31 ஜனவரி, 2011

திருமண நாள் வாழ்த்து


 நீ என்னை
விரும்புவதற்காக மட்டும்
நான் உன்னை
விரும்பவில்லை
 எண்ணில்லாத அழகான
இனிமையான
தருணங்களால் என் வாழ்வை
நிறைப்பதற்காகவும்
கூட இல்லை
அன்பாய், இனிமையாய், பரிவாய்
இயல்பாகவே இருப்பதால்
என்னவளிடம் நான் எதிர்பார்த்த
அத்தனை குணங்களுடனும்
நீ நீயாகவே
இருப்பதால்
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்

30 ஜனவரி, 2011

இதுவும் கடந்து போகும்...


எதுவும் மாறலாம்
தலைகீழாகலாம்...

வெண்மையின் கருவில்
கருமையும் வாழலாம்...

வெண்மேகங்கள் நீர் கோர்த்து
கருமேகமாவது போல்...

பின் அமில மழையும்
கொட்டித்தீர்க்கலாம்...

கோரபற்களின் கொடு
தாக்குதலுக்கும் மேல்
வலிமையாக...

நகைச்சுவை எனும்
பேரில் குதறித் துப்பலாம்...

கள்ளமறியா
நேர் சிந்தனையும்
உதவும் உள்ளமும்
மட்டுமே உனக்கு
அரணாயிருந்தாலும்...

தனக்கு வேண்டியதை மட்டுமே
தருவித்து கொள்ளும்
தனித்திறமை கூட்டி
திரிபவர்களிடமிரிந்து
தற்காத்துக் கொள்வதற்காகவாவது

கள்ளம் பழகு
பொய்மை பழகு

மென்மையே வியாபித்திருக்கும்
மனதை கல்லாக்கு

மனதில் இல்லையென்றாலும்
வெறுப்பை உமிழப்பழகு

இளம் பச்சையாய் துளிர் விட்டு
பின் கரும்பச்சையாகி
மஞ்சளாகி காய்ந்து விழும்
இலைகளைப்போல்

இதுவும் கடந்து போகும்...

28 ஜனவரி, 2011

நித்தியின் சாகசங்கள் - 1

எந்த சட்டையை போட்டுவிட எடுத்தாலும் அதிலிருக்கும் அளவு எழுதிய சீட்டை வெட்டி எடுத்தால் தான் போட்டுக்கொள்வேன் என அடம் பிடிப்பான் என் 3 வயது சின்ன மகன். என்னவோ அது அவனை ரொம்ப தொந்தரவு செய்கிறது போலும். முன்பெல்லாம் கோபப்பட்டு வேண்டாமென சொல்லி, தோற்று சரி என வெட்டி விட்டு, போட்டு விட ஆரம்பித்து விட்டேன்.  நேற்று போட்டுக்கொள்ள சட்டை எடுத்து வைத்து விட்டு குளித்து முடித்து வந்த எனக்கு அதிர்ச்சி. தரையில் வெள்ளை வெள்ளையாய் என்னெவோ கிடக்க கையில் சமையலரை  கத்தரிக்கோலுடன் இவன் மும்முரமாக வெட்டிகொண்டிருந்தான். என்ன செய்யுறே என்றால், மம்மீ இது பேப்பே (அவன் பேப்பரை அப்படித்தான் சொல்வான்) கட் டு மம்மி. என்று பதில் சொல்லி மறுபடியும் அவன் குனிய, அய்யோ அது அடிடாஸ் டீ ஷர்ட் டா வெட்டிடாத என்று சொல்லி கையை பிடித்து நிறுத்தி பார்த்தால் அதற்கு முன்பே மூன்று வெட்டுக்கள் வாங்கி பல் இளித்து கொண்டிருந்தது அந்த டீ ஷர்ட்.  கோபத்துக்கு மேல் வெடித்துக் கொண்டு வந்தது சிரிப்பு தான். அய்யோ நல்ல சட்டையை இப்படி வெட்டிட்டே பாரு என்று  நான் காட்ட, அப்போது கூட சரியாக வெட்டாமல் மிச்சம் நீட்டிக்கொண்டிருந்த பேப்பரை காட்டி சரியாக வெட்ட முடியவில்லலையே என்று கவலை கொண்ட அந்த பிஞ்சு முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அதன் பின் சட்டையில் இருந்த கிழிசல்களை பார்த்த அவன் அடாடா என்றான். இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு முன் என்றால் எப்படி நடந்து கொண்டிருப்பேனோ! குறைந்தது ஒரு அடியாவது வாங்கியிருப்பான். மனதின் மாற்றங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்த மற்றுமொரு இனிய தருணம். 

27 ஜனவரி, 2011

என்னுள் எத்தனை மாற்றங்கள்?


மூன்றுக்கு அடுத்த
பரிமாணம்
உணர்ந்து பார்த்து
விட
முக்காலமும் முயற்சி
நேற்று என்பது
இனியில்லை
நாளை என்பது
எப்போதும் நாளையே
நாளை என்பது
இன்றாகும் போதே
நாம் அதில்
வாழ்ந்திருப்போம்
இன்றில் இப்போதில்
வாழக் கற்றுக்கொண்டால்
வாழ்க்கையை
அள்ளிப்பருகலாம்
விண்னை
மட்டுமே ரசித்த
வெளிச்சத்தை
மட்டுமே ரசித்த
மலர்களை
மட்டுமே ரசித்த
அழகை
மட்டுமே ரசித்து
உவகை கொண்ட உள்ளம்
இப்போது
மண்ணையும்
இருளையும்
முட்களையும்
விருப்பத்தையும்
விருப்பமின்மையையும் கூட
அப்படியே ஏற்றுக்கொண்டு
கொண்டாட
ஆரம்பித்ததென்ன?
என்னுள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்?

26 ஜனவரி, 2011

ஓங்கி உரைத்திடும் இயற்கை

ஓய்வின்றி பாய்கிறது
வெள்ளி நீரோடை...
வெள்ளமாய் வீழ்கிறது
மலையருவி...
இருள்பொத்தி அமைதி
காக்கிறது கானகம்...
எல்லாம் கூடி
என்ன சொல்கின்றன?
தணிந்த அசைவுகள்
அன்பு பொங்கும் இதயம்,
சலனமில்லா மனம்,
திமிரும் பெருமிதம்,
ஒப்பிலா இயற்கையில்
எல்லாம் சாத்தியம்!

...இது நான் மிகவும் ரசித்த கவிதை

24 ஜனவரி, 2011

மறுபடியும் ஒரு அழகான கடற்கரை மாலைப்பொழுது....

மெத்தென்ற பச்சைப்
புல்வெளி...
கண்ணுக்கெட்டிய
தூரம்வரை...
அந்தி நேர ஈரக்காற்று...
பறக்கும் பட்டங்கள்...
புதுமையாய்
வண்ணங்களும்
வடிவங்களும்...
பறக்க விடுவதே கருத்தாய்
ஒரு நூறு மனிதர்கள்...
கூடவே விளையாடும்
சிறுவர்கள்...
கடற்கரை ஒரத்தில்
மனதை வசீகரிக்கும்
மாலைப்பொழுது...
பல கடற்கரை பொழுதுகளில்
இதுவும் ஒன்றானாலும்...
இது புதுமை...
பார்வையாளினியாய்
பார்ப்பதை விடுத்து
களமிறங்கியதில்...
பட்டத்தோடு பரிச்சியம்....
அது உயர உயர பறக்க
கிடைத்த பரவசம்...
மறுபடி அது கீழேவிழ
மடிந்து போகும் அகம்பாவம்...
காற்றும் நம் விரல்களும்
ஒருங்கினைந்து விளையாட
காற்று விசும் திசையை
உணரும்  நுட்பத்தை...
என்னேரமும் அறிய
உண்டாகும் விழிப்புணர்வு...
படித்த பல புத்தகங்களில்
கிடைகாத அனுபவம்...
எதுவாய் இருந்தாலும்
களமிறங்கி
விளையாடிப்பார்ப்பதும்...
அதில் அமிழ்ந்து விடுவதும்...
புத்தகம் படிப்பது போலவே
சுவரஸ்ய வரங்கள் தான்...
பிடித்தது பிடிக்காதது
என பகுத்து பார்த்து
சிலவற்றில் சிக்கிக்கொண்டு...
பலவற்றை ஓரம் வைக்காமல்...
பிடிக்காததையும்
விருப்பத்துடன்
செய்து பழகினால்...
உள்ளே உறுதிபடும் ஒன்று
மனமா? அறிவா? புத்தியா? உடலா?
சரியாகத்தெரியவில்லை...
ஒரு மகத்தான பாடம்.
மனதில் பதிய வித்திட்ட
அழகான மாலைப்பொழுது....

11 ஜனவரி, 2011

சனா சனா ஈசீ ஈசி...

வழக்கம் போல ஒரு நாள், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து நிறைய பொருட்களை எடுத்து பரப்பி விட்டு சரி செய்து அடுக்கும் வேலை. இன்று ஒரு அறையிலிருக்கும் அத்தனை பொருட்களும் வேகமாக தரையில் கிடத்தப்பட (பெரும்பாலும் இப்படித்தான் எதை ஆரம்பித்தாலும் அதனுள் சென்று விடுவதே இயல்பாகவும் அதுவே சில சமயம் நன்மையாகவும், தீமையாகவும் மாறிவிடுவதும் உண்டு) என் பெரிய மகன் என்றோ பார்க்க கிடைக்ககூடிய சில அபூர்வமான சாமங்களை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்க, 
வழக்கம் போல் நான் பொறுமை இழந்து எந்த உதவியும் இல்ல என் வேலையையும் லேட் பண்ற என்று உச்ச கதியில் ஆரம்பிக்க,  இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு குரல், " சனா சனா ஈசி ஈசி" " கூல் கூல்" என்று. திட்டு வாங்கிக்கொண்டிருந்த பெரிய மகன் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க அப்புறம் தான் இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் புரிந்தது எனக்கு. போய் தூங்கு என்று சொன்னவுடன் தலையை தொங்க போட்டுக்கொண்டு மனமில்லாமல் 
கட்டிலுக்கு நடையை கட்டிய சின்ன மகன் (3 வயது) திடீரென என்னருகில் வந்து சொன்னது தான் சனா சனா ஈசி ஈசி..... சரியாக பேசவர வில்லையென்றாலும் எப்போதுமே எல்லாவற்றையும் கூர்ந்து கவனிததபடி இருப்பான். ரோபோ படத்தை பல முறை பார்த்து அந்த டயலாக் எல்லாம் மனப்பாடம். படத்தில் ஐஸ்வர்யா வரும் போதெல்லாம் மம்மி மம்மி என்று அவன் அப்பாவை வெறுப்பேற்றியது போதாது என்று இது வேறா கடவுளே!!      

5 ஜனவரி, 2011

வெறுமை


எப்போதும் என் கழுத்தைக்
கட்டிக்கொண்டிருக்கும்
உன் கைகள்

அம்மா அம்மா என்றழைக்கும்
உன் இனிய குரல்

என்னைத்தூக்கியே
வைத்துக்கொள்
என்று கேட்கும்
உன் நீட்டிய கைகள்

நொடிக்கொரு முறை
அம்மாவை பார்த்து
இங்கு இருப்பதை
உறுதிபடுத்திக்கொள்ளும்
ஜாக்கரதை உணர்வு

மூன்று வயதிலும்
புட்டியில் பாலை
அம்மா மடியில் படுத்து
குடிக்க காத்திருக்கும்
அந்த பொறுமை

உன் தீராத விளையாட்டில்
திக்குமுக்காடிப்போகும் நான்

உன் வம்பில்
கோபம் தலைக்கேறி
சத்தமிட ஆரம்பித்தால்

அமைதியாய் அருகில் வந்து
அம்மா என்று அடிக்குரலில்
நீ செய்யும் சமாதானம்

இத்தனை நாட்கள்
நான் உன்னை
பார்த்துக்கொண்டேனா?
நீ என்னை
பார்த்துக்கொண்டாயா?

உன்னை மழலையர்
பள்ளியில்
விட்டு வெளியில்
நான் அழுகிறேன்

உன் முகம்
வாடியிருக்குமோ
வெளியில் நின்று
கதவிடுக்கில்
பார்க்கிறேன்

வீடுவர மனமேயில்லாமல்

அங்கேயே
ஒரு மணி நேரம்
சுற்றுகிறேன்.


நீ விளையாடுவதை பார்த்து
வீடுவந்த பின் தான் தெரிகிறது

ஒரு மணி நேரம்
ஓய்வு கிடைக்காதா
என ஏங்கிய நாட்கள் போய்

நீ இல்லாத இந்த நேரம்

வெறுமை சூழ்ந்து

தித்திப்பே இல்லாத
சர்க்கரை போல்

கசப்பே இல்லாத
பாகற்காய் போல்

உன் சத்தம் இல்லாத வீடு
அமானுஷ்ய அமைதியாய்

இந்த மூன்று மணி
நேரப்பிரிவு
யுகயுகமாய் நீள

தாங்கமுடியாமல்
தவிக்கிறேன்

கண்ணே உனக்கேனடா
இவ்வளவு அவசரமாய்
மூன்று வயது
முடிந்தது?

4 ஜனவரி, 2011

காதல் கொள்...

{என் ஆன்மிகத் தேடல் பயணத்தில்
என்னை நானே அடித்து கொண்ட சவுக்கடி}

அன்பிடம்
காதல் கொள்
அன்பின்மையிடமும்
காதல் கொள்
முழுமையிடம்
காதல் கொள்
வெறுமையிடமும்
காதல் கொள்
கருணையிடமும்
காதல் கொள்
கருணையின்மையிடமும்
காதல் கொள்
திமிர் போர்த்திய பயத்திடம்
காதல் கொள்
கோபம் போர்த்திய ஏமாற்றத்திடமும்
காதல் கொள்
நிறைவு போர்த்திய துன்பத்திடமும்
காதல் கொள்
உணர்வின்மை போர்த்திய சுயவிரக்கத்திடமும்
காதல் கொள்
தேள் பேச்சு போர்த்திய பொறாமையிடமும்
காதல் கொள்
பந்தா போர்த்திய குற்ற உணர்ச்சியிடமும்
காதல் கொள்
தன்னடக்கம் போர்த்திய செருக்கிடமும்
காதல் கொள்
தைரியம் போர்த்திய பயத்திடமும்
காதல் கொள்
அலட்சியம் போர்த்திய எதிர்பார்ப்பிடமும்
காதல் கொள்
எதுவுமே போர்த்தாத அழுகையிடமும்
காதல் கொள்
கலப்படமே இல்லாத மகிழ்வுடனும் முற்றாக
காதல் கொள்
அத்தனையும் கலந்த கலவையான மனதிடமும்
காதல் கொள்
அது செய்யும் சேட்டைகளை
செயப்படுபொருளாக இல்லாமல்
தள்ளி நின்று பார்த்து பிரமித்து
காதல் கொள்
உன் மனதை காதல் கொள்
உன்னிடமே காதல் கொள்
உன் நீட்சியான பிற உயிர்களையும்
காதல் கொள்
செய்யும் செயலை காதல் கொள்
பலன் வருமுன்பே
செயல் செய்த நிறைவை
காதல் கொள்
மஹாபாரத கிருஷ்ணன் கூறிய
பலனை எதிர்பாராமல்
கடமையை செய்தல்
இதுவே
ஆகவே காதல் கொள்
உன்னையும் பிறரையும் கூட
காதல் கொள்
காதலாகவே மாறிவிடு....
அமைதியா அமைதியின்மையா
இன்பமா துன்பமா
எல்லாம் ஒன்றே உணர்ந்து விடு...