19 மார்ச், 2011

டிஷ்யும்...டிஷ்யும்..சண்டை....

வயலருகே சாலையில் இருவர் ரத்தம் வழிய மோதி மிதித்துக் கொண்டிருந்தததை பார்த்த நண்பர் ஒருவர் விசனத்துடன், "என்னடா விஷயம், ஏண்டா இப்படி அடிச்சிக்குறிங்க? என்றார்.
சண்டையிட்டவர் 1, "அட நீங்க வேற, இவன் மாட்டை விட்டு என் வயலில் மேய்ப்பானாம். அதான் நாலு சாத்து சாத்தினேன்."
நண்பர், "நீ ஏண்டா அப்படிச்சொன்னே?"
சண்டையிட்டவர் 2 "அதில்ல அவன் என் வயலுக்கு தண்ணி தர மாட்டேன்னு சொன்னான். அதான்."
நண்பர், "நீ ஏண்டா அப்படி சொன்னே? சரி, இதுல எது உன் வயல்?"
சண்டையிட்டவர் 1,"அதுதான், ஆனா வண்டி ஓட்டி சம்பாதிச்சு இனிமேதான் வாங்கனும்."
நண்பர், "சரி, உன் வண்டி எங்க?"
சண்டையிட்டவர் 1,"அதுவா வேலையில் சம்பாதிச்சு இனி தான் வாங்கனும்"
நண்பர்,"என்ன வேலைக்கு போற?"
சண்டையிட்டவர், "அதுவா, இனிமேதான் தேடனும்."
நண்பர் யோசனையுடன் மற்றவரைப் பார்த்து, "சரி உன் மாடுங்க எங்க?"
சண்டையிட்டவர் 2, "அதுங்களா, இனிமேல் தான் வாங்கனும்."
நண்பர்  (நீங்கள் வடிவேலுவை கற்பனை செய்துகொள்ளலாம்), "ஒன்னுமே இல்லாதத்துக்காடா இப்படி அடிச்சிகிறிங்க? ஏண்டா?, ஏன்?, போய் பிழைப்பை பாருங்கடா." தலையில் அடித்தபடி நகர்கிறார்.
இது சின்ன வயதில் தேவையில்லாமல்  நானும் என் தம்பியும் சண்டைபிடித்த நேரங்களில் எங்கள் அப்பா சொல்லும் குறுங்கதைகளில் ஒன்று.

தெளிவுற சிந்திக்க கற்றுத் தந்தமைக்கு நன்றி அப்பா!

18 மார்ச், 2011

நடை பயணம்

காற்று இறங்கிய
வாகனம்
தொலைதூர நடைபயணம்
தொடர்ந்து காடுகள்
மலைகள்
இரவுப்பொழுது
இருபுறமும் வானுயர்ந்த
மரங்கள்
சாலைகளோ மேட்டிலிருந்து
பள்ளத்திற்கு
உருளும் பக்குவத்தில்
அரைமணிக்கொரு முறை
கடக்கும் வண்டிகள்
இருள் சூழ்ந்த அந்த
முன்னிரவில்
அன்னிய நாட்டில்
அவளுக்காக
பதறிய படி அவன்
தினமும்
சமையலில் குறை
சொல்லும் கணவனின்
அன்பு
புரிந்து கொள்ள வைத்த
பழுதான வாகனம்
நன்றி கூறியபடி அவள்

பூச்சாடி வேலைப்பாடு





15 மார்ச், 2011

உயிருள்ள கவிதை..

மடிக்கணினி ஒளிர்ந்தபடி
என் மெத்தையின் விளிம்பில்...

அந்த ஒளியே
தட்டச்ச போதுமானதாய்...

காதில் மாட்டிய எம்பிதிரியில்
மெலிதாக நறுமுகையே
அதைத்தொடர்ந்து
எங்கேயோ பார்த்தமயக்கம்...

மனதின் ஏதோ ஓர்
நினைவடுக்கில்
கவிதை உயிர்
பெற்றுகொண்டிருக்க...

கண்களும் கைகளும்
வேகமாக விளையாட...

அர்த்தமில்லா எழுத்துக்களும்
சொற்களும் திரையில்
தோன்றித் தோன்றி
மறைய...

எண்ணங்கள் முழுவதும்
என்னவளைச் சுற்றியேசுழல...

உன்  ரசனையின்
வயதென்ன என்றாள்

அவை
இப்போது தான்
பிறந்தது போல்
எப்போதும் இருக்க
வேண்டுமென்றாள்

ரசத்தின் மணம்போல
உன் கவிதையிலும்
வாசம் வேண்டும் என்றாள்

அவள் சொல்லியரசனைபோல்
புதியதாய் இருக்க
அலுக்காமல் மலரும்
மலர்கள் போல்
தினம் தினம் பிறக்க
யத்தனிக்கின்றேன்

உன் அருகில்
உயிருள்ள கவிதையாய்
நானிருக்க

அங்கே என்னடா
கணினியுடன் காதல் சரசம்
என்பது போல்

எப்போதடா வீட்டுப்பாடத்தை
முடித்து மூடிவைப்பாய்
என்ற கேள்வி
முனகலாக
ஆங்கில வாசத்தில்
அவளிடமிருந்து

சற்றே சரிந்து
அவளை
உற்று நோக்குகிறேன்

சாண்டில்யனின்
யவனராணி போல
நீல விழிகளும்
அவற்றை மூடிய
மெல்லிய வெண் இமைகளும்

அதன் மேல்
அலட்சியமாய்
படர்ந்திருக்கும்
காப்பி நிறகேசமும்
என்னை எழுதவிடாமல் சீண்ட

இவளுக்கு மட்டும்
தமிழ் புரிந்தால்
வேறு எதுவும் சொர்கமில்லை
என்ற என் எண்ண ஓட்டத்தை
தடாலென நிறுத்துகிறேன்...

தமிழை ஆழ்ந்து
காதலிக்கும் என்னால்
எப்படி ஓர் ஆங்கில
தேவதையையும்
சரிசமமாய்
காதலிக்கமுடிகிறது
வியந்தபடி
தொடர்கிறேன்...

மன்றத்தில் பரிசு பெற்று
அதை
என்  அழகிய தேவதைக்கு
அர்பணிக்க
எழுதுகிறேனடி...

என் சத்தமில்லா
மெல்லிய பதில்
அவளை எழுப்பவில்லை
எழுந்தாலும்
அவள் படிக்கப்போவதுமில்லை
படித்தாலும்
புரியப்போவதுமில்லை

மொழிப்பெயர்த்து
சொல்ல கேட்க்கும்
அவளின் ஆர்வத்தை
ரசிக்கின்றேன்

சொற்களை
மொழிப்பெயர்க்கலாம்
அதன் சாரத்தையும் கூடத்தான்

கவிதை முழுதும்
என் உதவி இல்லாமலே
உறைந்து ஊடாடும்
ஜீவனை என்னென்று
மொழிபெயர்ப்பேன்

மொழியின் நாயகிக்கு
இசையை
உணர்த்த நாயகன்
படும் தவிப்பை
எனக்களித்து

நிச்சலனமான
நித்திரையில்
குழந்தைபோல்
என்னவள்

ஜப்பானின் பூகம்பம் - தப்பித்த பிஞ்சு குழந்தைகள்


 நம் கண்களில் நீரையும், இதயத்தில் வலியையும் உண்டு செய்த ஜப்பானின் பூகம்பம் மற்றும் அணு உலை வெடிப்பு, அந்த செய்திகளில் ஒரு அதிசயம்.  பிறந்து பத்து  நாட்களே ஆன குழந்தையும், ஒரு மூன்று மாதக் குழந்தையும் அந்த இடிபாடுகளில் உயிருடன் தப்பியது தான். பிறந்து 10 நாட்களில் பேரிடரில் காணாமல் போய் பின் கிடைத்த குழந்தையை பார்த்த தாயின் முகத்தில் தான் எத்தனை அமைதி. தப்பித்த இன்னொரு குழந்தைக்கு அதன் தந்தை வேறு பொருத்தமான பெயர் இவனுக்கு இல்லை என்று சொல்லி 'லக்கி' என பெயரிட்டிருக்கிறார்.