31 ஜனவரி, 2011

திருமண நாள் வாழ்த்து


 நீ என்னை
விரும்புவதற்காக மட்டும்
நான் உன்னை
விரும்பவில்லை
 எண்ணில்லாத அழகான
இனிமையான
தருணங்களால் என் வாழ்வை
நிறைப்பதற்காகவும்
கூட இல்லை
அன்பாய், இனிமையாய், பரிவாய்
இயல்பாகவே இருப்பதால்
என்னவளிடம் நான் எதிர்பார்த்த
அத்தனை குணங்களுடனும்
நீ நீயாகவே
இருப்பதால்
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்

30 ஜனவரி, 2011

இதுவும் கடந்து போகும்...


எதுவும் மாறலாம்
தலைகீழாகலாம்...

வெண்மையின் கருவில்
கருமையும் வாழலாம்...

வெண்மேகங்கள் நீர் கோர்த்து
கருமேகமாவது போல்...

பின் அமில மழையும்
கொட்டித்தீர்க்கலாம்...

கோரபற்களின் கொடு
தாக்குதலுக்கும் மேல்
வலிமையாக...

நகைச்சுவை எனும்
பேரில் குதறித் துப்பலாம்...

கள்ளமறியா
நேர் சிந்தனையும்
உதவும் உள்ளமும்
மட்டுமே உனக்கு
அரணாயிருந்தாலும்...

தனக்கு வேண்டியதை மட்டுமே
தருவித்து கொள்ளும்
தனித்திறமை கூட்டி
திரிபவர்களிடமிரிந்து
தற்காத்துக் கொள்வதற்காகவாவது

கள்ளம் பழகு
பொய்மை பழகு

மென்மையே வியாபித்திருக்கும்
மனதை கல்லாக்கு

மனதில் இல்லையென்றாலும்
வெறுப்பை உமிழப்பழகு

இளம் பச்சையாய் துளிர் விட்டு
பின் கரும்பச்சையாகி
மஞ்சளாகி காய்ந்து விழும்
இலைகளைப்போல்

இதுவும் கடந்து போகும்...

28 ஜனவரி, 2011

நித்தியின் சாகசங்கள் - 1

எந்த சட்டையை போட்டுவிட எடுத்தாலும் அதிலிருக்கும் அளவு எழுதிய சீட்டை வெட்டி எடுத்தால் தான் போட்டுக்கொள்வேன் என அடம் பிடிப்பான் என் 3 வயது சின்ன மகன். என்னவோ அது அவனை ரொம்ப தொந்தரவு செய்கிறது போலும். முன்பெல்லாம் கோபப்பட்டு வேண்டாமென சொல்லி, தோற்று சரி என வெட்டி விட்டு, போட்டு விட ஆரம்பித்து விட்டேன்.  நேற்று போட்டுக்கொள்ள சட்டை எடுத்து வைத்து விட்டு குளித்து முடித்து வந்த எனக்கு அதிர்ச்சி. தரையில் வெள்ளை வெள்ளையாய் என்னெவோ கிடக்க கையில் சமையலரை  கத்தரிக்கோலுடன் இவன் மும்முரமாக வெட்டிகொண்டிருந்தான். என்ன செய்யுறே என்றால், மம்மீ இது பேப்பே (அவன் பேப்பரை அப்படித்தான் சொல்வான்) கட் டு மம்மி. என்று பதில் சொல்லி மறுபடியும் அவன் குனிய, அய்யோ அது அடிடாஸ் டீ ஷர்ட் டா வெட்டிடாத என்று சொல்லி கையை பிடித்து நிறுத்தி பார்த்தால் அதற்கு முன்பே மூன்று வெட்டுக்கள் வாங்கி பல் இளித்து கொண்டிருந்தது அந்த டீ ஷர்ட்.  கோபத்துக்கு மேல் வெடித்துக் கொண்டு வந்தது சிரிப்பு தான். அய்யோ நல்ல சட்டையை இப்படி வெட்டிட்டே பாரு என்று  நான் காட்ட, அப்போது கூட சரியாக வெட்டாமல் மிச்சம் நீட்டிக்கொண்டிருந்த பேப்பரை காட்டி சரியாக வெட்ட முடியவில்லலையே என்று கவலை கொண்ட அந்த பிஞ்சு முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அதன் பின் சட்டையில் இருந்த கிழிசல்களை பார்த்த அவன் அடாடா என்றான். இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு முன் என்றால் எப்படி நடந்து கொண்டிருப்பேனோ! குறைந்தது ஒரு அடியாவது வாங்கியிருப்பான். மனதின் மாற்றங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்த மற்றுமொரு இனிய தருணம். 

27 ஜனவரி, 2011

என்னுள் எத்தனை மாற்றங்கள்?


மூன்றுக்கு அடுத்த
பரிமாணம்
உணர்ந்து பார்த்து
விட
முக்காலமும் முயற்சி
நேற்று என்பது
இனியில்லை
நாளை என்பது
எப்போதும் நாளையே
நாளை என்பது
இன்றாகும் போதே
நாம் அதில்
வாழ்ந்திருப்போம்
இன்றில் இப்போதில்
வாழக் கற்றுக்கொண்டால்
வாழ்க்கையை
அள்ளிப்பருகலாம்
விண்னை
மட்டுமே ரசித்த
வெளிச்சத்தை
மட்டுமே ரசித்த
மலர்களை
மட்டுமே ரசித்த
அழகை
மட்டுமே ரசித்து
உவகை கொண்ட உள்ளம்
இப்போது
மண்ணையும்
இருளையும்
முட்களையும்
விருப்பத்தையும்
விருப்பமின்மையையும் கூட
அப்படியே ஏற்றுக்கொண்டு
கொண்டாட
ஆரம்பித்ததென்ன?
என்னுள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்?

26 ஜனவரி, 2011

ஓங்கி உரைத்திடும் இயற்கை

ஓய்வின்றி பாய்கிறது
வெள்ளி நீரோடை...
வெள்ளமாய் வீழ்கிறது
மலையருவி...
இருள்பொத்தி அமைதி
காக்கிறது கானகம்...
எல்லாம் கூடி
என்ன சொல்கின்றன?
தணிந்த அசைவுகள்
அன்பு பொங்கும் இதயம்,
சலனமில்லா மனம்,
திமிரும் பெருமிதம்,
ஒப்பிலா இயற்கையில்
எல்லாம் சாத்தியம்!

...இது நான் மிகவும் ரசித்த கவிதை