25 பிப்ரவரி, 2010

விரதம்

செவ்வாய் விரதம்
அசைவம் இல்லை
வியாழன் குருவுக்கு விரதம்
வெள்ளி அம்மனுக்கு விரதம்
சனி அனுமனுக்கு விரதம்
ஞாயிறு, திங்கள், புதன் மீதம்
கார்த்திகை அம்மாவாசை
கோவில் திருவிழா
எதுவானாலும் விரதம்
மற்ற நாட்கள் அனைத்தும்
எப்போது வருமென காத்திருந்து
அசைவம் கண்டிப்பாக!

20 பிப்ரவரி, 2010

விடாமுயற்சி

எத்தனை கதவுகள்

மூடினால் என்ன?

உனக்காகவே

திறப்பதற்கென

ஒரு கதவு எங்கோ .....

தேடு தேடு

உன் வேலை

அதுமட்டும் தான்

வாழ்த்துக்கள்

13 பிப்ரவரி, 2010

மீன் பண்ணை

மீன் சாகுபடி
மீன் சாகும்படி
சாகச்செய்தவர்
வெட்டுபவரா?
வாங்குபவரா?

சாவதை
பார்த்த பின்னும்
சாப்பிடத் தோன்றுமோ?

குளம் வைத்து
நீர் வைத்து
மீன் வைத்து
அதற்கு
உணவும் வைத்து
ஆள் வைத்து
பராமரித்து பின்
சாகடித்து.....

இனி அசைவம்
சாப்பிடுவதில்லை
என்று நாமெடுக்கும்
சபதம்
மறுமுறை
வாங்கும் வரை தான்

வெட்டுவதை
பார்த்த வேதனை
ஓரரிரு நாட்கள் தான்
பின் சௌகர்யமாய்
உதவுவது நம் மறதி

12 பிப்ரவரி, 2010

எரிமலை

தினம் குழம்புகிறாய்
குமுறுகிறாய்
கொதிக்கிறாய்
கனலை கக்குகிறாய்
தீயில் எரிக்கிறாய்
நீ பலசாலி ????

எத்தனை முறை
நெருப்பு ஊற்றி
கருக வைத்தாலும்
மீண்டும் துளிர்க்கும்
உன் மேல்
சிறு செடி....
அது ???!!!

11 பிப்ரவரி, 2010

வசூல்

ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வரிசையாக கார்கள் நின்றிருந்தன . கடைசியில் நின்ற கார்க்காரர் அந்த ப்பக்கம் சென்ற மனிதரை நிறுத்தி, " என்னாச்சு அங்கே?" என்றார்.
" நம்ம நாட்டுல உள்ள எல்லா அரசியல்வாதிகளையும் தீவிரவாதிகள் கடத்திடாங்க. நூறு கோடி ரூபா தரலைன்னா அவங்களை கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க. அதான் எல்லா காரையும் நிறுத்தி வசூல் பண்ணிக்கிட்டு இருக்கோம்." என்றார் அவர்.
"அப்படியா? இதுவரைக்கும் எவ்வளவு வசூல் ஆகியிருக்கு?"
"வெறும் பத்து லிட்டர் பெட்ரோல் தான்!"