வெற்றுக்கட்டம் இல்லை
செவ்வகம் அழைக்கிறது...
ஏதேனும் எழுது என்னுள்
தினமும் எழுது...
இல்லையென்றால் உன்
நாள் முழுமை பெறாது
என்கிறது...
ஏதோ தட்டுகிறேன்
பின் அழிக்கிறேன்..
வரைவாக சேமிக்கிறேன்..
சில சமயம் அதையும்
அழிக்கிறேன்....
பல சமயம் எழுதாமலே
மூடி விடுகிறேன்...
மிகச்சில சமயம்
என்ன எழுத போகிறோம்
எனத் தெரியாமலே
ஆரம்பித்து...
கைகள் தானாக தட்டச்ச
பிறக்கிறது அழகான கவிதை...
அப்போதெல்லாம் என் தாக்கம்
அதனுள் இருப்பதாக
தெரிவதில்லை...
எழுதி முடித்து பின்
சரி பார்க்கும் போது கூட
தோன்றுவதில்லை
மறு முறை படிக்கும் போதும் தான்...
இந்த கவிதை பிரசவத்தில்
என் பங்கு என்ன
யோசித்து யோசித்து
பார்த்தால்
மறுபடியும் பிறப்பது
இன்னொரு கவிதை...
உள்மனம் சொல்கிறது
அந்த கவிதையே நீ தானடி
உன்னில் உன் பங்கை
எப்படி பிரிப்பாய்? என
இது புரியாத புதிராய் நீள
எதற்கும் நிறைவடையா
மனம் ஓடுகிறது
இன்னும் ஒரு கவிதையின்
பிரசவத்துக்காய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக