10 டிசம்பர், 2010

மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....

பொதுவாக படிப்பது என்றாலே குதூகலமான செயல் எனக்கு. அதிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பேஷன் மாறுவதைப்போல என் அபிமானமும் புல் தாவரத்திலிருந்து ஏரொ நாட்டிகல் தொழில்னுட்பம் வரை ஒன்று விடாமல் ஓயாமல் தாவுவதுண்டு. அதற்கேற்றார்போல் சிங்கை தேசியக் கிளை நூலகமும் பத்து நிமிட நடையில் சென்றடையும் இடத்திற்கு தானாகவே இடம்பெயர வீட்டை விட்டு இறங்கினால் கால்கள் தாமாகவே அங்கு தான் செல்கின்றன. சமீப காலமாக ஆன்மிகம் கவனமீர்க்கிறது.
  • தன்னை உணருதல் என்றால் என்ன?
  • நம் யுனிவர்ஸ் தோன்றியது எப்படி? (பெரு வெடிப்பு கொள்கை-big bang theory என்னை சமாதானப்படுத்தவில்லை) அப்படியே இருந்தாலும் ஏன் தோன்றியது?
இவைதான் இப்போது என்னைக்குடையும் கேள்விகள். அவை பற்றிய நூல்களையும் வலை உலாவிலும் தேடியதில் கண்ணில் பட்டது எழுத்தாளார் பாலகுமாரனின் சிந்தனைகள்...
முதல் கேள்விக்கு இந்த கருத்துக்கள் உதவும். நம்மை நாமே அறிந்து கொள்ள இவை ஆற்றும் பணிகள் கொஞ்சமல்ல. அவற்றில் சில...

  • மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
  • தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்
  • மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை. மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
  • உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.
  • ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.


  • எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
  • தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
  • கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
  • அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்


    உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.

    மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்



  • எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

    .
    மேலும் படிக்க...
தேடல் தொடரும் வரை இடுகைகளும் தொடரும்.

8 டிசம்பர், 2010

நேரத்திலிருந்து காணாமல் போகிறேன்

குளிர் காற்றும்

இருண்ட மேகங்களும்

சலசலக்கும் நெற்பயிர்களும்

பொங்கும் சுழிநீரும்

கரைவரை தொட்டுக்கொண்டு

தளும்பித் தளும்பி

வளைந்து ஓடும் நதியழகும்

ச்சோவென்ற மழையும்

நடுங்கும் குளிரும்

வேகமான வழிப்பயணமும்....

என்றோ எங்கோ


எதற்கோ என்னவோ தேடப்போய்

வேறு எதுவாகவோ

மாறிவிட்டதைப் போல்
ஓர் உணர்வு!

மழையில் மழையாகிறேன்

தீயில் தீயாகிறேன்

காற்றில் காற்றாகிறேன்

மேகத்தில் மேகமாகிறேன்

வானத்தில் வானமாகிறேன்

வெற்றிடத்தில் வெற்றிடமாகிறேன்

ஆகவில்லையென்றாலும்

ஆகிடவே விழைகிறேன்

ஒரு மணித்துளிக்குள்


இவ்வளவு யுகங்களா?

ஒரிரு வினாடிகளுக்கு

இத்தனை நீட்சியா?

ஒரு முழு நாளுக்கு

இவ்வளவே நொடிகளா?

என்னுள் என்னென்னவோ

மாற்றங்கள்....

அவ்வப்போது நேரத்திலிருந்து

காணாமல் தான் போகிறேன்...

மலையருவி...

வரவேற்கும் ஈர மண்
கரும்பாறைகள்
ஓர் ஆயிரத்துக்கும்
குறைவில்லா குரங்குகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஹோவென்ற சத்தம்
அருவியின் லயத்தை
அறிவுறுத்த
அந்தச் சாரலுடன்
மழைச்சாரலும்
சேர்ந்து கொள்ள
மனதின் சக்தி நிலை
மாறுதல்களை
சொல்லிட வார்த்தைகளே
இதுவரை இல்லை
அருகில் சென்று
கால்கள் நனைக்க 
ஜில்லென்று குளிர்
ஊசிபோல் இறங்கியது
முழுவதும் இறங்குவதா
வேண்டாமா என்ற
கேள்வி உடனடியாக
விடைபெற்றுக்கொள்ள
அருவியின் மடியில்
அழகான தாலாட்டு....
இயற்கையின் மற்றொரு
குழந்தை...
மலையருவி.

19 நவம்பர், 2010

தியான லிங்கம்

தீராத தாகமும்
ஓயாத தேடலும்
எனை துளைத்தெடுக்கும்
கேள்விகளும்
ஏது செய்தாலும்
கிடைக்காத நிறைவும்
கணப்பொழுதும் நீங்காத
செய்ய வேண்டியதை
செய்யாமலிருப்பது போன்ற
குற்ற உணர்வும்
சதா எனை ஆட்டிப்படைக்க
என்ன தேடுகிறேன் என்ற
தெளிவே இல்லாமல்
தேடுவதும்
இங்கு தான் எங்கோ
இருக்கிறது வழி
தேடு தேடு என்று
மனம் கட்டளை இடுவதுமே
வாழ்க்கையாகி போனது
இவற்றிலிருந்து தப்பிக்க
நானாக இழுத்து
விட்டுக்கொண்டிருக்கும்
புதிய வேலைகளும்
சீக்கிரமே அவையும்
அலுத்து விடுவதும்
என்றுமே அலுக்காத
புத்தகம் படிக்கும்
பழக்கமும்
ஒவ்வொரு தேடலுக்கும்
முடிவுண்டு நிச்சயமாக
என்ற எண்ணமும்
வீண் போகவில்லை
கையில் கிடைத்தன
காட்டுப்பூ
அத்தனைக்கும்
ஆசைபடு
ஆயிரம் ஜன்னல்
எனும் நூல்கள்
தியான லிங்கத்தையும்
சத்குருவையும் பார்க்க
ஆவல் வந்தது
அதற்கான நேரமும்
கூடி வந்தது
என்னவோ விஞ்ஞானம்
எதுவோ என்னை ஈர்த்தது
தினம் ஒரு மணி நேரம்
போராடியபின் அடையும்
தியான நிலை
தியான லிங்கத்தின்
சன்னதியில்
இரு நிமிடங்களில்
கிடைத்தது
பேரமைதியும்
பயமேயில்லாத
மனமும்
என்னவோ ஒரு
அசெளகர்யமும்
சத்குருவின்
தரிசனத்தின் போது
உணர நேர்ந்தது
சந்தேகத்துடன் சில சமயம்
கண்மூடித்தனமாக சில சமயம்
கடவுள் பக்தி உள்ளதால்
கடவுளாக யாரையுமே
ஏற்றுக்கொள்வது
சாத்தியமேயில்லை எனக்கு
நல்ல ஒரு வழி காட்டியாக
உணர்கிறேன் த்குருவை

27 அக்டோபர், 2010

பார்த்துப்பழகிய அதே....

பார்த்துப்பழகிய
அதே ஊர்

அணுஅணுவாய் ரசித்த
அதே இடங்கள்

ஒவ்வொரு மண்ணிலும்
கலந்திருக்கும்
என் அன்பு

உயர உயர
பறந்து சென்று
பறக்காமலே

பெரிய வட்டமாக
சுற்றி இறங்கும்
பிற்பகல் பறவை

எப்போதும் உயிருடன்
இருப்பதை
அறிவுறுத்திக்
கொண்டிருக்கும்
கடிகாரமுள் சத்தம்

என் அன்பு
என் கோபம்
என் அழுகை
என் வெறுப்பு
என் பதற்றம்
என் ஏமாற்றம்
எல்லாம் பார்த்தும்
எனை வெறுக்காத
என் வீடு

காய்கறியோ
கோலமாவோ
ப்லாஸ்டிக் பொருளோ
கூவி விற்கும்
வியாபாரியின் குரல்

காரைக்கால் வானொலி
நிலைய காலை
நேரப்பாடல்கள்

கூடவே
இப்போது நேரம்
காலை ---மணி -- நிமிடங்கள்
அறிவிப்பாளரின் குரல்

வாழ்க்கையின்
பாதியைத் தின்ற
பேருந்துக்காத்திருப்புகள்

தினம் தவிர்க்க
முடியாத
பேருந்துப்பயணங்கள்

வழி நெடுகிலும்
துணை வரும்
அரசலாறு...

பயிலுமிடத்தை
நெருங்கும்போது
காரணமின்றி
அதிகப்படும்
பதட்டம்

அன்பான ஆசிரியர்கள்
அழகான படிப்பு

எல்லாம்
அதிவேகமாய்
அன்னியப்படுத்தபட்ட
சிங்கப்பூர் சம்பந்தம்

முன்பெல்லாம்
இந்தியப்பயணத்தை
வெகுவாய்
எதிர்பார்த்திருந்த
மனம்

இத்தனை வருடங்களில்
நொந்து குழம்பி இனி
சென்றால் சுற்றுலா தான்
என்னும் நிலைக்கு
தெளிந்து
பக்குவப்பட்டுவிட்ட
அறிவு

காலத்தினூடே
ஓட கற்றுக்கொண்டால்

வாழ்க்கையே

எளிது! எளிது!
இனிது! இனிது!