10 அக்டோபர், 2017

கல்வி

இங்கொன்றும் அங்கொன்றுமாய் 
புத்தகங்கள் சிதறிக்கிடக்க
தலையைக் குனிந்தபடி
படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் தானிருக்கிறான்
படித்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை என்ற சிந்தனையை அவணுள் திணித்தபடி
கல்விச்சுமையை கறுவியபடி
காத்துக்கொண்டிருக்கிறேன்
அவன் எழுதிய விடைத்தாளை திருத்துவதற்காக
முழுதும் பள்ளியை நம்பி அவன் படிப்பை விட முடியாத என் இயலாமைக்காக
அவனை வதைத்தபடி...

8 ஜூன், 2017

மென் வில்லை

விரல் நுனியில் தொட்டு 
விழிகளில் இட்டு
கண்ணாடியில்
முகம் பார்க்க 
பிரகாசம்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை 
சரியான அளவுகளில் நிறங்களில்
அனைத்தும் ஆச்சர்யம்

அவ்வப்போது திறளும் கண்ணீர் 
மட்டுமே என் எதிரி இப்போது 
வழுக்கிவிடலாம் என் விழிகளில் புதியதாய் 
புகுந்திருந்த அந்த மென் வில்லை

18 மே, 2017

சீக்கிரம் வளரணும்..


“விருப்பமானதை சாப்பிடக்கூட முடியவில்லை சீ இதெல்லாம் ஒரு வாழ்வா?” கோபமாக வந்தது ராமுவுக்கு. பிக்கி ஈட்டர்ன்னு பேரு வச்சி பிடிக்காததெல்லாம் தட்டுல வச்சி சாப்பிட்டே ஆகனுன்னா, எப்படி சாப்பிடுறது? ச்சே… சின்ன பிள்ளையாவே பிறக்க கூடாது, டூ டிரபிள்சம். சின்ன பிள்ளையா பிறக்காம வேற எப்படி பிறப்பாங்களாம்? என்றும் தோன்ற லேசாக சிரிப்பும் வந்தது.
எங்கம்மா, நல்லா சாப்பிடலன்னா உடலுக்கு சக்தி கிடைக்காதுன்னு ஆரம்பிச்சு ஒரு மினி டைஜஷன் வகுப்பே எடுப்பாங்க. இவங்க என்னை சாப்பிட வைக்குறதுக்காகவே அறிவியல் படிச்சாங்களோன்னு இருக்கும். அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட். சாப்பிட்டே ஆகனும்னு வற்புறுத்தல். வயிறு நிறைய சாப்பிட்ட பின்னும் அது போல இன்னொரு அளவு சாப்பிட சொல்லி பாடாய் படுத்துவார். லீவு நாளுன்னா  நான் தொலைஞ்சேன், தட்டு நிறைய சாப்பாடு போட்டு முழுக்க முடிக்கிறவரை அவரே ஊட்டுவார்.
எனக்கு மட்டும் பவர் இருந்தா அவருக்கு மூன்று ஃபுல் மீல்ஸ் வாங்கி தந்து ஃபினிஷ் பண்ணிட்டு தான் எழுந்திரிக்கனும்னு ஃபோர்ஸ் பண்ணுவேன். அப்ப தெரியும் என் கஷ்டம் என்னன்னு.
அப்படியெல்லாம் நான் ஒன்னும் பெரிய அண்டர்வெயிட் இல்ல. ஒன்பது வயசு, எடை 20 கிலோ. பள்ளி குறிப்பெட்டில் ஒத்துக்கொள்ளகூடிய எடைன்னும் இருக்கு. ஆனா அவர் மட்டும் ஒத்துக்க மாட்டார்.
போன மாதம் எனக்கு ஜுரம் அடித்து விட்ட பின் இன்னும் மெலிஞ்சுட்டேன். சும்மாவே சாமியாடும் அப்பா தினம் பேயாட்டம் ஆட அரம்பிச்சுட்டார். அதன் பலனாக தினமும் ருசியே தெரியாத மருந்து சாப்பிட்டு மறத்த நாக்குடன் நிறைய சாப்பிட வேண்டியதாயிற்று. அப்புறமும் எடை துளிகூட ஏறல. எனக்கு ஏதோ உடற்குறை இருக்கிறதா நானே நம்ப ஆரம்பிச்சுட்டேன்.
நல்லவேளை பாட்டி தான் சொன்னாங்க எடையப் பத்தி கவலைபடாதடா நல்லா ஓடி விளையாடு பசிச்ச பின் உனக்கு பிடிச்சதை சாப்பிடு. உடம்பு ஆரோக்கியமா இருக்கும், பயப்படாதே, உனக்கு ஒன்னுமில்லன்னு.
எனக்கு மைலோ ரொம்ப பிடிக்கும், சிக்கனும், முட்டையும் கூட பிடிச்சுது ஒரு நாள் அண்ணாவின் வாட்சாப் குரூப்ல அந்த மெசேஜ் பாக்குற வரை…”இன்னிக்கு அம்மாவையும் பிள்ளையையும் சாப்பிட்டோம்”னு கொடுமையா எழுதி இருந்தாங்க. அப்புறம் விட்டுட்டேன். மட்டன் பிடிக்கும் ஆனா வாரம் ஒரு நாளுக்கு மேல சாப்பிட்டா நல்லா இல்லை. கீரை, பூரி, ரோட்டிப்ராட்டா, தோசை, நூட்ல்ஸ், சாம்பார், தயிர் சாதம், பச்சை ஆப்பிள், திராட்சை, தர்பூசணி , கோன் தோசை, ப்ரெட், டொமேட்டொசாஸ் னு என் லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு.
இதுல எல்லாம் எந்த சத்தும் இல்லன்னு அப்பா சொல்வார். “சத்து இல்லனா ஏன் ஃபுட் பிரமிட்ல போட்டு உலக உணவு கழகம் பரிந்துரை செஞ்சிருக்கு” னு நான் கேட்டதுக்கு அவர் இன்னும் பதில் சொல்லவேயில்ல. அதன் பிறகு அவர் எந்த காரணமும் இல்லாம கத்துறதா தோணுது.
நான் கோயிலுக்கு போயி வேண்டிக்கிறது எல்லாம் அப்பா வீட்டுக்கு வந்தா அமைதியா இருக்கனும் சாமின்னுதான். ஆனா சாமி தான் பாவம் பிசியா இருக்கு போல அதான் இன்னும் செய்யல. நான் சீக்கிரம் வளரணும்….






14 அக்டோபர், 2016

இடுக்கண் வருங்கால் நகுக

வள்ளுவர் இதை ஏன் எழுதினார் என்று சிந்தித்தால், ஓவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் தோன்றும். ஆனால் இப்போது எப்படி யோசித்தாலும் ஒரே ஒரு  காரணம் தான் தோன்றுகிறது. இன்பமும் துன்பமும் ஒன்று முடிந்து மற்றது வருகிறது, நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் மாறுபாடு. எது வந்தாலும் முழுவதும் எதிர்க்காமல்  நம்மை தாண்டிச் செல்ல அனுமதித்தால் தானே ஓடி விடும். இதைத்தான் வள்ளுவர் கூறியிருக்கிறார். போராடி பார்த்து இது சரியான வழி இல்லை என்பதை மனப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டுமே இந்த புரிதல் சாத்தியம்.

13 அக்டோபர், 2016

அம்மாவின் ஆசிர்வாதம்

காலையில் வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு அம்மாவிடம் தொலைபேசியில் பேசினேன். வாழ்க்கை பல பாடங்களை கற்று கொடுக்க அவற்றை அலுப்பில்லாமல் மனதிடத்துடன் கற்று, பல இன்னல்களை தாண்டி திடமான இப்போதிருக்கும் அம்மாவின் மேல் அன்பும், மதிப்பும் அதிகமாகிறது.

எவ்வளவு பெரிய பிரச்சனை ஆனாலும் இலகுவாகவும் தீர்க்கமாகவும் முடிவு எடுத்து அதில் திடமாக நிற்கும் இயல்பு அவரிடம் முன்பிருந்தே இருப்பதுதான் என்றாலும் என் பதினைந்து வருட திருமண வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அணுகுமுறையும் எவ்வளவு சரி என்பது தெள்ளத்தெளிவாக இப்போது புரிகிறது.

நீண்டகாலமாக எழுதுவதை விட்டு இப்போது மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆவல் இருப்பதை நான் சொன்னவுடன் "உடனே ஆரம்பித்து விடு" என்றார். "எழுதினால் யாருக்கேனும் உபயோகமாக எழுத வேண்டும் இல்லாவிட்டால் பயன் இல்லை அம்மா" என்ற போது நெத்தியடியாய் ஒன்று சொன்னார், "உனக்கு பிடித்ததை, நீ அவதானித்த செய்திகளை எழுதுவதற்கு என்ன தயக்கம்? இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் உன்னால் எதையுமே செய்ய முடியாது, தயங்காமல் ஆரம்பித்து விடு" என்றார். "எழுதுவது உனக்கு விருப்பம் என்றால் எழுது. என்ன பயன் வேண்டும். அந்த செயல் தரும் நிறைவே பயன் தான்". என்றார். சரி தானே என்று நினைத்த போது, கூடவே மேலும் ஜீரணிக்க சிரமமான சில குண்டுகளையும் தூக்கிப் போட்டார்.

"இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் உருப்படியாக செய்ய தெரியாது, யாராவது ஒரு நோக்கம் கொண்டு எதையாவது முயற்சி செய்தால் அதை விமர்சனம் செய்யத்தெரியும், பின் இவங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்று அங்கலாய்க்க தெரியும். ஏதாவது செய்து அந்த முயற்சியை தடை செய்யத்தெரியும். இது உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதே தான். இந்த தடங்கல்களைத் தாண்டி தைரியமாக என்று செல்கிறாயோ அன்று உனக்கு எல்லா முயற்சியும் பலன் அளிக்கும்" என்றார்.

உண்மை தானே? எல்லாம் நிதர்சனம். சரி முயற்சிப்போமே என எழுத தொடங்கி விட்டேன். நன்றி அம்மா.


9 ஜூலை, 2016

கோடியம்மாள் பாட்டி

வாய்மூடி புன்னைகைக்கும் 
அழகான தோழி

நளினமாய் வெளிப்படும் 
அன்பும் 
கருணையும் கோபமும் கூட
உன் அழகு

எவ்வளவு துன்பம் வந்தாலும் 
நல்லதையே செய்யும் 
என் அருமை பாட்டி
உன்னிடம்  நான் 
கற்றுக்கொண்ட
பெரிய படிப்பு அதுதான்

தாத்தாவுக்கு பிடிக்காது என 
நிறைய நகை போட்டு பார்க்காமல்
வெளிர் நிறம் உடுத்தாமல்
வாழும் நல்ல மனைவி

எத்தனை முறை 
தாத்தா கத்தினாலும் 
அமைதியாக அடுத்த வேலையை 
பார்க்கும் அன்புப் பாட்டி

ஊர் வம்புக்கு போகாமல்
வெட்டிப் பேச்சு பேசாமல் 
இன்று வரை வாழும் 
மனிதருள் மாணிக்கம்

யாராவது வலிய வந்து 
அவதூறு பேசினாலும்
பெரிய எருமை சாணியை 
ஒதுக்குவது போல் 
ஒதுக்கிவிட்டு 
உன் வேலையை போய்ப் பார் என
சாதாரணமாய் நிலைமையை 
சமாளிக்கும் திறமைசாலி

உன் வாடாமல்லி நிற குங்குமம் 
வேண்டும் என கேட்டபோது
குனிந்து என் நெற்றியோடு 
உன் நெற்றி வைத்து 
தலையை ஆட்டி 
அழுந்த பதிய வைத்தாய்

தாத்தா இறந்த பின் 
ஊருக்கு போய்வந்த நீ
என்னிடம் கேட்டாய்

இந்த வீட்டில் இருக்க 
பயமாய் இல்லையா என்று
ஏன் என்று நான் கேட்க
தாத்தா வந்தால் என்ன செய்வாய் என்றாய்

எதுக்கு பயம்? 
வாங்கன்னு சொல்லி 
உட்கார வைத்து 
பேசிக்கிட்டிருப்பேன் என்று நான் சொல்ல

உன் கண்ணில் நிறைந்த கண்ணீரும்
அப்போது நீ தந்த முத்தமும்
இன்னமும் மறக்கலை

தாத்தா இடத்தில் தினமும் 
வந்து உட்கார்ந்த அந்த சின்ன குருவிக்கு
தினமும் சாப்பாடு தண்ணீர் வைத்தது
பசுமையாய் நினைவிருக்கு

பாட்டி எனும் சொல்லைவிட
ஆத்தா என்பதே மனதிற்கு 
நெருக்கமாயிருக்கு

ஆத்தா எனும் பேரிளம் பெண்
என் முதல் உதாரண மங்கை

வாழ்க பல்லாண்டு

உன் பிறந்த நாளில் வாழ்துகிறேன்







23 ஜனவரி, 2016

ஞானம்



தேடலின் அக்னி தீவிரமாய் 
தேடிய மனத்தையே அழிக்க 
ஆரம்பித்திருந்த தருணம்

பல பயிற்சிகளையும் முயற்சிகளையும்
கெட்டியாக பிடித்திருந்த நேரம்

புலால் விலக்கி விரதமிருந்து
உடல் வாடி மனம் வாடி
நொந்து நோய் அடைந்த கணம்

முயற்சிகளெல்லாம் தோல்வியடைந்த  நொடி
சட்டென ஒரு மாயை

மனம் தானே இயங்குவதையும்
ஓடிச்சென்று அதனுடன் குழப்பம் செய்யும் 
மனதின் இன்னொரு பகுதி 
தனியாக இயங்குவதையும் தெளிவாக உணர்த்திய

அந்த வினாடி மிகச்சிறியது தான்
ஆனால் கிடைத்தற்கரிய மிகப்பெரிய பரிசு

விடுதலையான விந்தை
தொடர் மனப்போராட்டம் 
முற்றுப்பெற்ற முடிவு

ஓயாத மன அலைகள் 
இப்போதும்....
ஆனால் அவை ஒடும் போது 
உரசல்கள் இல்லை 
தடங்கலற்ற வெள்ளப் பிரவாகம்

இப்படியும் ஒரு ஞான நிலை 
இதே பைத்தியக்கார மனதில்....













10 நவம்பர், 2014

தோல்விக்கு நன்றி

தோல்விக்கு நன்றி

கிடைத்தற்கரிய 
பல பாடங்களை மௌனமாய்
மனதில் பதியவைத்து

பல மாற்றங்களை
கவனமாய் நடைமுறைப்படுத்தி

கசப்பின் வழி இனிப்பின் 
அருமையை 
உணர வைத்து

கசப்பை வெறுத்து
இனிப்பை விரும்பும் இருமையையும்
வெட்டி வீழ்த்தி

இதுவரை உணர்ந்திராத 
மனத்தின்மையை 
வெளிச்சத்தில் கொண்டுவந்து

பெருஞ்சுமையை மனத்திலிருந்து 
இறக்கி வைத்து

எதையும் பிறருக்காக 
அவர்களிடம் மதிப்பு 
உயர வேண்டும் 
என்பதற்காக செய்யும் 
கோமாளித்தனங்களை
அவற்றில் செலவாகும் 
ஆற்றலை மிச்சப்படுத்தி

லட்சியக்கனவில் பறந்து கொண்டிருந்த
மனதை தட்டி எழுப்பி

கோபமும் அச்சமும் மனஉச்சத்தில் 
ஏறி இறங்கும் போது 
வீணாகும் ஆற்றலை 
புரிய வைத்து

எங்கெங்கோ தேடி அலைந்த 
மன அமைதியும், நிறைவையும்
இருக்குமிடம் சுட்டிக்காட்டி

தேடுதலின் தேவையின்மையையும்
ஆழ உணர்த்தி

அமைதியின்மையின் ஆணிவேரை
அப்புறப்படுத்தி

வாழ்வின் பொருளை 
உணரவைத்து

இப்படி ஒரு நிலை
என்னுளேயே இத்தனை காலம் இருந்ததை
எடுத்து அறிவித்த

தோல்விக்கு நன்றி.....

7 ஜூன், 2014

மனம் இப்போது...

