15 மார்ச், 2011

உயிருள்ள கவிதை..

மடிக்கணினி ஒளிர்ந்தபடி
என் மெத்தையின் விளிம்பில்...

அந்த ஒளியே
தட்டச்ச போதுமானதாய்...

காதில் மாட்டிய எம்பிதிரியில்
மெலிதாக நறுமுகையே
அதைத்தொடர்ந்து
எங்கேயோ பார்த்தமயக்கம்...

மனதின் ஏதோ ஓர்
நினைவடுக்கில்
கவிதை உயிர்
பெற்றுகொண்டிருக்க...

கண்களும் கைகளும்
வேகமாக விளையாட...

அர்த்தமில்லா எழுத்துக்களும்
சொற்களும் திரையில்
தோன்றித் தோன்றி
மறைய...

எண்ணங்கள் முழுவதும்
என்னவளைச் சுற்றியேசுழல...

உன்  ரசனையின்
வயதென்ன என்றாள்

அவை
இப்போது தான்
பிறந்தது போல்
எப்போதும் இருக்க
வேண்டுமென்றாள்

ரசத்தின் மணம்போல
உன் கவிதையிலும்
வாசம் வேண்டும் என்றாள்

அவள் சொல்லியரசனைபோல்
புதியதாய் இருக்க
அலுக்காமல் மலரும்
மலர்கள் போல்
தினம் தினம் பிறக்க
யத்தனிக்கின்றேன்

உன் அருகில்
உயிருள்ள கவிதையாய்
நானிருக்க

அங்கே என்னடா
கணினியுடன் காதல் சரசம்
என்பது போல்

எப்போதடா வீட்டுப்பாடத்தை
முடித்து மூடிவைப்பாய்
என்ற கேள்வி
முனகலாக
ஆங்கில வாசத்தில்
அவளிடமிருந்து

சற்றே சரிந்து
அவளை
உற்று நோக்குகிறேன்

சாண்டில்யனின்
யவனராணி போல
நீல விழிகளும்
அவற்றை மூடிய
மெல்லிய வெண் இமைகளும்

அதன் மேல்
அலட்சியமாய்
படர்ந்திருக்கும்
காப்பி நிறகேசமும்
என்னை எழுதவிடாமல் சீண்ட

இவளுக்கு மட்டும்
தமிழ் புரிந்தால்
வேறு எதுவும் சொர்கமில்லை
என்ற என் எண்ண ஓட்டத்தை
தடாலென நிறுத்துகிறேன்...

தமிழை ஆழ்ந்து
காதலிக்கும் என்னால்
எப்படி ஓர் ஆங்கில
தேவதையையும்
சரிசமமாய்
காதலிக்கமுடிகிறது
வியந்தபடி
தொடர்கிறேன்...

மன்றத்தில் பரிசு பெற்று
அதை
என்  அழகிய தேவதைக்கு
அர்பணிக்க
எழுதுகிறேனடி...

என் சத்தமில்லா
மெல்லிய பதில்
அவளை எழுப்பவில்லை
எழுந்தாலும்
அவள் படிக்கப்போவதுமில்லை
படித்தாலும்
புரியப்போவதுமில்லை

மொழிப்பெயர்த்து
சொல்ல கேட்க்கும்
அவளின் ஆர்வத்தை
ரசிக்கின்றேன்

சொற்களை
மொழிப்பெயர்க்கலாம்
அதன் சாரத்தையும் கூடத்தான்

கவிதை முழுதும்
என் உதவி இல்லாமலே
உறைந்து ஊடாடும்
ஜீவனை என்னென்று
மொழிபெயர்ப்பேன்

மொழியின் நாயகிக்கு
இசையை
உணர்த்த நாயகன்
படும் தவிப்பை
எனக்களித்து

நிச்சலனமான
நித்திரையில்
குழந்தைபோல்
என்னவள்

3 கருத்துகள்:

 1. //என் சத்தமில்லா
  மெல்லிய பதில்
  அவளை எழுப்பவில்லை
  எழுந்தாலும்
  அவள் படிக்கப்போவதுமில்லை
  படித்தாலும்
  புரியப்போவதுமில்லை//

  vaalththukal

  பதிலளிநீக்கு
 2. இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html#comment-form

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு