மழலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 பிப்ரவரி, 2011

டம்மி பீஸ்...


டம்மி பீஸு 1
நித்தி - என் மூன்று வயது மகன்.

அப்பா: டேய் ஏண்டா இப்படி வம்பு பண்னுற, எழுது, உனக்கு எழுத  தெரியாது?
எழுது சீ "C". அது தான் அவன் இரண்டு மாதங்களாக கற்றுக் கொள்ளும் முதல் எழுத்து.
நித்தி  : {பென்சிலை நோட்டில் வைக்காமலே சிணுங்கல்}
அப்பா: என்ன பிள்ளை நீ எழுத மட்டேங்குற?
நித்தி : டம்மி பீஸ்!!!????****
அப்பா: என்னது? எழுது டா.
நித்தி : உங்க ஜச்மண்டு ரெம்ப தப்பு. நான் டம்மி பீஸ்.
அப்பா: ஹா ஹா ஹ ஹா

டம்மி பீஸு 2
ஒரு சீன நண்பர்    : ஹெய் வாட்ஸ் யுவர் நேம்?
நித்தி                             : டம்மி பீஸ்
சீன நண்பர்               : ஹவ் கம்? ஹிஸ்  நேம் இஸ் டம்மியா?
அவன் அண்ணன் : நோ ஹி இஸ் ஜோக்கிங்க். ஹிஸ் நேம் இஸ் நித்திக்.

 டம்மி பீஸு 3

இன்னொரு நண்பர்: ஏய் ஸ்கூல்ல நல்லா படிக்கிறியா?
 நித்தி                             : இம்ம் சி படிச்சி, எ படிச்சி, டி படிச்சி 

 நண்பர்                         : ஏ பி சி டிய வரிசையா சொல்லித்தரலையா உங்க         டீச்சர்?
நித்தி                              : டம்மி பீஸு
நண்பர்                          : என்னது டம்மி பீஸா? உன் பேர் என்ன?
 நித்தி                             : டம்மி பீஸ்

டம்மி பீஸு 4


பள்ளி செல்லும் படிக்கட்டில் இவன் சிணுங்க, தினமும் நாலு மாடிக்கு தூக்க வைக்கிறானே என நான் வேகமாக பத்து படிகள் ஏறி விட கீழ்படியில் நின்று கொண்டு தூக்க சொல்லி சிணுங்க
தோழி ஒருவர்: "என்னடா உங்க அம்மா தூக்காம நடந்து வர சொல்றாங்களா? கூப்பிட்டு தூக்க சொல்லு"
 நான் பயந்தது போலவே அவன் 
நித்தி:  டம்மி பீஸு
தோழி: என்னடா நான் டம்மி பீஸா உனக்கு.
நான்: இல்ல அவன் கிட்ட உன் பேர் என்னன்னு கேளுங்க
தோழி: உன் பேர் என்ன?
நித்தி : டம்மி பீஸ்
எனக்கு அப்பாடா என்றிருக்க "இப்படித்தான் எது கேட்டாலும் வடி வேலு மாதிரியே பதில் பேசுறான்".
தோழி: இந்த காலத்து பிள்ளைங்க கிட்ட வாயே கொடுக்க முடியல, ரொம்ப சன் டீவி பாக்குறியோ?






11 ஜனவரி, 2011

சனா சனா ஈசீ ஈசி...

வழக்கம் போல ஒரு நாள், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து நிறைய பொருட்களை எடுத்து பரப்பி விட்டு சரி செய்து அடுக்கும் வேலை. இன்று ஒரு அறையிலிருக்கும் அத்தனை பொருட்களும் வேகமாக தரையில் கிடத்தப்பட (பெரும்பாலும் இப்படித்தான் எதை ஆரம்பித்தாலும் அதனுள் சென்று விடுவதே இயல்பாகவும் அதுவே சில சமயம் நன்மையாகவும், தீமையாகவும் மாறிவிடுவதும் உண்டு) என் பெரிய மகன் என்றோ பார்க்க கிடைக்ககூடிய சில அபூர்வமான சாமங்களை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்க, 
வழக்கம் போல் நான் பொறுமை இழந்து எந்த உதவியும் இல்ல என் வேலையையும் லேட் பண்ற என்று உச்ச கதியில் ஆரம்பிக்க,  இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு குரல், " சனா சனா ஈசி ஈசி" " கூல் கூல்" என்று. திட்டு வாங்கிக்கொண்டிருந்த பெரிய மகன் சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க அப்புறம் தான் இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் புரிந்தது எனக்கு. போய் தூங்கு என்று சொன்னவுடன் தலையை தொங்க போட்டுக்கொண்டு மனமில்லாமல் 
கட்டிலுக்கு நடையை கட்டிய சின்ன மகன் (3 வயது) திடீரென என்னருகில் வந்து சொன்னது தான் சனா சனா ஈசி ஈசி..... சரியாக பேசவர வில்லையென்றாலும் எப்போதுமே எல்லாவற்றையும் கூர்ந்து கவனிததபடி இருப்பான். ரோபோ படத்தை பல முறை பார்த்து அந்த டயலாக் எல்லாம் மனப்பாடம். படத்தில் ஐஸ்வர்யா வரும் போதெல்லாம் மம்மி மம்மி என்று அவன் அப்பாவை வெறுப்பேற்றியது போதாது என்று இது வேறா கடவுளே!!      

