24 டிசம்பர், 2010

சுள்ளென்று ஒரு காதல்...

"ஏய் இங்க வா, என்ன பண்ணிகிட்டு இருக்க அங்க?"
அன்பு அதில் மிச்சமிருப்பதாக கற்பனை செய்து கொண்டோ, தர்க்கத்திடம் சமரசம் செய்து கொண்டோ கரைத்துக்கொண்டிருந்த புளியை அப்படியே வைத்து, கொதித்துக்கொண்டிருந்த பருப்பை சிம்மில் வைத்து விட்டு கூடத்திற்கு சென்றாள் அவள். இரு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து இப்போது தனியே குடித்தனம் செய்யும் ஜோடியில் ஹீரோயின் இவள் பெயர் நிலா,

"ஏண்டா இப்படிக் கத்துற மெதுவாவே பேசத்தெரியாதா உனக்கு? ஸ்பீக்கர் தொண்டை. இந்த சோ கால்டு ஸ்பீக்கர் தொண்டை தாங்க நம்ம கதையோட ஹீரோ பேரு

வெங்கட் பீ. ஏ. ஹிஸ்டரி கடைசி பெஞ்சு ஆனலும் பாஸ் பண்ணிட்டான். இப்ப நம்ம ஹீரோ வோட புலம்பலை கேப்போம்.

'வெளில தாங்க நாங்க காதல் திருமணம் கைகூடுன ஜாலியான ஜோடி, இங்க வந்து பாத்திங்கன்னா தெரியும் என் பிழைப்பை, எப்ப பாத்தாலும் ஆர்டர் போட்டுகிட்டு... இதுக்கு தான் ஒரே வயசுல கல்யானம் கட்ட கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க போலயிருக்கு. அப்போ தெரியல எனக்கு! வெண்ணிலா வை சுருக்கி நிலான்னு
வைத்துக்கொண்டால் தான் ஸ்டைலாம். பாருங்க என்னை போடா வாடா ன்னு தான் கூப்பிடுறா, மத்தவங்களுக்கு எதிர அவ என்னை மரியாதையா பேச முயற்சி செய்யுரப்போ எனக்கு வர்ர சிரிப்ப அடக்க முடியாம நான் திண்டாடுறதை பார்த்து இவளே முடிவு பண்ணிட்டாளாம் இனி போடா வாடா தான்னு. அட அதுவாச்சும் பரவாயில்லைங்க நேத்து ஒரு வேலை பண்ணியிருக்கா பாருங்க... '

என்ன ? கூப்பிட்ட அப்புறம் பேசாம உக்காந்திருக்க? சொல்லு அடுப்பில வேலையிருக்கு.

"ஆம்மாண்டி உனக்கு அடுப்பில வேலையிருக்கும், பேங்க்ல வேலையிருக்கும் ஆனா எங்கிட்ட பேச மட்டும் நேரமிருக்காது" என்றான். "என்ன தான் கோபமா நான் திட்டினாலும் அவ மேல உண்மையான கோபமே இல்லன்னும் என்னை கவனிக்க வைக்க கத்துறேன்னும் ஈசியா கண்டுபிடிச்சுடுறா"

கொஞ்சம் இரு வரேன்னுட்டு உள்ள போனவ காப்பியோட வெளில வந்தா.

என் கையில் கொடுத்துட்டு எதிர்ல உக்காந்துகிட்டா.

"என்ன தெரியனும் உனக்கு. உன் கிட்ட ஆயிரம் முறை சொல்லியாச்சு, நான் லோன் அப்ளை பண்ண போறேன்னு. உன் வருமானத்தை வச்சு மூணு வேளை சாப்பிடலாம் அவ்வளவுதான். என்னையும் வேலைக்கு போகாதன்னு சொல்லிட்ட சரி. போகல. என் ஒய்ஃப் எங்கயும் கைகட்டி நிக்ககூடாதுனு சொல்லிட்ட, பெருமையா இருக்கு, ஆனா எனக்கு இருக்குற மிச்ச நேரத்துல ஏதேனும் சீரியல் பாத்துகிட்டு வீட்டை துடைச்சுகிட்டு இருந்தா நீ சந்தோஷமா இருப்பியா? ஏதாவது செய்யனும்னு எனக்கு தோணுது. ஒரு லட்சம் இருந்தா ஒரு சொந்த தொழில ஆரம்பிச்சுடலாம். கொஞ்ச நாள் கஷ்டபட்டா அப்புறம் நல்லா வந்திடலாம். நீயும் எவ்வளவு காலம் தான் இந்த சொற்ப சம்பளத்துக்கு கஷ்ட படுவ. இவளைக்கட்டுனதுக்கு பேசாம பெத்தவங்க சொன்னவளையே கட்டியிருந்தா இன்னும் எப்படியோ வசதியா வாழலாமேன்னு உனக்கு தோணுதில்ல. என்னால பொறந்த வீட்டு சீதனம் எல்லாம் கொண்டு வர முடியாது. ஏண்டா இவள லவ் பண்ணிணோம்னு நீ நினைச்சிட்டா அன்னைக்கே நான் செத்துடுவேன்." எதற்கும் கலங்காதவள் இன்று கண்ணீரோடு அவன் எதிரில்.

"என்னை புரிஞ்சிகிட்டது அவ்வளோதானா? உன்னை கஷ்ட்டபடாம காப்பாத்தனும்னு தானே டி நான் இவ்வளவும் செய்யுறேன்." என்றான் நிராயுதபாணியாய்.

"அது தான் கஷ்டமாயிருக்கு எனக்கு. எவ்வளவு பாரத்தை உன் மேலயே சுமத்துறது? இதுக்கு உன்னையும் கூட கூட்டிட்டு போகலாமின்னு தான் இத்தனை நாள் காத்திருந்தேன். நீ வர்ரதாயில்ல. என்ன தான் சமாதானம் ஆகிட்டாலும் என் வீட்டுக்கோ உன் வீட்டுக்கோ போய் நிக்க முடியாது. அதான் நானே போனேன். தப்பா? அப்படியும் ஏதாச்சும் ஷூரிட்டி இல்லாம லோன் ஒகே ஆகாதுன்னு சொல்றாங்க" நிலா.

சற்று யோசித்தவன், "சரி கிளம்பு" என்றான்.

"எங்க" நிலா

"நீ வா என் கூட" வெங்கட்

சற்று நேரத்தில் தான் படித்த கல்லூரி பேராசிரியரின் வீட்டின் முன் கொண்டு வண்டியை நிறுத்தினான்.

"இறங்கு" அவள் ஏற்கனவே லோன் கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்தாள். கல்லூரியில் படிக்கும் போது இவர்களின் மேல் மதிப்பும் பரிவும் கொண்ட பேராசிரியர். நிச்சயம் உதவுவார். இது ஏன் நமக்கு தோன்றவேயில்லை? சிந்தித்தபடி நடந்தாள்.

சற்று நேரத்தில் எல்லாம் நல்லபடியாக கையெழுத்தாகியது. "என்ன நிலா இதை ரெண்டு வருஷம் யோசிச்சியா? முன்னாடியே கேட்டிருக்கலாமே". என்றார் பேராசிரியர்.

"தயக்கமா இருந்துச்சு சார்" நிலா.

"காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட எத்தனை பேர்

இப்படி முன்னேற ஆவலோட இருக்காங்க? உங்களுக்கு உதவுறது எனக்கு ரொம்ப திருப்தி ம்மா. நல்லா முன்னுக்கு வாங்க". என்றவரிடமிருந்து ஆசிகளுடன் விடை பெற்று வீட்டுக்கு வந்தார்கள்.

எவ்வளவு நாள் கனவு, எப்படி ஒரு உதவி, நிமிடத்தில் செய்து விட்டானே இவன். தன் மேல் இவனுக்கு அன்பில்லையோ என சந்தேகபட்டதை நினைத்து வெட்கப்பட்டாள். அவன் கைகளை பிடித்துக் கொண்டு "தாங்க்ஸ் டா" என்றாள். "இன்னும் நீ என்னை புருஷனாவே ஏத்துக்கலை, கூட படிச்ச ஃப்ரெண்டா தான் நினைக்கிற...  ஏத்துக்கிட்டிருந்தா  தள்ளி நின்று  நன்றி சொல்லமாட்டே" என்றவனை நன்றியுடன் பார்த்த அவள் அணைத்து விட்டிருந்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்தாள் இந்த முறை ஈடுபாட்டோடு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக