28 பிப்ரவரி, 2011

முற்றுப் பெறாத தேடல்


கடவுளா? பரம்பொருளா?
தெய்வமா? பேருண்மையா?
சிவமா? கண்ணனா?

பூஜையறையில் இருக்கும்
மூவெட்டு உருவங்களா?
இருளா? ஒளியா?
வேகமா? பொறுமையா?
காற்றா? தீயா?
அண்டவெளியா?
ஆகாயமா?
கடலா? நிலமா?
அன்பா? கருணையா?
காதலா?
எது நீ?

எங்கும் நிறைந்திருப்பது
உண்மையென்றால்
ஏன் என் கண்களை
ஏமாற்றும்
இந்த வித்தை உனக்கு

படைப்பின் காரணமே
உன் இருப்பை
பறையறைய
இருக்கவே இருக்கிறது
கோடி உருவங்களில்
உன் படைப்புகள்

சுற்றிக்கொண்டிருக்கிறது பூமி
சுட்டுக்கொண்டிருக்கிறது சூரியன்
சுகமாய் வீசிக்கொண்டிருக்கிறது
என்றென்றும் தென்றல்


என்னேரமும் துளைத்து
துண்டாடும் என் கேள்விகள்...

பதில்லில்லா மௌனமே
உனக்கு எப்போதும்...

என் நேரமின்மையும்
இடைவெளியில்லா
வேலைகளும் - எனை
உன்னிடமிருந்து பிரித்து
வைப்பதாயில்லை
கொழுந்து விட்டெரியும்
நெருப்பாய் எரிந்து
கொண்டிருக்கிறது
தேடல்

சில நேரம் உணர்கிறேன்
உன் இருப்பை
ஆனாலும் அறிவுக்கு
புரியவில்லை

நேரத்தின் நீட்சியாகவும்
சுருக்கமாகவும்
உன் பிரும்மாண்டத்தை
ரசித்தபடி நான்...

தனக்கு தானே கேள்விகளும்
பதில் சமாதனங்களும்
பின் சமரசங்களும்
செய்து கொண்டபடியே
தொடர்கிறது
கிடைக்கும் வரை நிறுத்தாத
சங்கல்பத்துடன்
என் முற்றுப்பெறாத தேடல்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக