதி

தெள்ளிய நீர் போல
ஒர் அதிர்வுமின்றி
அமைதியாய்
நின்றிருக்கிறது
மனப்பரப்பு

நெடுங்காலம்
கழித்து ஒரு
பேரமைதி

சிந்தனைகளின்றி
நிச்சலனமாய்
மனதின் மேற்பரப்பு

எண்ணங்களெல்லாம்
யோசனையில் ஆழ்ந்திருக்க
எப்போதும் ஓடிக்கோடிருக்கும்
அந்த மனக்குதிரை
சத்தமே இல்லாமல்...

சோர்ந்து விட்டதா?
ஓடிப்பயனில்லை
என தெரிந்து கொண்டு விட்டதா?

மெல்லிய இசையில்
மயங்கி விட்டதா?

மழைவிட்ட வானம் போல்
தெளிவாய்....

கழுவி விட்ட தரை போல்
புதிதாய்...

வயிறு நிறைந்த குழந்தை போல்
திருப்தியாய்...

நீர் விட்ட செடி போல்
வளமாய்...

தொடர்ந்து தோற்கும் என்
மனக்குதிரை நிறுத்தப்
போராட்டங்கள்
ஓய்ந்து போன நேரம்...

மாற்ற தேவையில்லா
சிறிய விஷயங்களும்

மாற்ற முடியாத
பெரிய விஷயங்களும்

தெரிந்து தெளிந்த
அலைகளில்லா கடல் போல...
அத்திப்பூ போல...
ஆர்பாட்டம் இல்லா
பேரணி போல...
அமைதியில் என் மனம்..

26 மே, 2010

செய்திகள் வாசிப்பது... .......

சோதனையாக நானும் உரை நடை எழுதி எல்லோரையும் ஒரு வழி பண்ணுவதாக முடிவு செய்து விட்டேன். படித்து
விட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடுங்கள் (எல்லாம் ஒரு விளம்பரம் தான் :))
இல்லங்க அப்படியெல்லாம் பார்க்காதிங்க! இதுக்கு முன்னாடி ஒரு கதை எழுதி சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்துலருந்து (முத்தமிழ் விழா)
பரிசு கூட வாங்கியிருக்கேங்க. நிஜமாதான். ஆஸ்பிரின்லாம்
தேவையில்ல, தைரியமா படிங்க.
சரி சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். நான் ஆச்சர்யபட்ட ஒரு சம்பவம் இது. பெரும்பாலும் பொண்ணு, பையன் யாராவது வெளிநாட்டுல இருந்தா இந்த அப்பா, அம்மாக்கள் விடும் ரவுசு தாங்காது. ஒரு முறை எப்பாடு பட்டாவது போய்ட்டு வந்து சொந்தங்கள் கிட்ட புகைப்படம் காட்டி வெறுப்பேத்துற பெத்தவங்க மத்தியில என்னை பெத்தவங்க ஒரு தனி ரகம். எங்க பொண்ணு வீட்டுக்கு போக சிங்கப்பூர் வேண்டியிருக்குமோன்னு 8 வருஷம் பாஸ்ப்போர்டே வாங்கலைனா பாத்துகோங்க. 9 தாவது வருஷத்துல எப்படியாவது வரவைக்கனும் னு வம்பு பண்ணி எல்லாம் தயார் பண்ணினோம். ஒரு வழியாக வந்து இறங்கினாங்க எஸ் க்யூ விமானத்துல. சரின்னு ஒவ்வொரு இடமா சுத்தி காட்டினோம். ராபிள்ஸ் மெர்லயனை பார்த்து ஃபூ இவளோதானான்னு சொல்லிட்டாங்க. சரி அதாவது பரவாயில்ல, 14 மாடி உயரம்ன்னு சொன்னே இது தம்மாத்தூண்டு  நிக்குது, இதையா மின்னல் வந்து தாக்குச்சு பக்கத்துல இருக்குற கட்டடமெல்லாம் இதை விட உயரமா நிக்குது? அப்படின்னாங்க. அய்யோ அப்பா அது இதில்ல அது செந்தோசா வுல இருக்குன்னு சொன்னேன். அங்க கூட்டிட்டு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தே ன்னு அடுத்த கேள்வி.  
லிஃப்ட் ல வரமாட்டேன் எங்கயாவது இடையில நின்னுடுச்சுன்னா என்னாகுறதுன்னு ஒரே வம்பு. ஆனா ஃபளையர் ல மட்டும் தைரியமா ஏறி சுத்தினாங்க ரெண்டுபேரும். எங்க அப்பா ஒரு என்சைக்ளோபிடியா, அவங்களுக்கு தெரியாத விஷயமே இல்லன்னு சொல்லலாம். அந்த காலத்து M. Sc Mathematics. டெக்னிக்கலா எல்லாம் தெரிஞ்சு வைச்சிக்கிட்டு கலக்குற ஆல் ரவுன்டர். அவங்க ரசிச்ச இடங்கள்னு சொன்னா டிஸ்கவரி சென்டர், சயின்ஸ் சென்டெர் தான்.  அங்க செய்தி வாசிக்குற செட்டிங்க் இருக்கும் நம்ம படிக்குறது விடியோ மிஃஸ் ஆகி அங்க உள்ள தொலைக்காட்சில ஒளிபரப்பகும்.  நிறைய பேர் உக்கார்ந்து படிக்க தயங்கியபடி  நிற்க, எங்க அம்மா (அந்த காலத்து SSLC, ஆனா ஒரு புத்தகம் விடாம நிறைய படித்து நியாபகம் வைச்சிகிட்டு அப்பப்ப எங்களை அசத்துவாங்க GRE பரிட்சை வார்த்தைகளுக்கு கூட அர்த்தங்கள் அவங்கள கேட்டுக்கலாம், இவங்க ஒரு லிவிங்க் டிக்ஷ்னரி)  தயக்கமே இல்லாம நடந்து போய் செய்திகள் வாசிப்பது  நீனா மெராட்டா (அம்மா அவங்க பெயர் தான் சொன்னாங்க நான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்) ன்னு ஆரம்பிச்சு 5 நிமிஷத்துக்கு படிச்சு கலக்கிட்டாங்க. சில திறமைகள் எல்லாம் நம்ம அப்பா, அம்மா என்பதாலயே நம் கண்ணுக்கு தெரிவதில்லை. திரும்பி போகும் போது என்சைக்லோபிடியாவும், டிக்ஷ்னரியும் ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க கேட்டா அசந்துடுவிங்க, அடுத்த முறை நாங்க வரனும்னா தரையோடு வீடு வாங்குங்க இந்த உயரத்துல தங்கறது எங்களுக்கு பிடிக்கலைனு!!! (எங்க வீடு ஆறாவது மாடில இருக்கு).  

19 ஏப்ரல், 2010

சில்லரை

கையில் சில்லரையுடன்

பேருந்து நிலையத்தில்

காத்திருப்பு...


பிச்சை கேட்டு ஓரு

சிறுவன் என் அருகில்...



கிழிந்த ஆடைகளுடன்

தலையில் எண்னெய் இன்றி..



கொடுக்கலாம் தான்

அதன் பின்

நடக்கபோகும் நிகழ்வு??



அங்கிருக்கும் அத்தனை

பிச்சைகாரர்களும் நம்மை

முற்றுகை இடுவதாக..



என் கண்முன்னே

பயமுறுத்த...



சற்றே யோசித்தபடி நான்



அதே கண​த்தில்

என் கையிலிருந்து

ஒரு நாணயம்

தரையில் தேங்கியிருந்த

அழுக்குத்தண்ணீரில்

விழ..



சடாரென குனிந்து

எடுத்தான்..

யோசனையாக என்னை

பார்த்தான்..

நீயே வைத்துக்கொள்

என்றேன்..

சொல்லிவிட்டு நாம் ஏன்

எடுக்கவில்லை..

எவ்வளவு சாமர்த்தியம்

அவனுக்கு..

இனி நடத்துனரிடம்

நூறு ரூபாய்

தந்து சில்லரை வாங்கி

அடக்கடவுளே..



சற்று நேரத்தில்

கையில் அரை அளவு தீர்ந்த

தின்பண்ட பாக்கேட்டுடன்

அவனே தான்..



நிஜமாகவே பசியா??

ஏதோ ஒன்று

அறைந்தது போல்

இருந்தது..



எத்தனை

அம்மா பசிக்குது வை

அலட்சிய படுத்தியிருக்கிறோம்...



இனி இவர்களுக்கென

தனிச் சில்லரை

என் பையில்

எப்போதும் இருக்கும்...

கவலை

தனியார் நிறுவன அறிவிப்பு பலகை.

புதிய அறிவிப்பு:

ஏதேனும் ஒரு காரணம் தேடிப்பிடித்து எப்போதும் கவலைப்படும் ஊழியர்கள் கவனிக்க..

நாள் முழுதும் உங்கள் கவலை வேலையை பாதிக்காமல் இருக்க..ஒரு வழி..

3 மணிக்கு கொடுக்கப்படும் தேனீர் இடைவேளையில் கவலைப்பட நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு 1/2 மணி நேரம் கவலைப்படுங்கள் அது போதும், பின்பு 3.30 லிருந்து சரியாக வேலை செய்ய வேண்டும்..

மீறினால் அபராதம் உண்டு.


இதை பார்த்த பின் வந்த சில கமெண்ட்டுகள்.....

முழு நேரம் கவலைப்படும் அன்பர் 1

"அய்யோ எல்லாத்தையும் விட்டுட்டா அப்புறம் யார் தான் அவ்வளவு கவலையும் படுறது. இதெல்லாம் நடக்கிற காரியமா?"

கவலைப்படும் அன்பர் 2

"டீ குடிக்கும் போது கவலை படுவதா? அட போய்யா சான்ஸே இல்ல. என் மனைவியை இப்பல்லாம் டீ நேரத்துல தொலை பேசாதேன்னு சொல்லிட்டேன்"

கவலைப்படும் அன்பர் 3

"சரி பார்க்கலாம்" , அவ்வப்போது தோன்றிய கவலைகளை ஒத்திப்போட்டு 3 மணி அடித்ததும் யோசித்து பார்த்து

"ஏதோ யோசித்து வைத்தோமே நினைவு வரலையே" என கவலைப்பட்டார்.

கவலைப்படும் அன்பர் 4(வடிவேலு ??!!)

"கொடுக்கிற அரைமணி நேரத்தில லொள்ளைப் பாரு. நான் கவலைப் படுறதையே நிறுத்திட்டேன்ப்பா...அப்பாடி நம்பிட்டாய்ங்க.."

கவலைப்படும் அன்பர் 5


"அய்யோ மூணு மணி வரை கவலைப் பட முடியாதே"

கவலைப்படும் அன்பர் 6

"அப்படியா மற்ற நேரத்துல ஜாலியா இருக்க வேண்டியது தான்"

உழைப்பாளி!!!

கவலைப்படும் அன்பர் 7

இவர் மாத்தி யோசி அன்பர் போலும்...

நிறுவனத்தில் ஊழியர்கள் கவலையில்லாம இருக்கனும்னு தான்

இந்த அறிவிப்பு செய்திருக்காங்க. சபாஷ்!

18 ஏப்ரல், 2010

வாழ்க்கை

வரவேண்டிய மாற்றம்
வந்தே தீரும்...

போக வேண்டிய நாளும்
வந்தே தீரும்...

நம்  நிறுத்தம் வந்தவுடன்
இறங்கி விடத்தான்
போகிறொம் என்றாலும்....

பேருந்தில்
சௌகர்யமான இடம்
பார்த்து அமர்கிறோமே...

இறங்கும் நேரம் வரை
வெளியில் வேடிக்கை
பார்த்து...
ரசித்து...
அடுத்து செய்யப்போகும்
வேலைகளை திட்டமிட்டபடி...

அது போலத்தான்
வாழ்க்கை...

30 மார்ச், 2010

தெளிவு

புத்தகத்தை
முகத்தின் மேல்
கவிழ்த்தபடி
இரவு உறக்கம்

கண் பார்க்கும்
தூரம் வரை
ஏதுமில்லை
ஒரே ஒளி
வெள்ளம்

தூரத்தில்
ஒரு பலகை
அதன் மீது சில
எழுத்துக்கள்

"இதுவரை
 நீங்கள்
என்னவெல்லாம்
எப்படியெல்லாம்
ஆகவேண்டும்
என
நினைத்திருந்த்தீர்களோ
அதுவெல்லாம்
இந்த பலகையை
கடந்தவுடன்
பலிக்கும்"

எப்படி ஆகவேண்டும்
என்று
நினைத்ததை விட
எதுவெல்லாம்
வேண்டாம்
என்று
நினைத்தது
அல்லவா
அதிகம்....
அதுவெல்லாம்
பலித்து விட்டால்......

திகீர் என்றது
திரும்பி விட்டேன்...

இனியாவது என்ன
வேண்டும்
என்பதை
நினைக்கவேண்டும்....
முடிவு செய்தபடி..

ஏதாவது நினைத்து
கவலை கொள்வதையே
பழக்கமாய்
உள்ளவர்கள்
கண்டிப்பாய்
படிக்க வேண்டிய
புத்தகம் இது.
(Excuse me your life is waiting - Lynn Grabhorn)