நோக்கமின்றி காயபடுத்தியதில் 
வலியொன்றும் பெரிதாயில்லை
தாக்கமெதுவும் மனதிலில்லை

கோபத்தில் மோதியதில்
கோபம் தீர்ந்த பின்
வருத்தமும் திருத்தமும் 
மட்டுமே மிஞ்சியது

வேண்டுமென்றே காயப்படுத்துவது
எப்போதுமேயில்லை என்பதில்
மமதை தோன்றுகிறது

தன் தவற்றிலிருந்து
தானே கற்றுகொள்வது
அறிந்து மனம் தெளிந்தது

மனம் வேறு, புத்தி வேறாய் 
நின்று வாதம் செய்யச் செய்ய
இரண்டிலிருந்தும் தள்ளி நின்று 
நான் இரண்டுமல்ல என்பது
புலனாயிற்று

முதலும் முடிவும் தெரியாமல்
குழம்பி கிடக்கும் மனிதம்
சிறு தெளிவிலும் 
பெரிதாகத்தான் திளைக்கிறது

6 ஜூன், 2014

மழையில் ஒரு பயணம்



திகட்ட திகட்ட நனைந்தேன்
குளிர் எலும்புகளில் ஊடுருவ
நடுங்கிக்கொண்டே நடந்தேன்
மழையை விருப்பத்துடன் என்னில்
வாங்கிக்கொண்டேன்

 முன் செல்லும் என் மகன் அறியான்
நான் நனைந்துகொண்டு
அவனிடம் குடை கொடுத்தது
அவனுக்காக மட்டும் அல்ல என்று


3 நவம்பர், 2011

மறந்து போன தமிழ் தட்டச்சு

மிக நீண்ட காலமாய் திறக்கப்படாத தமிழ்ச்சோலைக்குள் இப்போது சும்மா போவோமே என்று பார்த்தால் அட நாமா இவ்வளவு வளவள என எழுதி தொலைத்திருக்கிறோம் என ஆச்சர்ய படும்படி பழைய இடுகைகள் எல்லாம் யாரோ எழுதியது போல் அன்னியபட்டு நிற்கின்றன. அஹா மறுபடியும் எழுதியே ஆகவேண்டும் என்ற தோன்ற தமிழில் தட்டச்ச தாறுமாறாக போகிறது வார்த்தைகள். இதுவரை எழுதாததால் இணையத்தில் என் பங்குக்கு சில குப்பைகளை சேர்க்காமல் இருந்த திருப்தியை இப்போது இழக்கப்போகிறேன். சரி. இன்னும் 1 எம் பி சேர்வதால் இணையம் கனமாகிவிடாது என்ற எண்ணத்தில் தொடர்கிறேன். வெட்டித்தனமாக இல்லாமல் எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று செய்த நேரம் போய், இன்னும் கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்காதா என்றாகிவிட்டது வாழ்க்கை. மனதின் பழைய நிறைவின்மை கொஞ்ச காலம் புதிய சவாலான வேலைக்குள் ஒளிந்திருந்தது போலும்... இப்போது மெல்ல மீண்டும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. வேலை செய்யாமல் வீட்டிலிருப்பது தான் நிறைவின்மை தருகிறது என்ற தப்பான எண்ணம் இப்போது இல்லை. ஆனால் எதை கொட்டி நிறைப்பது என்பது பெரிய கேள்வியாய் இருக்கிறது. கேள்வியே தெளிவாக இல்லாதபோது பதில் எப்படி கிடைக்கும்? இது இப்படித்தான் வெகுகாலமாய் என்னை குடைகிறது. சரி எதில், எப்பொது பதில் வருமென விழித்திருக்கிறேன்.

30 ஜூன், 2011

இங்கா...



இங்கா...

இதோ எங்கோ ஒரு அசௌகர்யம்
ஆரம்பமாகி விட்டது
இப்போது நெளிய ஆரம்பிக்க வேண்டும்
மேலே அதென்ன ஒரு முகத்தையும்
காணவில்லை
சரி கொஞ்சமாக கத்திப்பார்ப்போம்
வந்து விடுவாள்
"இங்கூ... இங்கூ..."

தலையை திருப்பி திருப்பி பார்த்தும்
ஒன்றும் தெரியவில்லை
இம்ஹூம் வருவதாக தெரியவில்லை
அதற்குள் ரொம்ப வயிற்றை என்னமோ செய்கிறதே
சரி வேறு வழியில்லை வேகமாக கத்த...
உர்ரே...உர்ரே.....இம்ம்ம்...ம்மா...
இங்கா....இங்கா....இங்கா...

அட பதறியதித்து வருபவள்
அவளே தான் என் தேவதை, அம்மா

அச்சச்சோ பிள்ளைக்கு பசிக்குதா?
இதோ அம்மா வந்துட்டேன்
அழாத செல்லம் என்று
இன்னும் என்னென்னவோ சொல்லி
தூக்கி கொஞ்சினாள்
பாலை வாயில் கொடுப்பதாய் தெரியவில்லை

இரு தங்கம் பாட்டி இங்கா ஆத்துறாங்க
இப்போ சாப்பிடலாம்
என்றபடி தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டாள்
இப்போ கொஞ்சம் அதென்ன? பசி... பரவாயில்லை
அட திரும்பவும் என்ன
இனி முடியாது
மீண்டும் கத்த வேண்டும் போலிருக்கு
அப்போதான் தருவாங்க
ஆ...இங்கா...இங்கா...

அப்போது பால் புட்டியின்
முனை வாயில் செருகப்பட
அப்பாடி ஒரு வழியா கொடுத்.....
முடக் முடக் என்று குடித்த வேகத்தில்
எல்லாம் மறந்து போயிற்று

அட குடித்து முடித்து விட்டேன்
இன்னும் இந்த அம்மா
புட்டியை எடுக்க மாட்டேங்குறாளே?
திரும்ப முயற்சி செய்த போது
இன்னொரு கை தலையை
நகர விடாதபடி பிடித்தது

வாயையும் வெளியில் எடுக்க முடியல
தலையையும் திருப்ப முடியல
ஆனா நான் குடிச்சிட்டேனான்னு
கூட பாக்க மாட்டேங்குறா...
என்ன அம்மா இவ?
சரி இப்படியே இன்னும்
எவ்வளவு நேரம் இருக்கனுமோ?

குழந்தை குடிச்சுட்டன் பாரு
தூக்கி தோளில் போட்டுத்தட்டு
ஏப்பம் விடட்டும்
என்ற அந்த குரல்
நல்ல வேளை சீக்கிரமே வந்தது.

அடாடா குடிச்சிட்டியா
சரி என்றபடி ஏப்பம் விட வைத்தாள்
பின் மீண்டும் கொஞ்சி விட்டு
படுக்கையில் போட்டு விட்டாள்
துணியை மாற்றி துடைத்துவிட்டு

மாவு அடிக்கும் போது
கொஞ்சம் வாசம் வந்தது
நல்ல நெடி மூக்கில் ஏறிவிட சச்சு இதென்ன?
அய்யோ பிள்ளை தும்முறான் சளி இருக்குமோ?
எதையோ எடுத்து தலையிலும் நெஞ்சிலும் தடவ
இது என்ன வேறு வாசத்துடன் ஜில்லுன்னு இருக்கே
கொலோன் தடவினா சளி சரியாகிடுமாம் தங்கத்துக்கு
சொல்லிக்கொண்டே தேய்த்தாள்
சளி இருந்தாத்தானே?

பவுடர் மூக்கில் ஏறி தும்மினேன்னு இவளுக்கு ஏன் புரியல
மக்கு அம்மா
இன்னும் என்ன செய்யிறா?
இந்த வெயில்ல கைக்கும் காலுக்கும் உறை போடுறாளே
இனிமே குளிறாது நல்லா தூங்குங்க சரியா?
மறுபடியும் முத்தம்

மடியில் கிடத்தி...
ஏன் இப்படி தட்டுகிறாள்?
நானே தூங்குவேனே...
இது என்ன கண்ணை மூடி இழுக்குதே
சரி இம்ம்..தூங்குவோம்....

ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இங்கா...

23 மே, 2011

எதிர்பாரா வாழ்த்து

எதிர்பாரா வாழ்த்து




--------------------------------------------------------------------------------



அன்று என் பிறந்த நாள். காலை கண்விழித்தவுடன் கணவரின் வாழ்த்து. வழக்கம் போல் சமையலை ஆரம்பித்து அதில் என்னை மறந்தேன். என் பெரிய மகன் விழித்தெழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவுடன், வாழ்த்து சொல்வான் என எதிர் பார்த்தேன். சொல்லவில்லை. சரி மறந்திருப்பானோ என விட்டு விட்டேன். சற்று நேரத்தில் இன்று உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் தெரியுமா? என்ற அவன் தந்தையின் கேள்விக்கு மேல் கீழாகத் தலையசைத்தான். அப்போதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை. அப்புறமும் விடாமல் "ஏண்டா தம்பி அம்மா மேல கோபமா? என்றேன்". "இல்லம்மா உனக்கு ஆட்டோமேட்டிக்கா வாழ்த்து வரும்" என்றபடி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நடந்து கொள்வது முதல் முறையாக புதிராக இருந்தது. என்னவோ சரி என விட்டு விட்டு வேலை மும்முரத்தில் பிறந்த நாளை மறந்தும் போனேன். பின் சின்ன மகனை பள்ளியில் விட்டு கோவிலுக்கு சென்று வந்து மற்ற வேலைகளை பார்த்தேன். சின்ன பிள்ளை பள்ளி விடும் நேரமானது. அழைத்து வருவதற்காக கிளம்பி சென்று மின் தூக்கிக்காக காத்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்து வித்தியாசமான இசை கேட்கவே திடுக்கிட்டேன். அட கைத்தொலைபேசி ரிங்க் டோன் மாறி விட்டதா? இல்லையே சற்று முன் கூட ஒரு கால் வந்ததே அதற்கு வாய்ப்பே இல்லையே எனக்குழம்பியபடி, வெளியில் எடுத்து பார்த்தால், ஹேப்பி பர்த்டே என மின்னிய படியே இசை பாடியது. சரியாக நான் பிறந்த நேரத்தில் வாழ்த்து வரும்படி செட் செய்திருக்கிறான். சின்னவனாக இருக்க வாய்ப்பில்லை. எம்டி மெசேஜ் அனுப்பவும், கேம் விளையாடவும் மட்டுமே அவனுக்கு தெரியும். அவங்க அப்பாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. பெரியவன் தான். இரு நாட்களுக்கு முன் நீ பிறந்த நேரம் பகலா, இரவா? எத்தனை மணிக்கு பிறந்தே என்றெல்லாம் துளைத்தது இதற்கு தானோ என்றெண்ணிய போதே என் கண்களில் நீர் வழிந்தது. இந்த பிள்ளையை எவ்வளவு வருத்தப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அன்று அவன் பள்ளி விட்டு வந்தவுடன் மிகச் சாதாரணமாக "என்ன வாழ்த்து வந்ததா?" என்றான். "ரொம்ப தாங்க்ஸ் டா", என்ற போது. "உனக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னு தான் சொல்லலை" என்றான்.

10 மே, 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம் - 2

சென்ற இடுகையில் இருந்த கேள்விகளுக்கு விடை...

அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?


டட்டுக்கு எலும்பு சுலபமாக முறியும் ஒரு வியாதி இருந்திருக்கிறது. அதனால் அவன் ஊன்று கோலின் துணையுடன் நடந்திருக்கிறான்.


டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

அந்த மம்மியை பரிசோதனை செய்தபோது, மலேரியா கிருமிகளின்
பாதிப்பு தெரிய வந்துள்ளது. அந்த காலத்தில் மலேரியாவிற்கு மருந்து இல்லை என்பதால் இறந்திருக்கிறான்.


டட் பற்றி இன்னும் சில செய்திகள் அறிய இங்கு கிளிக்குங்கள்: முதல் பாகம்

28 ஏப்ரல், 2011

எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம்

படிப்பதற்கு முன் ஒரு நிபந்தனை..
படிக்கும் போது உங்க மனசுல தோணுற சில வசனங்களும் அடைப்புகுறிக்குள்ள இருக்கும், அதெல்லாம் சரியான்னு கண்டிப்பா கருத்துரைல சொல்லனும்! இல்லன்னாலும் வேற என்ன தோணிச்சுன்னு சொல்லனும், சரியா? (அட கருத்துரை வாங்க இப்படி ஒரு புது ஐடியாவா? அவ்வ்...)


அம்மா எங்கள் டீச்சர் கொடுத்தாங்க, படிக்கிறாயா? என்று இரு மாத இதழ்களை நான் பார்த்துக்கொண்டிருந்த நாளிதழின் மேல் வைத்துவிட்டு வீட்டுப்பாடத்தில் மூழ்கினான் என் மகன். அதில் வேகமாக விழிகளை ஓட்ட முதலில் கவனத்தை ஈர்த்தது 3000 ஆண்டுகள் முன்பு இறந்து போன அரசன் டட்டின்  மம்மி பற்றிய செய்தி தான். முன்பு பார்த்து மறந்து போன மம்மி படங்களின் காட்சிகள்  நினைவுக்கு வர படித்ததில், அதிலிருந்த மூன்று பக்க விஷயம் நிறையவே யோசிக்க வைத்தது. இப்படித்தான் ஆரம்பித்தது எகிப்த்திய மம்மிகளுடன் என் பரிச்சயம். எதையும் முழுதாக தெரிந்து கொண்டு விட எப்போதும் போல் பற்றிக்கொண்ட ஆர்வம் மேலும் சில தகவல்களை தேடவைத்தது. அதில் கிடைத்த சுவரஸ்ய சங்கதிகள் சில உங்களுக்காக....


முன்பு என் பள்ளிப்பருவத்தில் முதன் முதலாக  மம்மிகளையும், பிரமிடுகளையும் பற்றி என் அப்பா விவரித்து சொன்னார்,...
ஒரு அரசன் இறந்து போனால் அவனுடன் சேர்த்து ஒரு ராணுவத்தையே கொன்று பதப்படுத்தி பிரமிடுகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அவை இன்னும் கெடாமல் இருக்கின்றன என்று. ஒரு காவலன் இறந்து விட்டால் அது போல அரசனை கொன்று வைப்பார்களா என்று  நான் கேட்டது நினைவிருக்கிறது. (என்ன மொக்கை லாஜிக்!!!) எல்லா உயிர்களும் சரி சமம் தான்னு அன்னைக்கு தாங்க என் ஆசிரியை பள்ளியில் சொல்லியிருந்தாங்க ஹ ஹ. (என்னா கொல வெறீ !!!???!!!)

டட்டின் மம்மி இருக்கும் பெட்டி
சரி இனி அரசன் டட்டன்கேமன் பற்றி சில தகவல்கள்:
  • டட் அமர்னா என்ற எகிப்த்திய நகரத்தில் வளர்ந்தான்.
  • அப்போதைய எகிப்த்து அரசனான அவன் தந்தை டட்டின் ஒன்பது வயதில் இறந்து விட்டதால் அப்போதே அரசனாகி விட்டான்.
  • இவ்வளவு சிறிய வயதில் அரசனான டட்டுக்கு நாட்டை ஆள பெரியவர்களின் உதவி தேவைப்பட்டது.
  • டட்டின் செருப்பின் உள் பக்கத்தில் அவனுடைய எதிரிகளின் படங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. நடக்கும் போது மிதித்து கொல்வதாக நினைத்துக்கொள்வார்களாம்.
  • அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நூறு ஊன்று கோல்கள் இருந்தனவாம். இவை ஏன்?
  • டட்டுக்கு தானே நாட்டை ஆளும் வயது வந்த போது ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டான். ஏன்?

இவற்றுக்கு விடையும், மேலும் சில ஸ்வாரஸ்ய தகவல்களையும் அடுத்த இடுகையில் தருகிறேன். (பெரிய மெகா சீரியலு!! தொடரும் போட்டிருக்காங்க!! ஆனாலும் படிக்க  நல்லாத்தான் இருக்கு!!) இல்லன்னாவது எழுதி தானே ஆகனும். எப்புடி?

27 ஏப்ரல், 2011

மனதில் விழுந்த சாட்டையடி

சென்ற வாரம் மழையில்லாத ஒரு மாலையில் பிள்ளையை பூங்காவில் விளையாட விட்டு அமர்ந்திருந்தேன். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் சென்று அதிலேயே மூழ்கி படித்துக் கொண்டிருந்துவிட்டு நேரம் முடிந்தவுடன் திரும்பி வந்து விடுவது உண்டு. அன்று கையில் புத்தகம் இல்லை. பேசுவதற்கும் யாரும் தென்படாததால், பார்வை அங்கிருந்த அனைவரின் மேலும் ஓட ஒரு சிறுமியின் செயல்கள் எனை ஈர்த்தது.

ஏறக்குறைய பத்து வயதிருக்கும் அவளுக்கு, தன் உயரம் இருந்த தன் சகோதரனை சுமந்து கொண்டு வந்தாள். கயிற்றில் கட்டப்பட்ட விளையாட்டு தீமின் ஒரு புறத்தில் அமரச் செய்து, ஒவ்வொரு அடியாக எங்கு வைக்க வேண்டும் என சொல்லித்தந்து அவன் தடுமாறி விழப்போன போதெல்லாம் தாங்கிப் பிடித்து, அவன் தயங்கிய போதெல்லாம் முடியும், முடியும் என் ஊக்கம் கொடுத்து, அவன் அதில் மறு முனைக்கு செல்லும் வரை பக்கத்திலேயே இருந்து பின் மறுபடியும் சுமந்து சென்றாள். ஒரு கனம் கூட அவள் முகம் சுளிக்கவில்லை. அவன் மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அந்தக் காட்சியை பார்த்ததும் என்னுள் என்னவோ மாற்றம்.

அந்த சிறுமிக்கு இந்த சிறிய வயதில் எவ்வளவு பொறுமை, மன முதிர்ச்சி, பாசம், அந்தக் கண்களில் தெரிந்த தாய்மை உணர்வு எல்லாம் சேர்நது என் மனதில் ஒரு சாட்டையடி விழுந்தது போலிருந்தது.

எவ்வளவு பெரிய பொக்கிஷமான வாழ்க்கையை ஒன்றுக்கும் பிரயோசனமில்லா விஷயங்களுக்காக வருந்தி வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு மேலிட்டது. சிறுவயதில் தம்பியுடன் சண்டையிட்ட காலங்கள் கண்முன் தோன்றி அதை அதிகப்படுத்தியது. நன்றாகவே படிக்கும் பிள்ளையை, அவன் முயற்சியை பாராட்டாமல் முதல் மதிப்பெண் எடுக்கச்சொல்லி வருத்துவதிலிருந்து அனைத்தும் நினைவுக்கு வந்து கலவரப்படுத்தியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம், யாருக்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று எப்போதும் ஒப்பீடு செய்யும் மனதை சாட்டையடி வாங்கிய மனம் கேள்வி கேட்டது.

இனிமேல் பிள்ளைகளை அடிக்கவே கூடாது எனும் தீர்மானம் மனதில் நிறைவேறியது. இனியாவது இதை விடாமல் பின்பற்றுவேன் என்று நினைக்கிறேன்.

25 ஏப்ரல், 2011

மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...

என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு உபயோகப்பட்டேன்..
அன்று முழுதும்
இன்பமாகவே இருந்தாய்...
என்னுடன் நீ மிகவும் அழகாக
இருப்பதாக எல்லோரும்
சொன்னார்கள்...
உன் முகத்தில் புன்னகை...
இரவுக்கு முன் நிழலில்
எனை உலர்த்தினாய்...
உன் வியர்வை என்னிலிருந்து
விடுபட்டுப்போக...
உலர்ந்தேன்...காய்ந்தேன்...
சற்று நேரத்தில் சூடு வாங்கி
பின் காத்திருக்கப்போகிறேன்...
அடுத்த அரை நூற்றாண்டில்
அதிக பட்சம் ஒரு முறை
உன் கண்கள் என் மீது
மறுபடியும் விழும்
என்ற நம்பிக்கையுடன்
நீ ஆசையாய்
எனை எடுத்து
மீண்டும் அழுக்காக்க...
என் போன்ற இன்னும் ஐந்தாறு
பட்டுப் புடவைகளுடன்...
உன் வீட்டு அலமாரியின்
ஆரவாரமில்லா மூலையில்
அலங்காரமாய்த் தொங்கியபடி
தங்கக்கரையுடன்
சிவப்பு நிறத்தில் நான்...

12 ஏப்ரல், 2011

அன்புடன் விஜயகாந்த்!

விஜயகாந்தின் அறிக்கைகளையும், நடவடிக்கைகளையும் கூட்டமா சேர்ந்து கும்மியடிச்சிகிட்டு இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பா? என நீங்கள் யோசிப்பது தெரிகிறது. அரசியல் விஷயங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க. அதெல்லாம் பெரியவங்க விஷயம்.
நான் எழுத நினைத்தது பிரபல தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் போல் நடித்து பேர் வாங்கி அசத்தி, கலக்கி சென்ற பலகுரல் மன்னர்களையும், காமெடி தீம் வின்னர்களையும் பற்றி. தொடர்ந்து சிரிப்பு நிகழ்ச்சிகளை பார்க்கிறவர்களுக்கு தெரிந்திருக்கும், எந்த தலைப்பா இருந்தாலும் அதில் விஜயகாந்த் பேசுவது போல் ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது கட்டாயமோ என்னவோ. அது இல்லாமல் போனால் நிகழ்ச்சியே ருசியில்லாமல் இருப்பது போல் பார்ப்பவருக்கும் பிரம்மை தோன்றும் அளவுக்கு விஜயகாந்தை ஆக்கிவிட்டனர். அடேயப்பா ஓட்டுவதற்கு தான் எத்தனை பேர் எத்தனை விதமான யோசனைகள். எல்லாம் சிரிக்க வைக்க.
இதே சிரிப்பு  நிகழ்ச்சிகளை யாரையும் புண்படுத்தாமல் செய்யவே முடியாதா என நிறைய யோசித்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
அதே நிகழ்ச்சியில் ஒருவர் விஜயகாந்த் போல் வேடமிட்டு வந்து நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?  நானில்லாம ஒரு தீம் பண்ணமுடியுமா உங்களால? என் பேர் இல்லாம ஒரு காமெடி சீக்வன்ஸ் சொல்லுங்க பார்ப்போம் என்கிறார். அதற்கும் சிரிக்கிறோம்.
இப்போது கதையே வேறு. வழக்கமாக  நகைச்சுவை நிகழ்ச்சிகளை தவறாமல் பார்க்கும்  நண்பர் ஒருவர் இப்போது பார்ப்பதேயில்லையாம். ஏனென்று கேட்டதற்கு, அதுக்கு தான் அரசியல் செய்திகள் இருக்கே, அதை விட இந்த காமெடி சுவாரஸ்யமா இருக்கு என்கிறார். ரொம்ப வருத்தமாக இருக்கிறது.


பின் குறிப்பு:
நான் விஜயகாந்த் கட்சி அல்ல.

11 ஏப்ரல், 2011

என் வழி தனீ... வழி!

மளிகையும், காய்கறியும் ஸ்டாக் தீர்ந்து விட்டதால், அந்த வாரயிறுதி  நாள் குடும்பத்துடன் முஸ்தஃபா போகலாம் என முடிவாயிற்று. சிங்கப்பூரிலேயே பெரிய இந்திய ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ். உள்ளே சென்றால் வெளியே வருவதற்குள் நடந்தே சோர்ந்து விடுவோமென்றாலும் அத்தனை பொருட்களையும் ஒரே கடையில் வாங்கலாம் என்பதால் வேறு எங்கும் செல்ல பிடிப்பதில்லை. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கு போய் கோபப்படாமல் வருவது என்பது பெரிய விஷயம் தான். அங்கும் இங்கும் ஓடி கண்மறைய, போய் விளையாடி அவ்வப்போது பயமுறுத்தும் பிள்ளைகளை அடிக்காமல் திட்டாமல் அரவணைக்க இன்னும் முயற்சிக்கிறேன். 
அன்றும் என் சின்ன மகன் ஒரு ஷாக் கொடுத்தான். நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லாததால் ஷாக்கின் வாட்ஸ் மிதம். பக்கத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தவன் திடீரென்று காணவில்லை. கூப்பிட்ட குரலுக்கு பதிலில்லை என்றதும் பதறி தேட ஆரம்பிக்க மூன்று நிமிடங்களுக்கு பிறகு சாவகாசமாக ஏன் கத்துற என்ற பார்வையுடன் பெரிய மனிதனாட்டம் வந்து நின்ற அழகு இருக்கிறதே, எனக்கு அப்பாடா என்றிருந்தது. பட்ட டென்ஷனுக்கு "எங்கடா போய்ட்ட, கூப்பிட்டா ஏன்னு கேக்கமாட்டே, எங்கயாவது போய்ட்டா எப்படி வழி கண்டுபிடிச்சு இங்க வருவ?" என நான் படபடக்க,
 கொஞ்சமும் பதட்டமில்லாமல் அவன் சொல்லியது என்னை அதிசயிக்க வைத்தது அது "என் வழி தனீ வழி". பார்ப்பதெல்லாம் பே ப்லேடும், ஜெரோனிமோவும் என்றாலும், இந்த தமிழ் திரைப்பட வசனங்கள் எங்கிருந்து கற்கிறான் என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது. நர்சரி பள்ளியில் பயிலும் குழந்தை, எப்போதோ பார்த்த வசனங்களை நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியம் தான்.

1 ஏப்ரல், 2011

மனசரோவரில் விடிந்த இன்றைய பொழுது




மிகுந்த களைப்பில்
தூங்கியிருந்தேன் நேற்றிரவு
மூடியிருந்த கண்களின் மேல்
மெல்லிய வெளிச்சம்
விடிந்து விட்டதா யோசனையுடன்

கண்களை திறக்க
யத்தனித்த வினாடி
முகத்தின் மேல் சிலு சிலு காற்று
சுற்றிலும் பனிபடர்ந்த குளுமை
விழித்து பார்த்தால்
சுற்றிலும் வெள்ளி நிறத்தில்
பனி மலைகள்
கிழக்கில் எட்டிப்பார்க்கும்
கதிரவன்
எழுந்து நடந்தேன்
பக்கத்தில் தெள்ளிய சுத்தமான
தண்ணீர் அல்ல ஏரி
எவ்வளவு சுத்தம் இந்த தண்ணீர்
இது எந்த இடம்
சிந்திக்கவேயில்லை மனம்
எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை
கொஞ்சமும் சந்தேகமில்லாமல்
அந்த இடத்தின் புதுமையை
முழுதாக அள்ளிப்பருகிய வேளை
பறவைகளின் சத்தம்
ரம்மியமாக காதின் ஓரம்
இந்த இடத்தில்
பறவைகளின் சத்தம்
எப்படி?
இமய மலையில்
கைலாசத்திற்கு அருகிலிருக்கும்
மனசரோவர் ஏரியல்லவா இது.
மறுபடியும் கண்விழிக்க
வெப்ப மிகுதியால் காலையில்
ஆன் செய்த ஏஸி
முகத்தில் சிலு சிலுக்க
நேற்றிரவு வைத்த அலார்ம்
பறவைகள் ஓலியுடன்
காதில் விழ
சற்று முன் கண்டது கனவு என்று
நம்ப முடியாத பிரம்மிப்பில்
இன்னும் நான்.