16 ஜூன், 2010

உன் முத்தம்

ஒரு கன்னத்தில்
அடித்தாய்
கர்த்தரை மனதில்
கொண்டு
மறு கன்னத்தை
காட்டினேன்
அதில் உன்
அன்பு முத்தம்
ஒரு அடி
ஒரு கிள்ளு
ஒரு தள்ளு
ஒரு முத்தம்
யாவும்  நிச்சயம்
உன் அருகாமையில்....

26 மே, 2010

என் மகனின் குறும்பு

அப்போது அவனுக்கு ஐந்து வயது. இரண்டாம் குழந்தை பேற்றிற்காக தாய் வீடு சென்றிருந்தேன். என் தலை மகனை அருகில் உள்ள பள்ளியில் யூ கே ஜி சேர்த்து விட்டோம். தினமும் காலையில் சிணுங்கல் இல்லாமல் சீக்கிரமாக எழுந்து, குளித்து, சீருடை அணிந்து மிக சந்தோஷமாக வாசலுக்கு வரும் வேனில் பள்ளிக்கு செல்வான். போய் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே நிறைய நண்பர்கள், தைரியமாக பேசுவதால் ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவனாகிவிட்டான்.

ஒரு நாள் சாயுங்காலம் பள்ளி விட்டு வரும்போதே மிகவும் சோர்ந்து இருந்தான். என்ன என்றதற்கு இனி நான் அந்த பள்ளிக்கு போக மாட்டேன்.

அடிக்குறாங்க, நீ வா நம்ம சிங்கப்பூருக்கே போய்டுவோம் என்று ஒரே ஆர்ப்பாட்டம். அப்போது ஜூரமும் வந்து விட்டதால் இரு நாட்கள் கழித்து பள்ளிக்கு அனுப்பும் போது ஆசிரியர்களிடம் பேசினேன். ஏன் என் பிள்ளையை அடித்தீர்கள் என்று கேட்டேன். இல்லை அவன் கொஞ்சம் வாலு, சும்மா மிரட்டி, அடிப்பேன்னு சொன்னதுக்கே அழுதிட்டான் என்

று சொல்லி அனுப்பிவிட்டனர். ஆசிரியர்கள் சொன்னதில் சமாதானம் அடையாததால் அன்று இரவு அவனிடம் பேசினேன். தம்பி இப்போ அம்மாகிட்ட உண்மைய சொல்லு...

யார் உன்னை அடித்தது?

எங்க சார்

எப்போது உன்னை அடித்தார்?

க்ளாஸ் ல.

நீ என்ன செஞ்சே?

கம்பால சாரை அடிச்சேன்.

ஐய்யோ ஏன்?

அவரு என்னை அடிச்சாரு. நான் அவரை அதே கம்பால திரும்பி நிக்கும் போது அடிச்சேன்.

அவர் ஏன் உன்னை அடிச்சார்?

எழுதினதுக்கு.

எழுதினத்துக்கா அடிச்சாங்க?

ஆமாம்.

எதால எழுதின?

பேனாவால.

யாரோட பேனா?

சார் பேனா

எதுல எழுதின?

புக்குல

யார் புக்கு?

சாரோட புக்கு

எந்த புக்கு?

எல்லார் பேரும் எழுதியிருக்கும் இல்ல? அதுல கூட டிக் போடுவாங்களே காலைல. (அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்தர்??!!!)

ஹா ஹா இதை ஏன் ஆசிரியர் என்னிடம் சொல்லவில்லை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது!! என் மகனின் குறும்பை இன்று நினைத்தாலும் வாய் விட்டு சிரிப்பேன்.

29 ஏப்ரல், 2010

நாஸ்த்தி - நாஸ்த்திகன்

"தம்பி நல்லா படிக்கனும், சமத்தா நடந்துக்கனும், நல்ல மதிப்பெண் எடுக்கனும்" என்று தினம் பாடும் பல்லவியை நான் பாட இடைமறித்த என் மகன் "நல்ல மார்க் எடுக்கலைனா நான் நாஸ்த்தி ஆகிடுவேன் அம்மா" என்றான்.  "ஏன்டா அப்படி சொல்ற..?" இது நான். "நாஸ்த்தின்னா தெரியாதா உனக்கு? அது தான் நான் பாரதி படத்துல பார்த்தேனே சாமிகிட்ட பேசுவாரே அவர், டாக்டர் க்கு கொடுக்க காசில்லை, இது போல் துன்பங்களுக்கு உட்படுத்தி கொண்டிருந்தால் நான் நாஸ்த்தி ஆகிவிடுவேன்னு பாரதியார் சொல்வாரே? அந்த நாஸ்த்தி தான், டாக்டர் கூட எனக்கு காசே வேணாம்னு சொல்லிடுவாரே" என்றான்.

 படத்தில் வருவதை யோசித்து விட்டு அது நாஸ்த்தி இல்லடா நா
ஸ்த்திகன், அவனுக்கு விளக்க "அப்படியா?" என சிரித்தான்.

19 ஏப்ரல், 2010

தொ. கா. வுக்கு ஒரு முற்றுப்புள்ளி

மடி கனிணியை

திறந்து வலை பார்க்க

ஆரம்பித்து

ஒரு மணி நேரம் ஆயிற்று...



தொ. கா வில் உன்

டோரா முடிந்து

டியோகோ வந்தாயிற்று...



போதும் கண்ணா

தொலைக்காட்சி பார்த்தது போதும்...



அன்று உன் சோர்ந்த

முகம் பார்த்து

போதும் அம்மா

எழுதியபின்...



ஒரு நாளில் உன் தொ. கா நேரம்

இனி ஒரு மணி நேரம் தான்...

முடிவான முடிவாயிற்று..



நீ போய் மடி கனிணியை

வைத்துக்கொண்டு

உட்கார்ந்திரு, என்னை விடு என

நீ சொல்ல ஆரம்பிக்குமுன்..

நான் சொல்கிறேன்...



வா வெளியில் சென்று

விளையாடலாம்...



காக்கை யை தேட முடியாது

கார் பார்த்துக்கொண்டே

சாப்பிடலாம்...



பூக்களையும், செடிகளையும்

ரசிக்கலாம்...



இதோ கையில்

உன் ஆசை தூரிகையை எடு

சுவர் முழுதும்

ஓவியம் தீட்டலாம்...



இன்னும் தண்ணீரில்

கூட விளையாடலாம்...



உனக்கான நேரம்

இன்னும் ஒரு வருடம் தான்

நீ பள்ளி செல்லும் வரை தான்



வா விளையாடலாம்

போதும் கண்ணா..

தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.

போதும் அம்மா...

போதும் அம்மா...


மடி கணினியை

மடியை விட்டு

தூக்கி எறி....


என்னை

வைத்துக்கொள்....


தொலைக்காட்சி

பேசியது போதும்

நீ பேசு என்னுடன்...


பொம்மைகளோடு என்

விளையாட்டு போதும்

நீ விளையாடு என்னுடன்...


வலை பதிந்தது போதும்

என் கன்னத்தில்

முத்தம் பதி...

போதும் அம்மா...

ஓவியம்

ஒவ்வொரு முறை


நான் பேனா

எடுக்கும் போதும்



ஆசையாய் வாங்கி

அம்மா ம்ம் ம்ம்



என் காகிதம் முழுக்க

உன் கிறுக்கல்கள்



காகிதமும் நிறைந்தது

ஓர் மிகச் சிறந்த

இரண்டு வயது

ஓவியனின்

முதல் முயற்சியால்



தயக்கமே இல்லாத

உன் கோடுகள்

வட்டங்கள்



படைப்பாளிக்கு

வானமே எல்லை

உனக்கும் தான்



கூரை மட்டும்

எட்டவில்லை

தப்பித்து விட்டது



சுவற்றில் ஒரு இடம்

மீதியில்லை



மெழுகு வண்ணங்களில்

பல புதிரோவியங்கள்



மேஜையும்,

நாற்காலியும்

ஆழ் நிற சோபாவும்

கூடத்தான்



மெருகேறி இருக்கின்றன

உன் வண்ணக்காய்ச்சலில்

குளித்து



வென்னிற தரையும்

உன் விளையட்டுத்திடல்



எத்தனை முறை

கடிந்து கொண்டாலும்

அழகாய்

பெருமையாய்

ஒரு புன்சிரிப்பு

உன் உதடுகளில்



காலையிலிருந்து

மாலைவரை

நீ தீட்டிய

ஓவியங்களோடு



மாலையிலிருந்து

மறு நாள் காலைவரை

உன் தந்தையின்

சாய விலை ஆதியாக

அடித்த நேரம்

(நல்ல வேளை

ஆள் வைத்து

சாயம் அடிக்க

வில்லை

கூலியும் சேர்ந்திருக்கும்)

அழகு

.....அந்தம் வரை



வரும் பாட்டுக்களையும்

ரசிக்கிறேன்



என் சின்னத் திருமகனின்

ஓவியத்திறமையை

மெச்சியபடி.....

16 ஏப்ரல், 2010

நித்து..

அம்மா, "ஏய்... "

நித்து, "எ"

அம்மா, "ஏய்.. "

நித்து "இம்ம்.. பி.. சி.."

அம்மா, "நித்தூ.... "

அருகில் வந்து இம்ம்?

அம்மா, " நித்திக்க்கூ..."

நித்து, ஒரு வசீகரப்புன்னகை

இப்போது அம்மா "சொல்லு ஏ, பி, சி"

 நித்து  "நோ".

7 ஏப்ரல், 2010

ஈசல்

கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். வழிபாடு முடித்து கோவில் சுற்றி வந்து உட்கார்ந்த இடத்தில் மின்விளக்கு வெளிச்சத்திற்கு சில பூச்சிகள் தரையில் வட்டமடித்த்துக் கொண்டிருந்தன. அதை என் மகன்  (7 வயது) பார்த்துக்கொண்டிருந்தான். திரும்பி வரும் போது வண்டியில் வழக்கம் போல் அவன் புதிதாய் தெரிந்துகொண்ட விஷயங்களை சொல்லிக்கொண்டு வந்தான்.

"அங்க பூச்சிக்கெல்லாம் ஒரே சண்டை டாடி, ஒரு எறும்புக்கும் ஈக்கும் பயங்கர சண்டை போலிருக்கு. ஒரு பெரிய குண்டு எறும்பு ஒண்ணு ஈ கிட்ட சண்டை போட்டு வின் பண்ணிட்டு போலிருக்கு, அதோட இறக்கையை பிச்சு பின்னாடி மாட்டிகிட்டு வேகமாக போச்சு டாடி". என்றான்.

"என்னடா சொல்ற புரியல" இது அவன் அப்பா.

"நிஜமா டாடி, நான் பார்த்தேன்"

"அவன் சொல்வது புரிந்ததால் அதற்கு சிரித்துக்கொண்டே விளக்கம் கொடுத்தேன். அவன் பார்த்தது ஈசல், ஈ யை எறும்பையும் மட்டுமே அதுவரை பார்த்திருந்ததால் அங்கு இருந்த ஈசலை தெரியவில்லை அவனுக்கு. ஈ பாவம் எறும்பு மோசம் என்று சொல்லிக்கொண்டிருந்தவன், அப்படியா ஒரு பூச்சி இருக்கு" என்றான்.

உடனே " அச்சொச்சோ இந்த மம்மி இதை  நாளைக்கு ப்ளாகுள போட்டுடுமே. ப்ளாகை கண்டு பிடிச்சதிலிருந்து இதே பிரச்சனை தான், மம்மிகிட்ட ஒன்னும் பேச முடியல" என்றான்.

23 மார்ச், 2010

உன் குறும்பு

துணிக்கூடையில்
தொலைக்காட்சி ரிமோட்
காலணி அலமாரியில்
கைத்தொலைப்பேசி
அட்டை பால் டப்பாவில்
வீட்டுச்சாவி
தலைகீழாக
பாத்திரம் தேய்க்கும்
சோப்பு திரவ டப்பா
ஸ்பூன்களும், வடிகட்டிகளும்
எப்போதும் டாய்ஸ் பாக்ஸில்
பெட்டில் எப்போது
சாய்ந்தாலும்
குத்தும் ஏதேனும்
ஒரு பொம்மை
அன்பே உன்
குறும்பு இல்லயென்றால்
வீடும் தொல்பொருள்
அருங்காட்சியகமாக
அலுத்து போய் விடும்...

17 மார்ச், 2010

சின்னக் கண்ணன்

காலையிலேயே
உன் கைகளில்
நீலத் தூரிகை....

முன் பகலுக்கு முன்
தாள்களும் உன்
கால்களும்

நீல மேக ஷ்யாமள வண்ணம்.

5 மார்ச், 2010

பேனாவை வீணடிப்பது எப்படி?

கொஞ்சம் நேரம்
தாளில் எழுத வேண்டும்
அம்மா பார்க்கும் வரை...

அப்புறம் மேஜையில்
பின் புத்தகம், சுவர், தரை,
கை, கால், வயிறு என
அனைத்திலும் முயற்சித்து
பார்க்க வேண்டும்.....
அம்மாவுக்கு தெரியாமல் .....

பார்த்து விட்டால்
தப்பித்துக்கொள்ள
கையோடு ஒரு
காகிதமும்
வைத்திருக்க வேண்டும்

அவள் பார்க்கும் நேரம்
காகிதத்தில் மட்டுமே
எழுதுவதாக பாசாங்கு
செய்ய வேண்டும்

பேனா எழுதுவதை
நிறுத்திய பிறகு
அண்ணனின் பள்ளிப்பையிலோ
அப்பாவின் சட்டைப்பையிலோ
தயாராக இருக்கும்
அடுத்த பேனா !!!!

9 பிப்ரவரி, 2010

மாம்போ

என் செல்ல மகனின் (இரண்டு வயது)
புதிய கண்டுபிடிப்பு
அம்மா இது கார் மாம்போ....
மாம்போ....... மாம்போ.......
அது அது அது மம்மி மீ
அது மாம்போ.....
டீனோ மாம்போ ...
டீ மாம்போ .....
அது என்னடா மாம்பூ?
மம்மி அது ....... மாம்போ.
கடவுளே இவனை சீக்கிரம்
தெளிவாக பேச வையேன்....

27 ஜனவரி, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை

அருகில் வந்து
ஆசையாய் ....

அம்மா...
இரு கரங்களாலும்
என் கன்னங்கள்
மென்மையாய்ப் பிடித்து

தலை தூக்கி
உன் அன்பு முத்தம் ...

ஆஹா எவ்வளவு
பாசமான பிள்ளை
இரண்டு வயதில்
எவ்வளவு தெளிவு

பிறரின் பாராட்டு
என்னை
மெய் மறக்கச்
செய்யவில்லை
உன் முத்தம் கூடத்தான்

எனக்குத்தானே தெரியும்
நீ அடுத்து செய்யபோகும்
பொல்லாத குறும்புக்கு
லஞ்சம் இதுவென்று

தீராத விளையாட்டுப் பிள்ளை
ஆம் அது நீயே... தான்

15 ஜனவரி, 2010

என் மகனின் விளக்கம்

தம்பி "அது குண்டூசி அதில் விளையாடதே"
"சரிம்மா அப்ப ஒல்லி ஊசியில் விளையாடலாமா?"
நான் சிரித்துக்கொண்டே
அதென்னடா ஒல்லி ஊசி?
ஆமாமம்மா தெரியாதா?
தலை குண்டாக இருந்தா அது குண்டூசி
அது ஒல்லியாக இருந்தா ஒல்லி ஊசி
அப்புறம்மா..... எனக்கு ஒரு சந்தேகம்
அது குண்டாகவே இல்ல
அப்புறம் ஏன் குண்டூசின்னு பேர் வந்தது ?
நான் சொன்னது தான் சரி
இல்லம்மா?
அதுவும் சரிதான்
குழந்தைகளிடமிருந்து
நாம் கற்று கொள்வது தான் அதிகம்


8 ஜனவரி, 2010

மழலை


உன் அழகு முகம்

உன் சிரிப்பின் வசீகரம்
உன் குழிவிழும் கன்னம்

மட்டும் எப்போதும் நினைவில்.....

இது தவிர

உன் குறும்புகள்

உன் அழுகை

உன் வம்புகள்

உன் பிடிவாதம்

இவை அணைத்தும்

மறந்தே போய் விடுகின்றன

கண்ணா நீ உறங்கும் போது