எப்போதும் என் கழுத்தைக்
கட்டிக்கொண்டிருக்கும்
உன் கைகள்
அம்மா அம்மா என்றழைக்கும்
உன் இனிய குரல்
என்னைத்தூக்கியே
வைத்துக்கொள்
என்று கேட்கும்
உன் நீட்டிய கைகள்
நொடிக்கொரு முறை
அம்மாவை பார்த்து
இங்கு இருப்பதை
உறுதிபடுத்திக்கொள்ளும்
ஜாக்கரதை உணர்வு
மூன்று வயதிலும்
புட்டியில் பாலை
அம்மா மடியில் படுத்து
குடிக்க காத்திருக்கும்
அந்த பொறுமை
உன் தீராத விளையாட்டில்
திக்குமுக்காடிப்போகும் நான்
உன் வம்பில்
கோபம் தலைக்கேறி
சத்தமிட ஆரம்பித்தால்
அமைதியாய் அருகில் வந்து
அம்மா என்று அடிக்குரலில்
நீ செய்யும் சமாதானம்
இத்தனை நாட்கள்
நான் உன்னை
பார்த்துக்கொண்டேனா?
நீ என்னை
பார்த்துக்கொண்டாயா?
உன்னை மழலையர்
பள்ளியில்
விட்டு வெளியில்
நான் அழுகிறேன்
உன் முகம்
வாடியிருக்குமோ
வெளியில் நின்று
கதவிடுக்கில்
பார்க்கிறேன்
வீடுவர மனமேயில்லாமல்
அங்கேயே
ஒரு மணி நேரம்
சுற்றுகிறேன்.
நீ விளையாடுவதை பார்த்து
வீடுவந்த பின் தான் தெரிகிறது
ஒரு மணி நேரம்
ஓய்வு கிடைக்காதா
என ஏங்கிய நாட்கள் போய்
நீ இல்லாத இந்த நேரம்
வெறுமை சூழ்ந்து
தித்திப்பே இல்லாத
சர்க்கரை போல்
கசப்பே இல்லாத
பாகற்காய் போல்
உன் சத்தம் இல்லாத வீடு
அமானுஷ்ய அமைதியாய்
இந்த மூன்று மணி
நேரப்பிரிவு
யுகயுகமாய் நீள
தாங்கமுடியாமல்
தவிக்கிறேன்
கண்ணே உனக்கேனடா
இவ்வளவு அவசரமாய்
மூன்று வயது
முடிந்தது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக