18 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (பகுதி-3)

தான் புத்திசாலியா இல்லையா என தெரிந்து கொள்ள யாருக்குத் தான் ஆர்வம் இருக்காது?
கடை வாசலுக்கு சென்று, "எங்களுக்கு புத்தகம் வேணும்"
என்ன புத்தகம்?
என் தம்பி "ஸ்போர்ட்ஸ்டார்"
" 15 ரூபாய்,  வேற என்ன வேணும்?"
அப்போது தான் கண்ணில் பட்டது மாயமாய் மறையும் மந்திர மனிதன் என்னும் சிறுவர் கதை புத்தகம்.
"அது வேணும்"
"சரி 3.50, இந்தாங்க மிச்ச சில்லரை". வாங்கிக்கொண்டு புத்திசாலி என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்துடன் ஓடி வந்து ரயிலில் ஏறினோம். வண்டி அப்போதும் நின்று கொண்டு தானிருந்தது. ஹி ஹி....
சற்று நேரத்தில் அப்பாவும் வந்து விட வண்டி மெல்ல நகர ஆரம்பிக்க ஜன்னல் ஓர சீட்டடுக்கான எங்கள் சண்டை முற்றி பாதி தூரம் வரை அவன் மீதி தூரம் வரை நான் என்று முடிவாகி ஓய்ந்தது, "அப்பா நாங்க இருவரும் புத்திசாலிங்க! தெரியுமா!"
அப்பா, "அப்படியா? யார் சொன்னா?"
"எங்களுக்கு புக் கொடுத்தாங்க"
"யார்?"
"ஹிக்கின் பாதம்ஸ் கடைல"
"அதனால?"
"அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம் தருவாங்களாம்!"
"அப்படின்னா அவன் எப்படி கடை  நடத்துறது? பாருங்க யார் கேட்டாலும் கொடுக்குறான்"
"அம்மா தான் சொல்லுச்சு"
 எங்களையறியாமலே அம்மாவை மாட்டிவிட, "அம்மா சொன்னாளா? அவ புத்தகம் படிக்க ஏதாச்சும் சொல்லி வாங்கவைப்பா"
"அதுக்கு தான் ஸ்போர்ட்ஸ்டார் வாங்கிட்டு வந்திருக்கான் என் பையன்" என்ற அம்மாவின் கவலை அப்போது புரியவில்லை எனக்கு.
பதிலில் குழம்பி ஏமாற்றத்துடன்,  அப்படின்னா நாங்க புத்திசாலிங்க கிடையாதா? (அதை எப்படி தெரிஞ்சுகாம விடுறது!!??) 
" நீங்க புத்திசாலிங்க தான் யார் இல்லனு சொன்னாங்க?" அப்பா.
என்ன டா இது இப்படி குழப்புறாங்களே சரி சொல்லிடாங்க ஒகே!
சரி ஸ்போர்ட்ஸ்டார் நடு பக்கத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த உலககோப்பை கிரிக்கெட் லிருந்து பிரபலங்களின் முழு அளவு படம்
மடித்து ஸ்டேப்பிள் பண்ணியிருக்கும். வேகமாக ஆலன் டேவிட் படத்தை எடுத்து பெட்டி உரையின் ஒரு பக்கத்தில் வைத்தான் தம்பி. சற்று நேரத்தில் அவரவர் சிந்தனைக்குள் அவரவர் காணாமல் போக நான் என் புத்தகத்தில் மூழ்கினேன். மாயமாய் மறையும் மந்திர மனிதனின் உலகிற்குள் மூழ்கியேவிட்டேன்....
தொடரும்...

2 கருத்துகள்: