மார்கழி அதிகாலை...
முதல் நாள் இரவே
தின்னையில் வரைந்து
பழகியிருந்த
கலர் கோலம்....
தெருவை அடைத்தபடி
பெரிதாய் உயிர்பெற....
கையில் கலர்களும் கோலமாவும்
காயவைத்த சாரமிழந்த டீத்தூளும்
சலித்தெடுத்த ஆற்றுமணலும்
வேகமாக நிறமாற்றங்களை
சந்திக்க...
மனம் மட்டும் கோலத்திலேயே
அமிழ்ந்திருக்க...
அம்மா, பாட்டி, அத்தைகள்
யாவரும் தூக்கத்திலிருந்து
வெளிவர போராடியபடி...
இந்த டீயை குடித்து விட்டு
மிச்சத்தை போடம்மா...
தலையில் ஒரு கம்பளி
போட்டுகொள்ள கூடாதா?
ரொம்ப குளிருதே...
சின்ன கோலமா போடேன்...
கூஜாவிலிருந்து டம்ளருக்கு
மாறிய சூடான கடை டீயுடன்
உண்மை கரிசனத்துடன்
என் தாத்தா...
எல்லாம் தூங்கரதை பாரு
சின்ன குழந்தையை
கோலம் போட விட்டுட்டு....
என்னால் மற்றவர்களுக்கு
கிடைக்கும் போனஸ் திட்டு...
பஜனை வரும் நேரத்தில்
அவசரமாக கோலத்தை
முடிக்கும் அடுத்த வீட்டு
சின்னப் பாட்டி...
பாம்பு கிடக்கும் நீ
தனியே கொல்லைக்கு
போகாதேன்னு
எத்தனை முறை
சொல்றது...
பதறியபடி
பூசணிப்பூ பறித்து தரும்
என் ஆசைபாட்டி...
தூக்கம் வராமல்
பார்த்துக்கொண்ட
கோவில் ஒலிபெருக்கியின்
சத்தமான பக்தி பாடல்கள்
அரையாண்டு பரிட்சைகள்..
இடையில் படிக்க கிடைத்த
விடுமுறை நாட்கள்...
குளிர் கால மதிய வெயில்
சுட்டெரிக்காமல்
மெல்ல பட்டுச்செல்ல
நாள் முழுதும்
ஊதல் காற்று...
தூரத்தில் கேட்கும்
பறவைகளின் ஒலி
குயிலின் ஒசை
புது பாவாடை சரசரக்க
இனிப்பு வழங்க
வரும் பிறந்த நாள் சிறுமி
இந்த வீட்டுக்கோலம் தான்
ரொம்ப பெரிசா அழகா இருக்கு...
ஆச்சரியத்தபடி போகும்
வழிபோக்கர்கள்...
"யாரு தாத்தா
கோலம் போட்டது?"
"என் பேத்திம்மா"
பெருமையாய்
என் தாத்தா புன்முறுவலுடன்...
என் வீட்டு வாசலில்
சிறிதாய் கோலமிடும் என் அம்மா...
"என்னடீ தாத்தா வீட்டில்
பெரிய கோலமா போடுற
இங்க சின்ன கோலம்
தான் போடமுடியுது
தினமும்"
குளிர் ஒத்துக்கொள்ளாத
அங்கலாய்ப்புடன் அன்பு அம்மா...
"இனி இங்கயும் பெரிய
கோலம் போடுறேம்மா"
இருவீட்டிலும் கோலம்
போட்டு காலை ஏழு மணிக்கு
படுத்துறங்கிய சில நாட்கள்
போகி பொங்கல்
பொங்கல்
மாட்டுப் பொங்கல்
நாட்களில் மட்டும்
என்னை கோலம் போட விடாத
வில்லி அத்தைகள்...
அன்றெல்லாம் அம்மாவின்
திருப்த்திகாய்
இடம் தெரியா வண்ணம்
பாய் விரித்தது போல் ரங்கோலி
என் வாசலில்...
இள வேனிற் காலம் முழுதும்
மார்கழி நினைவில்....
அடுத்த மார்கழி எப்போது
வருமென காத்திருப்பு...
"அவள் வெளி நாட்டில்
இருக்கிறாள்"
இன்று
பெருமையாய் என்
பெற்றோர்...
ஆறாம் மாடியில்...
அப்பார்ட்மென்ட்
வாசலில்....
இருக்கும் இடத்தில்
கோலமிட
மனமில்லாமல்
அதே நான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக