எந்த சட்டையை போட்டுவிட எடுத்தாலும் அதிலிருக்கும் அளவு எழுதிய சீட்டை வெட்டி எடுத்தால் தான் போட்டுக்கொள்வேன் என அடம் பிடிப்பான் என் 3 வயது சின்ன மகன். என்னவோ அது அவனை ரொம்ப தொந்தரவு செய்கிறது போலும். முன்பெல்லாம் கோபப்பட்டு வேண்டாமென சொல்லி, தோற்று சரி என வெட்டி விட்டு, போட்டு விட ஆரம்பித்து விட்டேன். நேற்று போட்டுக்கொள்ள சட்டை எடுத்து வைத்து விட்டு குளித்து முடித்து வந்த எனக்கு அதிர்ச்சி. தரையில் வெள்ளை வெள்ளையாய் என்னெவோ கிடக்க கையில் சமையலரை கத்தரிக்கோலுடன் இவன் மும்முரமாக வெட்டிகொண்டிருந்தான். என்ன செய்யுறே என்றால், மம்மீ இது பேப்பே (அவன் பேப்பரை அப்படித்தான் சொல்வான்) கட் டு மம்மி. என்று பதில் சொல்லி மறுபடியும் அவன் குனிய, அய்யோ அது அடிடாஸ் டீ ஷர்ட் டா வெட்டிடாத என்று சொல்லி கையை பிடித்து நிறுத்தி பார்த்தால் அதற்கு முன்பே மூன்று வெட்டுக்கள் வாங்கி பல் இளித்து கொண்டிருந்தது அந்த டீ ஷர்ட். கோபத்துக்கு மேல் வெடித்துக் கொண்டு வந்தது சிரிப்பு தான். அய்யோ நல்ல சட்டையை இப்படி வெட்டிட்டே பாரு என்று நான் காட்ட, அப்போது கூட சரியாக வெட்டாமல் மிச்சம் நீட்டிக்கொண்டிருந்த பேப்பரை காட்டி சரியாக வெட்ட முடியவில்லலையே என்று கவலை கொண்ட அந்த பிஞ்சு முகம் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அதன் பின் சட்டையில் இருந்த கிழிசல்களை பார்த்த அவன் அடாடா என்றான். இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு முன் என்றால் எப்படி நடந்து கொண்டிருப்பேனோ! குறைந்தது ஒரு அடியாவது வாங்கியிருப்பான். மனதின் மாற்றங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்த மற்றுமொரு இனிய தருணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக